Published:Updated:

சீர்காழி: விசைப்படகுகள் ஆய்வில் முறைகேடு?! - கொந்தளித்த உரிமையாளர்கள்

விசைப்படகுகள்
விசைப்படகுகள் ( Artist-freed )

`வெறும் 13 படகுகள் மட்டுமே அதிவேக இன்ஜின்கொண்டவை’ என்று ஒருதலைபட்சமாக சான்று அளித்திருக்கிறார்கள் அதிகாரிகள். இதைக் கண்டித்துதான் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம்.

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 350 விசைப்படகுகள், 300 ஃபைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுவருகின்றனர். இங்கு மொத்தமிருக்கும் 350 விசைப்படகுகளில் 80 விசைப்படகுகளில் அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விசைப்படகுகள்
விசைப்படகுகள்
Artist-freed

அதிவேக இன்ஜின்களுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில், சாதாரண விசைப்படகு உரிமையாளர்கள், அதிவேக விசைப்படகுகளைப் பயன்படுத்துவதற்குக் கடந்த ஒரு வருட காலமாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதையடுத்து படகு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில நாள்களாக மீன்வளத்துறை அதிகாரிகள் பழையாறு துறைமுகத்துக்கு வந்து விசைப்படகுகளை ஆய்வு செய்தனர். இதில் 13 விசைப்படகுகளில் மட்டுமே அதிவேக இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருப்பதாகச் சான்றளித்தனர். மற்ற அதிவேக இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும் படகுகளுக்கும் சாதாரண இன்ஜின் பொருத்தப்பட்ட படகுகள் என்று சான்றளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று 250 விசைப்படகுகள் மூலம் மட்டும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். மற்ற 100 விசைப்படகு மீனவர்கள், அதிகாரிகள் ஒருதலைபட்சமாக விசைப்படகுகளை ஆய்வு செய்து சான்றளித்திருப்பதாகக் கூறி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி பழையாறு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள்செழியனிடம் பேசினோம். ``தடைசெய்யப்பட்ட சீன இன்ஜின்கள், 240 குதிரைத்திறனுக்கு மேலிருக்கும் அதிவேக இன்ஜின்கள், சுருக்குமடி வலைகள் இவற்றையெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பது அரசுச் சட்டம். ஆனால், இங்கு சுமார் 80 அதிவேக விசைப்படகுகள் இருக்கின்றன. அதற்காக 300 குதிரைத்திறன் முதல் 600 குதிரைத்தறனுள்ள இன்ஜின்களைப் பயன்படுத்துகிறார்கள். சுருக்குமடி வலைகளையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் வெறும் 13 படகுகள் மட்டுமே அதிவேக இன்ஜின்கொண்டவை என்று ஒருதலைபட்சமாகச் சான்றளித்திருக்கிறார்கள் அதிகாரிகள். இதைக் கண்டித்துதான் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம். மீண்டும் அதிகாரிகள் முறையாக எல்லா விசைப்படகுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

விசைப்படகுகள்
விசைப்படகுகள்
Artist-freed

இது குறித்து நாகை மீன்வளத்தறை இணை இயக்குநர் அமுல் சேவியரிடம் விளக்கம் கேட்டோம், ``இந்தப் பிரச்னை கடந்த ஓராண்டாக இருக்கிறது. `இங்கிருக்கும் அதிகாரிகள் ஆய்வு செய்யக் கூடாது. தலைமையிலிருந்து வந்து ஆய்வு செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்கள். அதன்படியே தலைமைக்கு நான் கடிதம் எழுதி, சென்னையிலிருந்து வந்த பொறியாளர்கள் கடந்த ஐந்து நாள்களாக ஆய்வு செய்து 13 விசைப்படகுளில் மட்டும் அதிவேக இன்ஜின்கள் பயன்படுத்துவதாக அறிக்கை தந்தார்கள். அந்த விசைப்படகுகளைத் தடை செய்திருக்கிறோம்.

மேலும் 35 விசைப்படகு உரிமையாளர்கள் 250 குதிரைத்திறன் கொண்ட புதிய இன்ஜின்களைப் பொருத்தியிருக்கிறார்கள். உள்ளூரில் அவர்களுக்கிடையேயுள்ள பகையைவைத்து, எங்கள் மீது அபாண்டமாகப் பழி சொல்கிறார்கள்" என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு