Published:Updated:

தூத்துக்குடி: கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! - கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு
News
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு

அதிகப்படியான தண்ணீரால் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து கடந்த மூன்று நாள்களாக முடங்கியிருக்கிறது.

கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டியிருக்கும் இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்திலிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து விநாடிக்கு 32,000 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இந்த நீர், தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையான மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டிச் செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் மூன்று மதகுகளும், 18 மணல்வாரி மதகுகளும் தற்போதுவரை திறக்கப்படவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதாவது, காட்டாற்று வெள்ளத்தில் அடித்துவரப்படும் மரங்கள், கட்டைகள், குப்பைகள் ஆகியவை மதகுகளில் சிக்கிவிடும் என்பதால், மணல்வாரி மதகுகளையும் பொதுப்பணித்துறையினர் திறந்துவிடவில்லை. அதேபோல, மருதூர் கீழக்கால், மேலக்கால், வடகால், தென்கால் ஆகிய வாய்க்கால்களையும் திறந்துவிடவில்லை. இவ்வாறு காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் வரும்போது வாய்க்காலைத் திறந்துவிட்டால் மடைகள் உடையும் அபாயம் இருப்பதாகவும் பொதுப்பணித்துறையினர் காரணம் சொல்கிறார்கள்.

மருதூர் தடுப்பணையை தாண்டிச் செல்லும் நீர்
மருதூர் தடுப்பணையை தாண்டிச் செல்லும் நீர்

இந்த வெள்ளத்தால், ஏரல் பழைய தாம்போதி ஆற்றுப் பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடிச் செல்கிறது. இதனால் அந்தப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதிகப்படியான தண்ணீரால் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து, கடந்த மூன்று நாள்களாக முடங்கியிருக்கிறது. இந்த நிலையில், `மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றுப் பகுதிக்குள் யாரும் செல்லக் கூடாது’ என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துவருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில் நீர் அதிகமாகத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இந்த வெள்ளநீர், புன்னக்காயல் வரை செல்லும். எனவே பொதுமக்கள், தாமிரபரணி ஆற்றில் நீராடவோ, விளையாடவோ மாவட்ட நிர்வாகம் சார்பில் தடைவிதிக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேலும் ஆற்றின் கரையோரம் இருப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

``ஒவ்வோர் ஆண்டும் பருவமழையின்போதும், அதிகப்படியான வெள்ளத்தின்போதும், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. குடிநீருக்கும் விவசாயத்துக்கும் தண்ணீரைச் சேமித்துவைக்கும் வகையில் பாசனக் குளங்களை முழுமையாகத் தூர்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர் விவசாயிகள்.