Published:Updated:

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் யானை பூங்கா; என்ன ஸ்பெஷல்? #SpotVisit

யானை பூங்கா
யானை பூங்கா

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்து வரும் யானை பூங்கா குறித்து நேரடி ரிப்போர்ட்.

வேழம், பெருமா, பூட்கை, களபம், தந்தவனம், ஆம்பல், கயம், அத்தி, தூங்கல், சிந்துரம், போதகம், மதகயம், வாரணம், இபம், மாதங்கம், அரசுவா... இவையெல்லாமே யானைகளை குறிக்கும் பெயர்கள்தாம். சங்க காலத்தில் யானைகளுக்கு இப்படி 60 வகையான பெயர்கள் இருந்துள்ளன. யானைகள் தவிர்க்கவே முடியாத காடுகளின் பேருயிர்.

யானை பெயர்கள்
யானை பெயர்கள்
தந்தம் உள்ள குட்டி யானை, நிறம் மாறும் கழுகு!

யானைகள் ஒரு நாளுக்கு 250 கிலோ உணவுகளை சாப்பிடும். உணவை தேடி கிட்டத்தட்ட 50 கி.மீ தூரம் நடக்கும். அதன் உணவுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளில் மட்டுமே 10 சதவிகிதம் விதைகள் இருக்கும்.

அதாவது, யானைகள் செல்லும் இடம் எல்லாம் விதைகளை விதைத்து கொண்டேதான் செல்லும். இப்படி சங்கக் காலத்தில் தொடங்கி நம் காலம் வரை யானைகள் குறித்து எண்ணற்ற தகவல்கள் இருக்கின்றன. நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களில் யானைகள் மிகவும் முக்கியம். ஆனால், இதையெல்லாம் அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்லப் பொதுவெளியில் எந்தப் பதிவும் இல்லை.

அந்த கவலையை போக்கும் விதமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வேழம் இயலியல் பூங்கா என்ற பெயரில், யானைகள் குறித்த ஓர் விழிப்புணர்வு பூங்காவை வனத்துறை அமைத்து வருகிறது.

மேட்டுப்பாளையம் கோத்திகரி சாலையில் வனத்துறைக்கு சொந்தமாக உள்ள மரக்கிடங்கு பகுதியில்தான் இந்த யானை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டோம். `மாமூத்' என்றழைக்கப்படும் ஆரம்ப காலகட்ட யானையின் பிரமாண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு மைய கட்டடத்துக்குள் சென்றால், திரும்பிய பக்கம் எல்லாம் யானைகள் குறித்த தகவல் கொட்டி கிடக்கிறது.

பண்டைய காலத்தில் யானைகள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன என்பதை குறிக்கும் ஓவியங்கள், யானைகளின் சங்ககால பெயர்கள், யானைகளின் குணாதிசயங்கள், சுற்றுசூழலில் அதன் முக்கியத்துவம், யானைகளின் தற்போதைய பிரச்னை என அனைத்து தகவல்களும் உள்ளன.

மேலும், ஆப்பிரிக்க ஆசிய யானைங்களுக்கு உள்ள வித்தியாசங்கள், யானைகளின் தந்தம், உருவம், உடல் பாகங்கள் குறித்த தகவல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஓவியம், படங்கள் மற்றும் மாதிரிகள் என்று குழந்தைகளுக்கும் எளிதில் புரியும் வகையில் இதை அமைத்து வருகின்றனர்.

மாமூத் யானை
மாமூத் யானை
2 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட `சில்வர் மான்ஸ்ட்ரா' யானை; சிகிச்சையைத் தொடங்கிய வனத்துறை!

இந்த வளாகத்திலேயே பட்டாம்பூச்சி பூங்கா ஒன்றும் அமைக்கப்படும் என்று வனத்துறை கூறியுள்ளனர்.

இந்தாண்டு இறுதிக்குள்ள இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக யானைகளுக்காக அமைக்கப்படும் விழிப்புணர்வு மையம் மற்றும் பூங்கா இதுதான்.

இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வந்த உடன் உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று, யானைகள் குறித்து சரியான புரிதல்களை கற்று கொடுங்கள். யானைகளை பாதுகாப்போம்.

அடுத்த கட்டுரைக்கு