Published:Updated:

ஸ்ரீனிவாசபுரம் கடற்கரையை மூடிய நுரை! - வேதிப்பொருள் அச்சத்தில் மக்கள்

சென்னை ஸ்ரீனிவாசபுரம் கடல் பகுதியிலிருந்து திடீரென நுரை வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஸ்ரீனிவாசபுரம் கடல்
ஸ்ரீனிவாசபுரம் கடல்

சென்னை பட்டினப்பாக்கம் அடுத்துள்ள ஸ்ரீனிவாசபுரம் கடற்கரையில் இன்று காலை முதல் வழக்கத்துக்கு மாறாக நுரை பொங்கி வருகிறது. கடற்கரையை மறைத்தபடி நுரை பரவிக்கிடப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நுரை, காற்றில் பறந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

ஸ்ரீனிவாசபுரம் கடல் நுரை
ஸ்ரீனிவாசபுரம் கடல் நுரை

நுரை வெளியேறுவதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கடலில் கழிவுநீர் போன்ற ஏதோ கலந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அலை கரையில் அடிக்க அடிக்க நுரையின் அளவு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

கடலிலிருந்து அதிகமாக நுரை வருவதாகவும் கடற்கரையில் நிற்கப் பயமாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி நம்மிடம் பேசிய அப்பகுதி பெண் ஒருவர், ``கடலில் ஏதோ கலந்திருக்க வேண்டும். அதனால்தான் நுரை வெளியேறுகிறது. இந்தப் பகுதியில் அடிக்கடி இதேபோன்று நுரை வரும். ஆனால், இன்று அளவுக்கு அதிகமான நுரை வெளியேறுகிறது.

சென்னை ஸ்ரீநிவாசபுரம் பகுதியில் கடல் அலையில் அதிகளவில் நுரை பொங்கி கடற்கரையில் பரவிக் கிடக்கும் காட்சி.. வீடியோ: வி.ஶ்ரீனிவாசுலு

Posted by Vikatan EMagazine on Thursday, November 28, 2019

முன்னதாக இதேபோன்று மெரினா கடற்கரையிலும் நுரை வெளியேறியது. கடலில் ஏதாவது வேதிப் பொருள் கலந்திருக்குமோ என்ற பயத்தில் யாரும் அருகில் செல்லாமல் இருக்கிறோம்” என கூறியுள்ளார். இப்படி இருக்க, திடீரென தங்கள் பகுதியில் அதிக அளவு நுரையைக் கண்டதால் அங்குள்ள சிறுவர்களும், இளைஞர்களும் நுரையில் விளையாடி வருகின்றனர். நுரையை ஆய்வுசெய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. ஒரு கடற்படை ஹெலிகாப்டர் மட்டும் ஸ்ரீனிவாசபுரம் கடற்கரையைக் கண்காணித்து வருவதாகத் கூறப்படுகிறது.