Published:Updated:

``மத்தவங்க புறக்கணிச்சப்போ கல்விதான் நம்பிக்கை கொடுத்துச்சு!" - திருநங்கை நாட்டுப்புறக் கலைஞர் வர்ஷா

வர்ஷா
வர்ஷா

வர்ஷா, நாட்டுப்புறவியல் முதுகலை பட்டதாரி. நாட்டுப்புறக்கலைகளில் பல பரிசுகள் பெற்றிருக்கும் வர்ஷா தன் சொந்த கிராமத்திலேயே நாட்டுப்புறக் கலைகளை திருநங்கைகளுக்குப் பயிற்றுவித்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``எனக்கு சொந்த ஊரு விராலிமலை பக்கத்துல இருக்குற விராலூர் கிராமம். அஞ்சாவது படிக்கும்போதே எனக்குள்ள பெண்மையை உணர ஆரம்பிச்சேன். கூட படிச்ச பொண்ணுங்ககூட நேரம் செலவிடுறது பிடிக்கும், ஆண்களைப் பார்த்தா ஒருவித பயமும் பதற்றமும் தொத்திக்கும்'' எனத் தன் பள்ளிப்பருவத்தை அசைபோடும்போது ஆழகான புன்னகை வெளிப்படுகிறது வர்ஷாவிடம். நாட்டுப்புறவியல் முதுகலை பட்டதாரியான வர்ஷா, நாட்டுப்புறக் கலைகளில் நிறைய பரிசுகள் பெற்றிருக்கிறார், சாதனைகள் படைத்திருக்கிறார். தன் சொந்த கிராமத்திலேயே திருநங்கைகளுக்கு இலவசமாக நாட்டுப்புறக் கலைகளைப் பயிற்றுவித்து வருகிறார். அவர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைத்து திருவிழாக்கள் உள்ளிட்ட விசேஷங்களில் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

வர்ஷா
வர்ஷா
``சாதிக்கணும்ன்ற எண்ணம் மட்டும்தான் மனசுல இருந்துச்சு!" - தமிழகத்தின் 2-வது திருநங்கை எஸ்.ஐ சிவன்யா

எப்படி இருந்தது வர்ஷாவின் பள்ளிக்காலம்?

``அந்தக் காலகட்டத்துல, ஊருக்குள்ள தண்ணி பிடிக்கப் போனாகூட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசுவாங்க. வீட்டுலயும் சொல்ல முடியாது. சொன்னா, அவங்களும், `நீ ஏன் இப்படி இருக்க...'னு என்னைத்தான் திட்டுவாங்க. இந்தப் புறக்கணிப்பு, அழுத்தங்களை எல்லாம் மீறி, நான் நானா இருக்கத் தொடங்கினதுக்குக் காரணம் என் கல்விதான்.

பள்ளி, கல்லூரிக் காலத்துல நான் அதிகம் சிரமத்துக்குள்ளானது, கழிவறையைத் தேர்ந்தெடுக்கும்போதுதான். பசங்க எல்லாம் போயிட்டு வந்த பிறகு, காத்திருந்து கழிப்பறைக்குப் போவேன். அதனால சிறுநீரை அடக்கிவெச்சுக்கிட்டே இருந்ததால உடல் உபாதைகளை நிறையவே சந்திச்சேன். இதை எல்லாம் மீறிதான் என்னோட இளங்கலை படிப்பை திருச்சி நேஷனல் கல்லூரியில முடிச்சேன்.''

முதுகலையில நாட்டுப்புறவியல் மீதான ஈடுபாடு எப்படி..?

``இளங்கலையில் என்ன படிக்கணும்னு எந்த முடிவும் தெளிவும் இல்லாமதான் நான் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். நல்ல நண்பர்கள், நல்ல ஆசிரியர்கள்னு அமைந்ததால கல்லூரிப் படிப்பு நல்லபடியா முடிஞ்சது. மேற்கொண்டு என்ன படிக்கலாம்னு தேடினப்போதான், எனக்குள்ள இருந்த கலை ஆர்வத்துக்கு ஏற்ப படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்னு தோணுச்சு. சின்ன வயசுல இருந்தே வீட்டுக்குத் தெரியாம நடனம் ஆடி பார்ப்பேன். அதையே படிக்கலாம்னு முடிவு பண்ணி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல விண்ணப்பிச்சேன். திருநங்கை மாணவரா போய் நின்ன என்னைப் பார்த்தப்போ, பேராசிரியர் தர்மராஜ் ரொம்பவே சந்தோஷப்பட்டார். `நிறைய திருநங்கைகள் கல்வியைப் பற்றிக்கொள்ளணும்னு விரும்புறேன்'னு சொன்னார். கல்லூரிக் காலம், இன்னும் விரிவான பார்வையோட இந்தச் சமூகத்தை நோக்கி நகர ஒரு நம்பிக்கை கொடுத்துச்சு.''

வர்ஷா
வர்ஷா

வீட்டுல சூழல் எப்படி இருந்தது?

``எல்லா திருநங்கைகளும் சந்திக்கிற பிரச்னை போலத்தான் எனக்கும் இருந்துச்சு. நிறைய கேலி, கிண்டல்கள். அது வீட்டுக்குப் பிடிக்கல. வீட்ட விட்டு வெளியேறி ஆபரேஷன் பண்ணிகிட்டேன். படிக்கணும்கிற வெறி மட்டும் மாறல. அதுக்கப்புறம் என் தம்பி துரைராஜ்தான், வீட்டுல எனக்காகப் பேசினான். இப்போ வரை வீட்டுலதான் இருக்கேன். அப்பா விபத்துல இறந்துட்டாங்க. அம்மா, நான், தம்பின்னு இருக்கோம்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வர்ஷாவுக்கு காதல், காதல் அனுபவம்..?

``கண்டிப்பா (வெட்கத்துடன்). அவங்க பெயர் சொல்ல விரும்பல. ஆனா, பள்ளிக்கூடத்துல நடக்குற விளையாட்டுப் போட்டியில எல்லாம் ஜெயிச்சுடுவாங்க. அப்படி ஒருநாள் ஜெயிச்சு முடிச்சு கப்போட வந்தப்போ, `ஐ லவ் யூ'ன்னு போய் நின்னேன். பளார்னு ஒரு அறை, பையனும் பையனும் என்ன லவ் வேண்டி இருக்கு'னு சொல்லிட்டாங்க. எனக்குள்ள இருக்குற பெண்மையை அவங்க புரிஞ்சுக்கலையேனு ரொம்ப வருத்தம். ஒருதலைக் காதலாவே போயிடுச்சு. இப்போகூட சமீபத்துல பார்த்தேன். ஒரு சின்ன புன்னகையோட கடந்துவந்துட்டேன்.''

திருநங்கைகளுக்கான உரிமை, அங்கீகாரமெல்லாம் உங்களுக்குக் கிடைக்குதா..?

``திருநங்கைகளுக்குச் சரியான அங்கீகாரம் கிடைச்சா, அவங்க திறமைக்கு ஏற்ற மாதிரி வேலைவாய்ப்புகள் அமைஞ்சா எல்லாமே மாறும்னு நம்புறேன். அதுக்கு இன்னும் நிறைய பயணப்படணும் போல.''

வர்ஷா
வர்ஷா
முதல்முறையாக திருநம்பிகளுக்கு பால்மாற்று அறுவை சிகிச்சை; மதுரை அரசு மருத்துவமனையில் புது முயற்சி!

அடுத்து?

``கல்விதான் ஆயுதம், கல்விதான் விடுதலைக்கான வழின்னு நான் பட்டதாரியான பிறகுதான் உணர்ந்தேன். பல ஊர்களுக்கும் போகும்போது, திருநங்கைகள் மீதான மக்களின் பார்வை ரொம்ப கோபமும் ஏமாற்றமும் தரும். பேராசிரியர் ஆகணும் என்பதுதான் என் லட்சியம். அதை நோக்கிதான் என் பயணம். ஆனா, அந்த சுயநல எண்ணம் மட்டுமே என்னை இயக்கல. திருநங்கைகளுக்கு நாட்டுப்புறக் கலைகளைக் கத்துக்கொடுக்கணும், யாரோட தயவும் இல்லாம சுயமா அவங்க நிக்கணும்னுதான் இப்போ இயங்கிட்டு இருக்கேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு