Published:Updated:

கோவை: `எட்டு மாதங்களில் 16 யானைகள் மரணம்!’ - நச்சுத்தன்மை உணவு காரணமா?

யானை
யானை

கோவை வனப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்புக்கு நச்சுத்தன்மை உடைய உணவுகள் காரணமாக இருக்கலாம் என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகப் பகுதியில், கடந்த வாரம் உடல்நலக்குறைவுடன் ஒரு யானை கண்டறியப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 15 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யானைக்கு, கோவை வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக்குழு சிகிச்சை அளிக்க தொடங்கினார்கள்.

யானை
யானை
அதிகரிக்கும் யானை - மனித எதிர்கொள்ளலுக்கு தீர்வு என்ன? - ஒரு விரிவான அலசல்!

அந்த யானைக்கு தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட குளூக்கோஸ் பாட்டில்கள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டன. ஆனால், யானையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், அந்த யானை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.

இதைத்தொடர்ந்து, யானையின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அந்த யானை மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். யானைக்கு காயம் ஏதுமில்லை என்றும், யானையின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

யானை
யானை

ஆய்வு முடிவில்தான், யானை இறந்ததற்கான காரணத்தை முழுமையாக ஆராய முடியும். தொடர்ந்து நச்சுத்தன்மை உணவு உட்கொள்வதால் யானைகள் உயிரிழப்பதற்கு வாய்ப்புள்ளதாக கருதுகிறோம். விரிவான அறிக்கைக்கு காத்திருக்கிறோம் என்றும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், கோவையில் இந்தாண்டு மட்டும் உயிரிந்த யானைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரு யானை துப்பாக்கியில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. “யானைகள் தொடர்ந்து உயிரிழப்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது. வனப்பகுதியில் அந்நிய தாவரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது.

யானை
யானை

எனவே, காடுகளில் யானைகளுக்கான உணவுகள் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, யானைகளின் இறப்புகளை தடுப்பதற்கு வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு