Published:Updated:

`நாட்டு மாடு இனத்தை அழிக்க நினைக்கிறார்கள்!' - மலைமாடு வளர்ப்போர் வேதனை

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

மலைமாடுகளுக்கான மேய்ச்சல் பாஸ் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் செய்வதாக வனத்துறை மீது மலைமாடு வளர்ப்போர் சங்கத்தினர் கூறுகின்றனர்.

மலை மாடுகள்
மலை மாடுகள்

தேனியில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை முற்றுகையிட்ட மலைமாடுகள் வளர்ப்போர், வனத்துறை மீது சரமாரியாக குற்றம்சாட்டினர்.

மாடுகளை விற்றுவிட்டு, எங்களை வேறு வேலைக்குப் போகச் சொல்கிறது வனத்துறை. அப்படிச் சென்றால், நாட்டு மாடுகளின் இனம் முற்றிலும் அழிந்துபோகும்.
விவசாயிகள்

நம்மிடம் பேசிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பாரம்ப ய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கென்னடி, “ஒவ்வொரு முறையும், வனத்துறையிடம் மேய்ச்சல் பாஸ் வாங்குவது பெரும் பிரச்னையாகவே உள்ளது. 1984ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தேனி மாவட்டத்தில் ஒன்றேகால் லட்சம் மலைமாடுகள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 15 ஆயிரம் மலைமாடுகள் மட்டுமே உள்ளன.

இவை எல்லாவற்றிற்கும் காரணம், வனத்துறை எங்களுக்கான போதிய மேய்ச்சல் அனுமதியை வழங்காததுதான். பாரம்பர்யமாக மலைகளுக்குள் மேய்ச்சலுக்குச் செல்லும் மலைமாடுகளை தடுக்கும் நோக்கத்தோடு மாவட்ட வனத்துறை செயல்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நாட்டு மாடு இனத்தை அழிக்க நினைக்கிறார்கள்!” என்றார்.

கென்னடி
கென்னடி
ஜல்லிக்கட்டுக் காளைகள் மலைமாடுகளிலிருந்து தரம் பிரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகிறது. வனத்துறையில் கட்டுப்பாடால், பெரும்பாலான மலைமாடுகள் அடிமாடுகளாக கேரளாவிற்கு விற்கப்படுகிறது. வெகு சிலரே மலைமாடுகள் வளர்க்கிறார்கள். அதன் சாணத்தையும், கோமியத்தையும் வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகள்

மலைமாடுகள் வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் சுரேஷ்குமார் பேசும் போது,``வருடத்திற்கு ஒரு முறை மாடுகளுக்கு மேய்ச்சல் பாஸ் கொடுக்கிறது வனத்துறை. அந்த பாஸை பெற பல்வேறு சிரமங்களைச் சந்திக்கிறோம். அருகில் இருக்கும் பெரியாறு புலிகள் சரணாலயத்தில், அங்குள்ள மலைமாடுகளுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். `பாரம்பர்ய மலைமாடுகளை வனத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மேய்ச்சலுக்காக அனுமதிக்கலாம்' என உச்சநீதிமன்றமே அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால், இங்கே, பாஸ் வாங்குவதற்குள் பெரும்பாடுபட வேண்டியுள்ளது.

மலை மாடுகள்
மலை மாடுகள்

கம்பம் மேற்குப் பகுதியில் பாஸ் கொடுப்பதாகக் கூறினார்கள். அதுவும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. மொத்தத்தில் மாடுகளை விற்றுவிட்டு, எங்களை வேறு வேலைக்குப் போகச் சொல்கிறது வனத்துறை. அப்படி சென்றால், நாட்டுமாடுகளின் இனம் முற்றிலும் அழிந்துபோகும்” என்றார் வேதனையோடு.

சுரேஷ்
சுரேஷ்

இது தொடர்பாக கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறும் போது, ``வனத்துறை அதிகாரிகளிடம் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என்றார்.