Published:Updated:

`சுற்றுலாப் பயணிகளை மிரட்டும் கல்லட்டி!' - இரண்டாவது முறையாகத் தடை விதித்த வனத்துறை

கல்லட்டி அருவி
கல்லட்டி அருவி

இந்த அருவியின் அழகில் மயங்கும் சுற்றுலாப் பயணிகள், அதன் அருகில் செல்கின்றனர். அருகில் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை இருந்தும் யாரும் கண்டுகொள்வதில்லை.

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா, ரோஜா பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவை தோட்டக்கலை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பராமரிக்கப்பட்டுவருகின்றன. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர், வழக்கமாகக் கண்டுரசிக்கும் (மேற்கூறப்பட்ட) இடங்களைத் தாண்டி புதிய இடங்களைத் தேடுகின்றனர். சிலரது தவறான வழிகாட்டுதலால் ஆபத்தான பகுதிகளுக்குச் சென்று மாட்டிக்கொள்கின்றனர்.

மீட்புக் குழுவினர்
மீட்புக் குழுவினர்

நீலகிரியில் உள்ள ஆபத்தான பகுதிகளில்தான் கல்லட்டி மலைப்பகுதி உள்ளது. நீலகிரியில் அதிகம் விபத்துகள் ஏற்படும் பகுதியாக கல்லட்டி மலைப்பாதையே உள்ளது. இதேபோல், கல்லட்டி அருவியும் ஆபத்து நிறைந்தது என்பதால், சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

`மதகுகளை அடைத்து 3-வது நாளாக நீடித்த தேடுதல் பணி!' -கல்லட்டி அருவியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்

ஊட்டியிலிருந்து மசினகுடி வழியாக முதுமலை, மைசூர் செல்லும் கல்லட்டி மலைப்பகுதியில் உள்ளது, இந்த அருவி. பாறைச் சரிவில் ஆர்ப்பரித்துக்கொட்டும் அருவியின் அழகில் மயங்கும் சுற்றுலாப் பயணிகள், அதன் அருகில் செல்கின்றனர். அருகில் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை இருந்தும் யாரும் கண்டுகொள்வதில்லை. அங்கு, பாதுகாப்புப் பணிகளுக்கும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை.

அருவியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்கள்
அருவியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்கள்

இதனால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தண்ணீரில் இறங்கும்போது, சேற்றில் சிக்கிக் கொள்கின்றனர். கடந்த வாரம், ஊட்டியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், இந்த அருவியில் தவறிவிழுந்து உயிரிழந்தனர். மூன்று நாள்கள் கழித்தே அவர்களது உடல்களை மீட்க முடிந்தது. அடிக்கடி இந்த நீர்வீழ்ச்சியில் விபத்து ஏற்பட்டுவரும் நிலையில், இங்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் செல்லத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி வனத்துறையினர் கல்லட்டி நீர் வீழ்ச்சிக்குச் செல்ல தடை விதித்துள்ளனர்.

தடைகுறித்து வனத்துறையினர், ``ஆபத்தான இந்த கல்லட்டி சோதனைச் சாவடியிலிருந்து அருவிக்குச் செல்லும் சாலையின் முகப்புப் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு, அங்கு நோ என்ட்ரி பதாகை வைக்கப்பட்டுள்ளது. ஆபத்து நிறைந்த அருவியில் வன விலங்குகள் நடமாட்டமும் உள்ளன. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தடை அறிவிப்பு
தடை அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அருவியில் சிக்கி உயிரிழந்தார். அப்போதே இந்தப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது, இரண்டாவது முறையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு