Published:Updated:

`வனச்சரகர்களுக்கும், வனத்துறைக்கும் இவ்விருதை அர்ப்பணிக்கிறேன்!’ - சர்வதேச விருது வென்ற வனச்சரகர்

``டேராடூனிலுள்ள இந்திய வனஉயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அறிவியல் அறிஞர் சிவக்குமார் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு எனக்கு விருது கிடைத்துள்ளது” - சர்வதேச விருது வென்ற வனச்சரகர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வனங்களின் பாதுகாப்பு ஒட்டுமொத்த சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கும் முக்கியமானது. குறிப்பிட்ட சில பறவை இனங்கள் சுற்றிவருவதால் அந்தப் பகுதியையே தூய்மையான பகுதியாக உணர முடியும். அந்த அளவுக்கு இயற்கை நமக்கு பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தருகிறது. இயற்கையின் முக்கியக் கொடையான வனத்தைப் பாதுகாக்க அரசு வனத்துறை அமைத்து செயல்படுகிறது. இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறையில் பணியாற்றும் வனச்சரகர் சதீஷுக்கு சர்வதேச வனச்சரகர் விருது கிடைத்திருக்கிறது. இதனால் சமூக வலைதளங்களில் வனச்சரகர் சதீஷுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

விருதுபெற்ற வனச்சரகர் சதீஷ், ஆய்வுப் பணியில்...
விருதுபெற்ற வனச்சரகர் சதீஷ், ஆய்வுப் பணியில்...

இது குறித்து வனச்சரகர் சதீஷ்குமார் நம்மிடம் பேசினார். ``சுவிட்சர்லாந்தைத் தலைமையிடமாகக்கொண்ட ஐ.யூ.சி.என் என்று சொல்லப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம், இந்த சர்வதேச வனச்சரகர் விருதை வழங்கியுள்ளது. இந்தியாவிலிருந்து இரண்டு நபர்கள் இதைப் பெற்றிருக்கிறோம். உத்தரகாண்ட்டில் ராஜாஜி புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் மகேந்திர கிரியும் இந்த விருதைப் பெற்றிருக்கிறார். தமிழகத்திலிருந்து நான் பெற்றிருக்கிறேன். இது, தமிழக வனத்துறையில் சிறப்பாகப் பணியாற்றிவரும் ஏனைய வனச்சரகர்களுக்கு சிறிய ஊக்கத்தை அளிக்கும் என்று நம்புகிறேன்.

நான் பெற்ற விருதை இந்தியாவில், ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்துவரும் ஒட்டுமொத்த வனச்சரகர்களுக்கும், தமிழக வனத்துறைக்கும் அர்ப்பணிக்கிறேன். என்னைச் சிறப்பாக வழிநடத்திய உயரதிகாரிகளுக்கும், உற்சாகமாக என்னோடு பணியாற்றிய என் குழுவினருக்கும், கடினமான தருணங்களில் எனக்குப் பக்கபலமாக இருந்த என் மனைவி மற்றும் அம்மாவுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்" என்றார்.

தொடர்ந்து, ``ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகேயுள்ள சூசைபுரம்தான் என்னுடைய சொந்த கிராமம். சத்தியமங்கலம் வனப்பகுதியிலிருந்து வந்த எனக்கு வனங்கள் மீது அதீத காதல் உள்ளது. அதனால் என்னுடைய கல்லூரிப் படிப்பை மேட்டுப்பாளையத்திலுள்ள வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படித்து முடித்தேன். 2014-ல் அரசுப் போட்டித் தேர்வில் வெற்றிபெற்று பயிற்சி வனச்சரகராக சத்தியமங்கலம் புலிகள் காப்பாகத்தில் ஐந்து மாதங்கள் பயிற்சி பெற்றேன். தொடர்ந்து தெலங்கானவில் 18 மாதங்கள் பயிற்சியை முடித்தேன். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வனச்சரகத்துக்கு உட்பட்ட மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவில் பணியில் சேர்ந்தேன். கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்ட பல்வேறு கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்கும்விதமான நடவடிக்கைகளை எங்கள் குழு மேற்கொண்டது.

ஆமைக்குஞ்சுகள்
ஆமைக்குஞ்சுகள்

அது தொடர்பாக மூன்று வருடங்களில் கிட்டத்தட்ட 100 குற்றவாளிகள் மேல் 70 வழக்குகளைப் பதிவு செய்தோம். இதனால் குற்றங்கள் கணிசமாகக் குறைந்தன. இதன் காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறு வியாபாரிகள், அவற்றிலிருந்து வெளியே வந்தனர். ராமநாதபுரம் பறவைகள் சரணாலயத்தில் இருக்கும்போது உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளைப் பாதுகாக்கும் வகையில் 40 வழக்குகளைப் பதிவு செய்தேன். 2017, 18, 19-ல் 40,000 சித்தாமை முட்டைகளைப் பாதுகாத்து குஞ்சுபொரிக்கவைத்து, 95% வெற்றிகரமாகக் கடலில் விட்டோம். அந்தப் பணிகள் வெற்றியடைந்தன. வன உயிரின காப்பாளரின் வழிகாட்டுதல்படி கடலிலிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்காக ஸ்கூபா டைவிங் டீமையும் அமைத்தோம். அதில் பலரும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். அதன் மூலம் கடலில் பவளப்பாறைகள், புற்களைக் கடலில் பாதுகாக்கும் பணிகளை எங்கள் குழுவினர் திறம்படச் செய்தோம். பல கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றி மீண்டும் கடலில் விட்டிருக்கிறோம். உயிரிழந்து கரை ஒதுங்கும் பல டன் எடைகொண்ட திமிங்கலம், சுரா உள்ளிட்ட அரியவகை உயிரினங்களின் உடலை கால்நடை மருத்துவர்கள் உதவியோடு உடற்கூறு ஆய்வு செய்து பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்திருக்கிறோம்.

சதீஷ் தன் குழுவினருடன்...
சதீஷ் தன் குழுவினருடன்...

2020-ல் பாக் ஜலசந்தி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் அலையாத்திக் காடுகளை வன உயிரினக் காப்பாளரின் வழிகாட்டுதலின்படி அமைத்திருக்கிறோம். இப்படிப் பல்வேறு பணிகளை குழுவோடு இணைந்து செய்துள்ளேன். இதனால் டேராடூனிலுள்ள இந்திய வனஉயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அறிவியல் அறிஞர் சிவக்குமார் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு எனக்கு விருது கிடைத்துள்ளது. கம்போடியா, மியான்மர், கொலம்பியா , ரசியா, ஜார்ஜியா எனப் பல நாடுகளிலிருந்து எட்டு நபர்களும் இந்தியாவிலிருந்து இரண்டு நபர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். இது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

தமிழக வனத்துறை மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள வனத்துறை அதிகாரிகளும், இயற்கை ஆர்வலர்களும், மக்களும் தங்களின் வாழ்த்துகளை சதீஷுக்குத் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு