Published:Updated:

``மீனவர்கள் மீனில்லாத சாப்பாடு சாப்பிடுவது இப்போதுதான்...” - வடசென்னையிலிருந்து ஒரு குரல்!

பாக்கியம் சங்கர்
பாக்கியம் சங்கர்

கொரோனா அதிகம் பாதித்த வடசென்னை பகுதியில் 'வடசென்னை மக்கள் உதவிக்குழு'வில் இயங்கிக்கொண்டிருந்த எழுத்தாளர் பாக்கியம் சங்கரிடம் பேசினோம்.

அதிகாலையில் விசில் சப்தம் எழுப்பியோ, சைக்கிள் தகரத்தைத் தட்டியோ நமது குப்பைகளைச் சேகரித்துச் செல்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். உயிருக்கான உத்தரவாதமின்றி மலக்குழிக்குள் மூச்சடக்குகிறார்கள். குப்பை வண்டி இழுத்து இழுத்து 'கருப்பை' ஆபரேஷன் செய்து நோகுகிறார்கள். பிணவறையில் நோய் தொற்றுக்களுக்கு அஞ்சாது செவ்வனே பணிசெய்கிறார்கள் பிணவறை ஊழியர்கள். மாநகரத்தின் எவ்வித சுவடுகளுமின்றி, சக மனிதனின் உதாசீனங்களை மீறி நகரின் தூய்மைக்காக, மக்களின் சுகாதாரத்திற்காக உழைக்கும் இந்த உழைப்பாளர்களின் வாழ்க்கைப்பாடுகளை, கொண்டாட்டத்தை ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த 'நான்காம் சுவரில்' பதிவு செய்திருந்தார் எழுத்தாளர் பாக்கியம் சங்கர். கொரோனா அதிகம் பாதித்த வடசென்னை பகுதியில் 'வடசென்னை மக்கள் உதவிக்குழு'வில் இயங்கிக்கொண்டிருந்தவரிடம் தற்போதைய சூழல் குறித்து உரையாடினோம்.

பத்துக்குப் பத்து அறையில் தீப்பெட்டிக்குள் இருப்பது போன்ற வசிப்பிடம் எம்மக்களில் பெரும்பான்மையினருடையது. இங்கு எப்படி தனிமைப்படுத்தல் சாத்தியம்?
பாக்கியம் சங்கர்

எப்படி இருக்கிறது கொரோனா கால வடசென்னை?

" ஆரம்பத்தில் வடசென்னையில் கொரோனா தொற்று இல்லை. தற்போது பெரும்பான்மையானோருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடிய சூழல் இங்கு இல்லை என்பது மற்றொரு தகவல். 'குடுத்தன வாசல்' வாழ்க்கைதான் இங்கு அதிகம். பத்துக்குப் பத்து அறையில் தீப்பெட்டிக்குள் இருப்பது போன்ற வசிப்பிடம் எம்மக்களில் பெரும்பான்மையினருடையது. அன்றாடங்காய்ச்சிகள் எனச் சொல்லப்படும் தினக்கூலிகள் வசிப்பிடம் இது. ஏழு குடுத்தனவாசிகளுக்கு ஒரு கழிப்பிடம் என்ற சூழலில் வாழ்பவர்கள். இங்கு எப்படி தனிமைப்படுத்தல் சாத்தியம். சமையலறை, குளியலறை எனத் தனித்தனி அறைகள் அற்றவர்கள். இங்கு தனிமைப்பட்டுக்கொள்வதன் சாத்தியம் மிகக்குறைவு என்பதே நிதர்சனம்."

"கொரோனாவால் ஏற்பட்ட முழு அடைப்பால் தினக்கூலிகள் என்ன மாதிரி பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்?"

"இந்தக் காலகட்டத்தில் மட்டுமல்ல... இதற்கு முன்பும் இவர்கள் சிரமத்தில்தான் வாழ்ந்தார்கள். இனிவரும் காலங்களிலும் அவர்கள் வாழ்க்கைபாடு சிரமம்தான். வாரத்தில் நான்கு நாள்கள் வேலை கிடப்பதே சிரமமாகத்தான் இருந்தது. பெயின்டர்கள், பிளம்பர்கள், வெல்டிங் வேலைக்குச் செல்பவர்கள் வேலையில் எந்த நிச்சயத்தன்மையும் அவர்களுக்கு இல்லை. கிடைத்த நாள்களில் வேலைசெய்து வரும் வருமானத்தை வைத்துதான் மற்ற நாள்களையும் நகர்த்துகிறார்கள். அந்த வருமானத்துக்குள்தான் சாப்பாடு, மருத்துவம், குழந்தைகளின் மருத்துவச் செலவு என சகலமும். கடந்த 50 நாள்கள் அவர்களால் வேலைக்குச் செல்லமுடியவில்லை. வட சென்னை மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எளிய மக்களின் நிலை என்பது இதுவாகத்தான் இருக்கிறது. அரசு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது."

கொரோனா கண்காணிப்புப் பகுதி
கொரோனா கண்காணிப்புப் பகுதி

"தொடக்கத்திலிருந்தே நீங்கள் களத்தில் நிற்கிறீர்கள். என்ன மாதிரியான பணிகள் நடக்கின்றன?"

"வட சென்னை மக்கள் உதவிக்குழு என்ற பெயரில் 500, 600 மக்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான பொருள்களை வழங்கினோம். இது உதவி அல்ல... ஒருவிதப் பகிர்தல்தான். நமக்காக உழைத்தவர்களுக்கு நாம் செய்யும் சிறு கைமாறுதான். உழைத்துப் பழகிய இந்த மக்கள் யாரிடமும் உதவி எனக் கேட்கத் தயங்குவார்கள். தொடர்ச்சியாக தொற்று பரவிக்கொண்டே செல்கிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. மக்களின் பசியும், தேவையும் தொற்றைவிட மோசமாக அவர்களை அச்சுறுத்துகிறது. இன்னும் ஏதேனும் செய்ய வேண்டும்.”

வீட்டின் வறுமை குழந்தைகளையும் பாதிக்கிறது. பள்ளிகள் திறந்தவுடன் பள்ளிக் கட்டணம் செலுத்துவது ஒரு மிகப்பெரிய சுமையாக பெற்றோர்களுக்கு இருக்கும்.
பாக்கியம் சங்கர்

" விளையாட்டும், கொண்டாட்டமுமாகக் கழிந்த சிறுவர்கள், குழந்தைகளை ஊரடங்கு எப்படி பாதிக்கிறது"

" மண்ணோடு விளையாடி கொண்டாடித் திரிந்தவர்கள் எங்கள் குழந்தைகள். வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களுக்கு இது விடுமுறை காலகட்டம் என்பதே மறந்துபோகிறது. பள்ளிகள் திறப்புக்காகக் காத்திருக்கிறார்கள். வீட்டின் வறுமை குழந்தைகளையும் பாதிக்கிறது. பள்ளிகள் திறந்தவுடன் பள்ளிக்கட்டணம் செலுத்துவது ஒரு மிகப்பெரிய சுமையாக பெற்றோர்களுக்கு இருக்கும். சுய உதவிக்குழுக்கள், அக்கம் பக்கத்தினர் எனக் கடன் வாங்கியாவது கல்விக் கட்டணத்தைச் செலுத்துவார்கள். இப்போதைய சூழல் அது எதற்கும் வழிசெய்யாது. குழந்தைகளுக்கு இந்தக் காலகட்டத்தின் தாக்கம் காலம் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இன்னல்களைக் கொடுக்கும்."

”மீனவ நண்பர்கள் பலரும் விவரம் தெரிந்து தற்போதுதான் பலநாள்களாக மீனில்லாத சாப்பாடு சாப்பிடுவதாகச் சொன்னார்கள்.”
கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

"உங்களுக்கு மீனவ நண்பர்கள் அதிகம். கடலுக்குச் செல்லாத அவர்களின் பொழுது எப்படி இருக்கிறது?”

"மீன்பிடித் தடைக்காலம் என்பது 40 நாள்கள் எப்போதும் உண்டு. அந்தக் காலத்திலும் 50 நாட்டிகலுக்குச் சென்று மீன் பிடிப்பார்கள். மீனவர்களின் அமைப்புகளில் தரப்படும் சொற்பப் பணம் அவர்களுக்குப் பெரும் பயனளிக்காது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே தொழில் மீன்பிடிப்பதுதான். மீனவ நண்பர்கள் பலரும் விவரம் தெரிந்து தற்போதுதான் பலநாள்களாக மீனில்லாத சாப்பாடு சாப்பிடுவதாகச் சொன்னார்கள். "

"கொரோனா ஊரடங்கு காலம் உங்களுக்கு எப்படிக் கழிகிறது?"

"சினிமா வேலைகள், எழுத்துப் பணிகள் என எப்போதும் வெளியில் சுற்றிக்கொண்டே இருப்பவன் நான். தற்போது வீட்டிற்குள்ளே இருக்கும்போது அதிகம் வீட்டுப் பெண்களைப் பற்றிதான் யோசிக்கத் தோன்றுகிறது. 'வீட்டிற்குள் ஒரு சமையலறை' என எப்போதும் அவர்கள் வாழ்க்கை வீட்டிற்குள்ளாகவே முடங்கிவிடுகிறது. வாழ்க்கை முழுக்கத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் நம் பெண்கள் தானோ எனத் தோன்றுகிறது. சின்னச் சின்ன வேலைகளை நாம் வீட்டில் இருப்பதால் செய்கிறோம். ஆனால், அதை எப்போதும் தன்னுடயதாகச் செய்யும் நம் வீட்டுப் பெண்கள் குறித்த மரியாதை அதிகரிக்கிறது. தேவைக்காக, ஏதேனும் காரியத்துக்காக தொலைபேசி வழியே பிறரை அழைத்துப் பேசிய நாம் தற்போது 'எப்படி இருக்கிறார்கள்' எனத் தெரிந்துகொள்ள மட்டுமே அழைத்துப் பேசுகிறோம். தம்பு ரொட்டி என்ற தூய்மைப் பணியாளர் அதிகாலை தெருக்களில் வருவார். அவரை தற்போது சிலர் மரியாதையாகப் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். அந்த நிலை தொடர வேண்டும். அவர்களில் பலர் ஒப்பந்தப் பணியாளர்களாக உள்ளனர்.

காலம் காலமாக பிணவறையில் வேலை செய்பவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், முடித் திருத்தம் செய்பவர்கள் பல வருடமாக கிருமித் தொற்றை எதிர்கொண்டு வாழ்கிறார்கள். அந்தப் பாதிப்பில் பலர் இறக்கிறார்கள். அவர்களுக்கான மரியாதையை பொதுமக்கள் தொடர்ந்து அளிக்க வேண்டும்.
பாக்கியம் சங்கர்
பாக்கியம் சங்கர்

பாத பூஜை செய்யவோ, கைதட்டுவதோ மட்டுமின்றி அவர்களுக்கான மரியாதை செலுத்த வேண்டும். அவர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யவேண்டும். காலம் காலமாக பிணவறையில் வேலை செய்பவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், முடித் திருத்தம் செய்பவர்கள் பல வருடமாக கிருமித் தொற்றை எதிர்கொண்டு வாழ்கிறார்கள். அந்தப் பாதிப்பில் பலர் இறக்கிறார்கள். அவர்களுக்கான மரியாதையை பொதுமக்கள் தொடர்ந்து அளிக்க வேண்டும்."

"தற்போதைய திரைப்பணிகள்?

"வசந்தபாலனின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஜெயில்' படத்துக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைந்து எழுதியுள்ளேன். ' 'திருமணம் என்னும் நிக்காஹ்' படத்தின் இயக்குநர் அனீஷின் 'பகைவனுக்கு அருள்வாய்', காலா படத்தின் டிசைனர் வின்சிராஜ் இயக்கவுள்ள படம், கெளதம் வாசுதேவ் மேனனின் உதவியாளர் அருண் இயக்கும் புதிய படம் எனச் சில படங்களுக்கு எழுதியுள்ளேன். ஒரு சிறுகதை தொகுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்"

அடுத்த கட்டுரைக்கு