Published:Updated:

`100வது பிறந்தநாள்; வீரர்கள் நேரில் வாழ்த்து!’-ஆரோக்கிய சீக்ரெட் பகிரும் `ஆறுமுகநேரி’ துரைப்பாண்டியன்

துரைப்பாண்டியன்
துரைப்பாண்டியன்

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி துரை பாண்டியன், தனது 100வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவரை கெளரவிக்கும் வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது முன்னோரின் வாக்கு. இன்றைய அவசர உலகத்தில் நம்மில் பெரும்பாலானோர் உடல் ஆரோக்கியத்தை ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை. அதன் விளைவு, நாற்பது வயதிற்குள் ஏதாவது ஒரு நோய்க்குள் நாம் சிக்கிக் கொள்கிறோம். தற்போது கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் அச்சம், ஓரளவிற்கு உடல்நலம் பேணுதல், மருத்துவம், சுகாதாரத்திற்கான முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது. 60வயதைக் கடந்தாலே சாதனையாக நினைக்கும் தற்போதைய நிலையில் தூத்துக்குடியில் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியான துரைப்பாண்டியன்.

கேக் வெட்டும் துரைப்பாண்டியன்
கேக் வெட்டும் துரைப்பாண்டியன்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் இவர். தனது 100-வது பிறந்தநாளை, தனது குடும்பத்தினருடன் கேக் கொண்டாடியுள்ளார். துரைப்பாண்டியனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி பேசினோம். ``எனக்குப் பூர்வீகமே இந்த ஊருதான். எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க. மூத்த மகன் டேவிட், விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டான். இளைய மகன் ஜேக்கப் ஜெபராஜ், ஆசிரியராகப் பணியாற்றுகிறான். நான் பள்ளிக்கூடத்துல படிக்கும் போதே விளையாட்டுல ரொம்ப ஆர்வமா இருப்பேன். பேட்மிட்டன், வாலிபால் ஆகிய விளையாட்டுகள் ரொம்பப் பிடிக்கும்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்‌. ஆரம்பத்தில் ரெண்டு வருசம் பள்ளிக்கூடத்துல ஆசிரியராகத்தான் வேலை பார்த்தேன். விமானப்படையில் 1944-ம் ஆண்டு ஏர் கிராபட்மேனாக பெங்களூருவில் எனது பணியைத் தொடங்கினேன். அடுத்தடுத்த நிலைகளில் உயர்ந்து, 1975-ம் ஆண்டு ஆந்திராவில் வாரன்ட் ஆபீஸராகப் பணியை நிறைவு செய்து ஓய்வு பெற்றேன். ஓய்வுக்குப் பிறகு மாவட்ட ஓய்வுபெற்ற படைவீரர்கள் நல அதிகாரியாக 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.

குடும்பத்தினருடன் துரைப்பாண்டியன்
குடும்பத்தினருடன் துரைப்பாண்டியன்

விமானப்படையில் பணியாற்றிய போதே வாலிபால், பேட்மிட்டன் போட்டிகளுக்கான பயிற்சியாளராகவும் இருந்தேன். என்னுடைய 57-வது வயசுல வாலிபால் போட்டியில பங்கேற்றேன். அப்போ எல்லாரும் என்ன 'பாட்டய்யா, பாட்டய்யா'னு கிண்டலடிச்சாங்க. ஆனா, எங்க டீம்தான் அந்தப் போட்டியில வெற்றி பெற்றோம். இதுநாள் வரையில நான் சிகிரெட் பிடிச்சதோ, மது அருந்தியதோ இல்ல. எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. இதுதான் என்னோட ஆரோக்கியத்துக்கு முதல் காரணம். ரெண்டாவது உடற்பயிற்சி. ஒரு மனுசனுக்கு உடற்பயிற்சி ரொம்ப முக்கியம். குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது அவசியம். ஆனா, நூறில் 90 பேர் உடற்பயிற்சி செய்யுறதே இல்ல.

முடிந்த வரை எளிமையான உடற்பயிற்சிகளை கண்டிப்பா எல்லாருமே செய்யணும். இப்பவும் நான் காலையில 5 மணிக்கெல்லாம் எழுந்துடுவேன். வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போவேன். காலையில 7 மணிக்கு ஒரு டம்ளர் கேப்பைக் கூழ் குடிப்பேன். 8 மணிக்கு பாதாம், எள்ளு, பனங்கற்கண்டு சேர்த்து அரைத்த பாதாம் பால் குடிப்பேன். 9 மணிக்கு இட்லி டிபனுடன், ஒரு முட்டை சேர்த்து சாப்பிடுவேன். 11 மணிக்குக் கருப்பட்டிக் காபி, மதியம் குளைவான சாதம், மாலையில் மீண்டும் ஒரு கருப்பட்டிக் காபி, இரவில் இட்லி டிபன்.

துரைப்பாண்டியன்
துரைப்பாண்டியன்

வாரத்திற்கு ஒருமுறை முருங்கை இலை, மணத்தக்காளி, காசினி கீரை, கரிசலாங்கண்ணி கீரை சேர்த்த கீரைசூப் குடிப்பேன். வாரத்துக்கு இரண்டு தடவ உளுந்தங்களி சாப்பிடுவேன். ரொம்ப விரும்பினா, வாரத்துக்கு ஒரு முறை அசைவம் சாப்பிடுவேன். இதுதான் என்னுடைய உணவுப் பழக்கம். இதில் கருப்பட்டிக்காபி, களி, கீரை சூப்களை ஆரம்பத்துல இருந்தே பின்பற்றிட்டு வர்றேன். எனக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்கும். அதனால, ஓய்வுநேரங்களில் எனக்குப் பிடிச்ச பாடல்களைக் கேட்டு ரசிப்பேன்.

தினமும் டி.வியில செய்திகளை தவறாமப் பார்ப்பேன், அதேபோல பேப்பர் செய்தியும் படிப்பேன். இப்போ கொரோனா வைரஸ், மக்களை அதிகமா பாதிச்சிட்டு இருக்கு. அதன் தாக்குதலிலிருந்து தப்பிக்க அரசு சொன்ன அறிவுரைகளை எல்லாரும் பின்பற்றுங்க" என்றார்.

துரைப்பாண்டியனுக்கு இந்திய விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் பதுரியா சார்பில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படை அதிகாரி கமாண்டர் தீபக் தியகி மற்றும் 3 அதிகாரிகள் நேரில் வந்து பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்தி கெளரவித்தனர்.

டி.வி பார்க்கும் துரைப்பாண்டியன்
டி.வி பார்க்கும் துரைப்பாண்டியன்

அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குநர் லெப்டினல் நாகராஜன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசின் சார்பில் உள்ளூர் அதிகாரிகளும் நேரில் வந்து வாழ்த்தினர். துரைப்பாண்டியன் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு