ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த ஜீரஹள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட பசுவாபுரம், ரங்கசாமி கோயில், மல்லன்குழி, திகினாரை, இரிபுரம் போன்ற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கருப்பன் என்று பெயரிடப்பட்ட காட்டு யானை ஒன்று, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துவந்தது. ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு இரண்டு விவசாயிகளை மிதித்துக் கொன்றும், அதிக அளவில் விளைநிலங்களை நாசம் செய்தும் விவசாயிகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் அந்த யானையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

ஆனால், மீண்டும் அதே இடத்துக்கு தேடிவந்த கருப்பன் தினந்தோறும் விளைநிலங்களை நாசம் செய்வதாக விவசாயிகளிடமிருந்து புகார்கள் எழுந்தன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, ரேடியோ காலர் பொருத்தி அடர்ந்த வனப்பகுதியில்விட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக பொள்ளாச்சி டாப் சிலிப் பகுதியிலிருந்து கும்கி யானைகளான கலீம், கபில்தேவ், முத்து ஆகிய மூன்று யானைகள் தாளவாடி, ஜீரஹள்ளி வனச்சரகத்துக்குக் கொண்டுவரப்பட்டு கருப்பன் யானையைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
மேலும் `ஆபரேஷன் கருப்பன்' என்ற பெயரில் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்துவதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஆசனூர் கோட்ட துணை இயக்குநர் தேவேந்திரகுமார் மீனாள் தலைமையில் வனச்சரகர்கள் சதீஷ், ராமலிங்கம், தினேஷ் உள்ளிட்ட சுமார் 150 வனப் பாதுகாப்புப் படையினரும், ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து கால்நடை மருத்துவக் குழுவினரும் கடந்த இரு தினங்களாகத் தாளவாடி மலைக்கிராமங்களில் முகாமிட்டு கருப்பன் யானையின் இருப்பிடத்தை தீவிரமாகத் தேடிவந்தனர். யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டால், அது ஆக்ரோஷமாகக் காணப்படும் என்றும், அதனால் மக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்குமாறும் ஏற்கெனவே வனத்துறையினர் மக்களை அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு 10:30 மணியளவில் தாளவாடியிலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள இரிபுரம் கிராமத்தில் மதன் என்பவரின் தோட்டத்தின் இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு கருப்பன் யானை உள்ளே புகுந்தது. தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறை ரோந்துக் குழுவினரையும் அந்த யானை துரத்தியது.

இதையடுத்து, கருப்பனை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினரும், கால்நடை மருத்துவக் குழுவினரும் தயாராகினர். யானை மிகவும் ஆக்ரோஷமாகவும், மூர்க்கமாகவும் இருந்ததால் உடனடியாக நெருங்க முடியவில்லை. அதற்குள் தகவலறிந்த அந்தப் பகுதி விவசாயிகள் டார்ச் லைட் அடித்தும், கூச்சலிட்டும் யானையைத் துரத்த முயன்றிருக்கின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய வனத்துறையினர் தொடர்ந்து யானையைத் தேடும் பணியில் விடிய விடிய ஈடுபட்டிருந்தனர். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வனத்துறையினர் தேடினர். கடும் இருள் சூழ்ந்தும், பனிமூட்டம் அதிகமாகவும் இருந்ததால் யானையின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்வதில் வனத்துறையினருக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதையும் கடந்து அதிகாலை 3 மணியளவில் அங்குள்ள விவசாய நிலத்தில் கருப்பன் நின்று கொண்டிருந்ததை வனத்துறையினர் கண்டனர்.
இதையடுத்து, வன பாதுகாப்புப் படையினரும், கால்நடைத் துறை மருத்துவக் குழுவினரும் அங்கு சென்று மயக்க ஊசி செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தப்பட்டதும் ஆக்ரோஷமாகப் பிளிறியபடி கருப்பன் யானை வனப்பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கியது. தற்போது வனப்பகுதியை நோக்கி இடம் பெயரத் தொடங்கிவிட்டதால் கருப்பனை, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறை பாதுகாப்புப்படையினர் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றனர்.

அநேகமாக இன்று மதியத்துக்குள் கருப்பன் யானையை நெருங்கிவிட முடியும் என்றும், கும்கிகளின் உதவியுடன் ரேடியோ காலர் பொருத்திவிட முடியும் எனவும் நம்புவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் பேசுகையில், ``கருப்பன் யானை இன்னும் மயக்கமடையவில்லை. அதனால் அந்த யானை நடமாட்டம் உள்ள பகுதியில் மக்கள் நடமாட்டத்தைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், தாளவாடி போலீஸார் அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்கக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.