Published:Updated:

`கொடுத்த அட்வான்ஸைத் திருப்பிக் கேட்குறாங்க!' - நின்றுபோன திருவிழாக்களால் கலங்கும் கணியான் கலைஞர்கள்

கணியான் கலைஞர்க
ள்
கணியான் கலைஞர்க ள்

ஊரடங்கால் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதால் தென் மாவட்டங்களில் பரவலான சிறுதெய்வ வழிபாடுகளில் நடக்கும் கணியான்கூத்துக் கலைஞர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கலங்குகிறார்கள்.

தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் நடக்கும் சிறுதெய்வ வழிபாடு மற்றும் கோயில் கொடைத் திருவிழாக்களில் கணியான்கூத்து நடத்தப்படுகிறது. நாட்டார் கலைக்கே உரிய மண்ணின் பாவனைகள், பாடல், நகைச்சுவை, வர்ணனை ஆகியவை அடங்கியதுதான் கணியான் கூத்து. ராஜமேளம், உருமி, வில்லுப்பாட்டு ஆகியவை இல்லாவிட்டாலும்கூட ஒரு கோயில் கொடை விழா நடந்துவிடும். ஆனால், கிராமத்து தேவதைகள், சிறுதெய்வங்களின் வழிபாடுகள், கணியான் கூத்து இல்லாமல் நடக்காது என்பதுதான் இந்தக் கலையின் சிறப்பு.

கணியான் கூத்து
கணியான் கூத்து

கணியான்குழுவில் ’அண்ணாவி’ எனப்படும் பாடல்பாடுபவர், பக்கப்பாட்டு பாடுபவர், பாட்டுக்கேற்றாற் போல மகுடம் வாசிக்கும் இரண்டு மகுடக்காரர்கள். பெண் வேடமணிந்து ஆடும் இருவர், சிங்கித்தாளம் இசைக்க ஒருவர் என ஏழு பேர் இருப்பார்கள். அண்ணாவி பாடும் பாட்டில் வரிகளை உச்சப்படுத்திப் பாடும்போது மகுடக்காரர்கள் வேகமாகவும், பாடலை விளக்கிப் பாடும் போது மெதுவாகவும் மகுடத்தை இசைப்பார்கள்.

மகுட தாளத்துக்கேற்ப அண்ணாவியின் பாடல் உச்சத்திற்கேற்றபடியும் பெண் வேடமிட்டவர்கள் அலுக்கியும் குலுக்கியும் வேகமாகவும் மெதுவாகவும் நளினத்துடன் துள்ளியும் ஓடியும் நடனமாடுவார்கள். கிராமத்து தெய்வங்களான சுடலைமாடன், சிவணைந்த பெருமாள், முனியசாமி, முண்டசாமி, முத்துப்பட்டன், பட்டவராயன், தளமாய் மாடன், கரடி மாடன், பன்றி மாடன், வண்ணார மாடன், சங்கிலி பூதத்தார், கருப்பசாமி, இருளப்பசாமி, பலவேசசாமி, சப்பாணிமாடசாமி, இசக்கியம்மன், பேச்சியம்மன், காளியம்மன், பத்திரகாளியம்மன், உச்சினிமாகாளி, தங்கம்மன், முத்தாரம்மன், முப்பிடாதியம்மன், மாடத்தியம்மன், சந்தனமாரியம்மன் மற்றும் தன் உயிரை நீத்து தெய்வமாக இருக்கும் கிராம தேவதைகள் ஆகிய தெய்வங்களுக்கான பூஜைகளில் கணியான் கூத்து இருக்கும்.

சோகத்தில் கணியான் கூத்துக் கலைஞர்
சோகத்தில் கணியான் கூத்துக் கலைஞர்

அந்தந்த தெய்வங்களின் கதைகள், புகழைப் பாடும் பாடலுக்கான ஆடல்தான் இக்கலையின் சிறப்பு. ஊரடங்கால் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதால் தென் மாவட்டங்களில் பரவலான சிறுதெய்வ வழிபாடுகளில் நடக்கும் கணியான்கூத்துக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கணியான் கூத்துக் கலைஞர்களிடம் பேசினோம், “தென்மாவட்டங்களில் இந்த நான்கு மாவட்டங்களில் நடக்கும் சிறுதெய்வ வழிபாடுகள், கோயில் கொடை விழாக்களில்தான் எங்களோட கணியான் கூத்து நிகழ்ச்சியும் நடக்கும். அம்மன் கோயில்களில் செவ்வாய்கிழமையும் சுடலை, முனியசாமி போன்ற ஆண் தெய்வங்கள் கோயில்களில் வெள்ளிக்கிழமையும் கொடை விழாக்கள் நடக்கும் கொடை பூஜைக்கு முந்தைய நாள் மாலை குடியழைப்பில் இருந்து மதியக் கொடை, சாமக்கொடை, கைவெட்டு, மயான பூஜை, மஞ்சள் நீராட்டு என மூன்று நாள்கள் எங்களோட ஆட்டமும் இருக்கும்.

கணியான் கூத்து
கணியான் கூத்து

கொடை விழாவிற்காக கோயில் கால்நாட்டும் நாளில் இருந்து கொடை முடியும் நாள் வரை என மொத்தம் 8 நாள்களும் காலை, மாலை இரண்டு நேரமும் குளித்துவிட்டு பழம், பச்சரிசி சாதம் மட்டும் சாப்பிட்டு விரதமிருப்போம். நாதஸ்வரக்கலைஞர்கள் சடங்கு, திருமணம், கோயில் கொடைகளுக்கு வாசிப்பார்கள். ஆனால், கணியான் மகுட வாத்தியம், சிறுதெய்வங்களின் கொடை பூஜைக்காக மட்டுமே வாசிக்கக்கூடிய வாத்தியம்.

ஒரு தெய்வத்தை அழைத்து, மகிழ்வித்து, மீண்டும் அனுப்பி வைக்கும் சிறப்பு கணியான் கலைஞனுக்கு மட்டும்தான் உண்டு.
கணியான் கூத்துக் கலைஞர்

ஒரு தெய்வத்தை அழைத்து, மகிழ்வித்து, மீண்டும் அனுப்பி வைக்கும் சிறப்பு கணியான் கலைஞனுக்கு மட்டும்தான் உண்டு. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இக்கலையை நம்பி 2,500 குடும்பங்கள் இருக்கு. பங்குனி, சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, தை ஆகிய 6 மாதம் மட்டுமே தொழில் நடக்கும். இந்த மாதங்களை கோயில் திருவிழா மாதங்கள்னு சொல்லுவோம். இந்த மாதங்களில் ஒருநாள்கூட வீட்டில் தங்க மாட்டோம். தொடர்ச்சியாக கோயில் திருவிழாக்களில் நடப்பதால் தொழிலுக்குப் போயிடுவோம்.

கணியான் கலைஞர்கள்
கணியான் கலைஞர்கள்

தற்போது ஊரடங்கால் அப்படியே வீட்டுலயே முடங்கிக் கிடக்கோம். பெண் வேடத்திற்கான மேக் அப் செட், சலங்கை, மகுடம் ஆகிய தொழிலுக்கான சாமான்களை கையில எடுத்தே ஒன்றரை மாசம் ஆகுது. கோயில் திருவிழாக்களுக்காக ஏற்கெனவே நாங்க வாங்கியிருந்த அட்வான்ஸ் பணத்தையும் திரும்பக் கேட்கிறாங்க. ஊரடங்கு நாள்களில் சாப்பாட்டுக்காக அந்தப் பணத்தைச் செலவழிச்சுட்டதுனால பணத்தை எங்களால திருப்பியும் கொடுக்க முடியல. என்ன செய்யுறதுன்னே தெரியாத நிலைமையில இருக்கோம்” என்கின்றனர் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு