Published:Updated:

`கிட்னி பிரச்னை; என்ன செய்யறதுன்னு தெரியலை!'-பரவை முனியம்மாவை நினைத்துக் கலங்கும் மருமகள்

`ஜெயலலிதா அம்மா கொடுத்த டெபாசிட் பணம் மூலம் வருகிற வட்டி மருந்து மாத்திரை வாங்கவே போதவில்லை. நாங்களும் கஷ்டப்படுகிறோம்''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மைக் இல்லாமலேயே கடைசியில் நிற்கிற நபர் வரைக்கும் கேட்கும் வகையில் எட்டரைக் கட்டையில் பாடக்கூடிய திறமை படைத்தவர் நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா. சிறு வயதிலிருந்தே நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றவர். இன்று பேச்சில்லாமல் வீட்டிலே முடங்கிக் கிடக்கிறார். இந்த வேதனை போதாதென்று சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டு உடல் வாதையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். தொடர் மருத்துவ சிகிச்சைக்கும் வசதியில்லாமல் சிரமப்படுகிறார்.

பரவை முனியம்மா (பழைய படம்)
பரவை முனியம்மா (பழைய படம்)

மதுரை அருகே பரவையில் வசித்துவரும் பரவை முனியம்மா, நீண்டகாலமாக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வந்த நிலையில், அவரின் திறமையை `தூள்' படத்தில் பயன்படுத்திக்கொண்டார் இயக்குநர் தரணி. அப்படத்தில் அவர் பாடிய `சிங்கம் போல நடந்து வரான்...' என்ற பாடல் உலகம் முழுக்கப் பிரபலமாகியது. அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தும் பாடியும் வந்தவர், சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலமில்லாமல் முடங்க ஆரம்பித்தார். அதன்பின் சிவகார்த்திகேயனுடன் `மான் கராத்தே' படத்தில் நடித்தார்.

Vikatan

திரைப்படங்கள், மேடைக் கச்சேரிகள் எனத் தொடர்ந்து பங்குபெற்று வந்தாலும் கறாராகப் பேசி ஊதியம் பெறாத வெள்ளந்தியாகவும் இருந்துள்ளார். இதனால் சேமிப்பு என எதுவும் அவரிடம் இல்லை. இந்தநிலையில், கடந்த 2014-ல் அவரின் கணவர் மரணமடைந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்ததைப் போல மாறிப் போனவருக்கு, உடல்நிலையும் மோசமடைந்தது.

பரவை முனியம்மா
பரவை முனியம்மா

இதனைக் கேள்விப்பட்டு 6 லட்ச ரூபாயை அவர் பெயரில் வைப்பு நிதியாக அளித்தார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. அதன்மூலம் கிடைக்கும் வட்டியை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தி வந்தார். சிவகார்த்திகேயனும் இடையில் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார். தற்போது அவரின் உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. தற்போது சிறுநீரகக் கோளாறு மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுடன் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பரவை முனியம்மாவுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள். அதில் கடைசி மகன் மாற்றுத்திறனாளி என்பதால் அவரையும் முனியம்மாவே கவனித்துவந்தார். தற்போது அவரை உடனிருந்து மகள்கள் மற்றும் மருமகள் கவனித்து வருகிறார்கள்.

பரவை முனியம்மா குடும்பம் (பழைய படம்)
பரவை முனியம்மா குடும்பம் (பழைய படம்)

மருமகள் முத்துலட்சுமியிடம் பேசினோம். ``அவங்க மேடையில பாடியபோதும் பல படங்கள்ல நடிச்சபோதும் பெருசா சம்பாதிக்கல. எதையும் சேர்த்து வைக்கல. 2014-க்குப் பிறகு சினிமா வாய்ப்பும் அமையல. அதனால, எதுக்கும் போகாம வீட்டிலேயே இருந்தபோது அவங்களுக்கு பேச்சுத்துணையா இருந்த மாமா இறந்ததும் சோர்ந்து போயி உடம்பு முடியாமப் போயிருச்சு.

ஆஸ்பத்திரியில காட்டிட்டு வந்த தகவலை தெரிஞ்சுகிட்டு, ஜெயலலிதா அம்மா, பண உதவி செஞ்சாங்க. அப்பவே மதுரையில உள்ள பெரிய தனியார் ஆஸ்பத்திரியில சேர்க்கச் சொன்னாங்க. ஆனா, இவங்கதான் பயந்துகிட்டு வேணாம்னு வழக்கமா பார்க்குற ஆஸ்பத்திரியிலேயே பார்த்துட்டு வந்தோம். வயசு ஆக ஆக நோயின் தாக்கமும் அதிகமாயிடுச்சு. இப்ப கிட்னியில பாதிப்பு ஏற்பட்டிருச்சுன்னு சொல்றாங்க. அது மட்டுமல்லாம அவங்களால எதையும் தெளிவா பேச முடியல. வார்த்தை வர மாட்டேங்குது. நாம் சத்தமா பேசினால் பேசுவதைக் கவனிக்கிறாங்க.

பரவை முனியம்மா
பரவை முனியம்மா

ஆஸ்பத்திரியில் தங்கி வைத்தியம் பார்க்க வேண்டாம்னு சொல்றார். அதனால ஆஸ்பத்திரியில போயி காட்டிட்டு வீட்டுலயே வச்சு கவனிச்சுட்டு வரோம். ஜெயலலிதா அம்மா கொடுத்த டெபாசிட் பணம் மூலம் வருகிற வட்டி மருந்து மாத்திரை வாங்கப் போதல.... நாங்களும் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கோம். அந்தக் கஷ்டத்தோடுதான் அவங்கள கவனிச்சிட்டு இருக்கோம். அடுத்து என்ன செய்றதுன்னு தெரியலை" என்றார் கண்ணீருடன்.

`` ஏற்கெனவே தமிழக அரசின் உதவி கிடைத்துவிட்ட நிலையில், நோயால் முடங்கிக் கிடக்கும் நாட்டுப்புற கானப்பறவையான பரவை முனியம்மாவை நோயின் வலியிலிருந்து மீட்க திரையுலகினர்தான் உதவி செய்ய முன்வர வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கின்றனர் நாட்டுப்புற கலைஞர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு