Published:Updated:

`ஆல் இன் ஆல் ரஞ்சிதா; ருத்ர கன்னிகள் துணை!' -நித்யானந்தாவின் பிடதி சீக்ரெட்டை விவரிக்கும் முன்னாள் சீடர்

``சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு பணிவிடைகளைச் செய்ய ருத்ர கன்னிகள் உள்ளனர். அவர்களுடன் அவர் எப்போதும் இருப்பார்" என்கிறார் முன்னாள் சீடர் விஜயகுமார் என்கிற பிரேம மயானந்தா.

சீடர்  கையில் நித்யானந்தா டாட்டூ
சீடர் கையில் நித்யானந்தா டாட்டூ

குஜராத் போலீஸாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஆனால், தினமும் வீடியோவில் தோன்றி பக்தர்களுக்கு போதனைகளை வழங்குவதை அவர் நிறுத்தவில்லை. அவர் மீது பாலியல் புகார், கடத்தல் புகார், மோசடிப் புகார் எனப் பட்டியல் நீண்டாலும் வடிவேல் காமெடி வசனங்களை சிரிக்கச் சிரிக்க கூறிவருகிறார்.

நித்யானந்தா குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் அவருடன் 11 ஆண்டுகளாக இருந்த முன்னாள் சீடர் விஜயகுமார் என்கிற பிரேம மயானந்தா.

விஜயகுமார் என்ற பிரேம மயானந்தா
விஜயகுமார் என்ற பிரேம மயானந்தா

``என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர். நான் ஏரோனாட்டிக் படித்துள்ளேன். விஜயகுமார் என்ற என் பெயரை பிரேம மயானந்தா என்று நித்யானந்தா மாற்றினார். பிரேம மயானந்தா என்பதற்கு நித்யானந்தாவின் உள் உணர்வு என்று அர்த்தம். கடந்த 2009-ம் ஆண்டு சேலத்தில் நடந்த நித்யானந்தாவின் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் அவரை முதன் முறையாக சந்தித்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட சில உடல் நலப் பிரச்னைகள் குறித்து சாமியார் நித்யானந்தாவிடம் கூறினேன். உடனே அவர் பிடதி ஆசிரமத்துக்கு வா என்று என்னை அழைத்தார். அங்கு சென்ற எனக்கு சில யோகாசனங்களைக் கற்றுக்கொடுத்தார். அதன்பிறகு அங்கேயே தங்கிவிட்டேன். ஆசிரமத்தில் உள்ளவர்கள் என்னை முழுமையாக நம்பினார்கள். அப்போதெல்லாம் நித்யானந்தா மட்டும்தான் என் உலகம் என்றிருந்தேன்.

நித்யானந்தாவை அவ்வளவு எளிதில் யாரும் சந்திக்க முடியாது. ஒருநாள் என்னை நித்யானந்தா அழைப்பதாகக் கூறினார்கள். அங்கு சென்றேன். அப்போது அவர், என்னிடம் சில முக்கிய பொறுப்புகளைக் கொடுத்தார். ஆரம்பத்தில் திருவண்ணாமலை ஆசிரமத்தில் கிச்சன் பொறுப்பை ஒப்படைத்தார். அதை திறம்படச் செய்தேன். அதனால் என் மீது நித்யானந்தாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. உடனே இளைஞர்களுக்கான `ஆனந்தயோகம்' என்ற நிகழ்ச்சிக்கு இளைஞர்களையும் இளம் பெண்களையும் அழைத்துவரும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் பலரை சேர்த்தேன். அதன்பிறகு அடிக்கடி நித்யானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

விஜயகுமார் என்ற பிரேம மயானந்தா
விஜயகுமார் என்ற பிரேம மயானந்தா

இந்தச் சமயத்தில்தான் அறக்கட்டளை நடத்திவந்த சேலம் சுவாமி ஆத்மானந்தா என்பவருக்கு நித்யானந்தா பல லட்சங்களை நன்கொடையாக அள்ளிக் கொடுத்தார். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அதைத் தொடர்ந்து இன்னும் அதிகமான நன்கொடை வேண்டுமென்றால் அறக்கட்டளையில் எனக்கும் பொறுப்பு கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு ஆத்மானந்தாவும் சம்மதித்தார். நித்யானந்தாவை அறக்கட்டளையின் நிர்வாகியாக நியமித்தார்.

அதன்பிறகு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய 4 மடங்களுக்கு நித்யானந்தா, தனக்கு வேண்டப்பட்டவர்களை பொறுப்பாளராக நியமித்தார். எனக்கு திருவாரூர் மடத்தின் பொறுப்பைக் கவனிக்கும்படி நித்யானந்தா கூறினார்.

நான் திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த சமயத்தில்தான் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருக்கும் வீடியோ வெளியானது. வீடியோ வெளியாகும் தகவல் முன்கூட்டியே தெரிந்ததும் பிடதி ஆசிரமத்திலிருந்து நித்யானந்தா மற்றும் முக்கிய நிர்வாகிகள் வெளியேறிவிட்டனர். வீடியோ வெளியான பிறகு நித்யானந்தாவுக்கு அடுத்த இடத்தில் நடிகை ரஞ்சிதா இருந்தார். நித்யானந்தாவையும் நடிகை ரஞ்சிதாவையும் ஏற்றுக் கொண்டவர்கள் ஆசிரமத்தில் இருந்தனர். மற்றவர்கள் வெளியேறினர். நடிகை ரஞ்சிதாவின் கண் அசைவின்றி ஆசிரமத்தில் எதுவும் நடக்காது. திருவாரூர் மடத்தின் பொறுப்பாளராக இருந்த என்னிடம் போனில் பேசும் நடிகை ரஞ்சிதா சில முக்கிய தகவல்களைக் கூறுவார். அதை மட்டும்தான் நான் செய்வேன்.

விஜயகுமார் என்ற பிரேம மயானந்தா
விஜயகுமார் என்ற பிரேம மயானந்தா

இந்தச் சமயத்தில் மடத்தில் பெண்களால் பிரச்னை ஏற்பட்டது. ஆத்மானந்தா தரப்பினருக்கும் நித்யானந்தா தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன. தற்போது மடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நித்யானந்தாவுக்காக என் மீதும் வழக்குகள் பதிவாகின. அந்த வழக்குகளைச் சட்ட ரீதியாகச் சந்தித்துவருகிறேன். இதுபோன்ற மனக்கசப்பான சம்பவங்களால் நித்யானந்தாவிடமிருந்து விலகினேன். நித்யானந்தா தரப்பினர் என்னைக் கொலை செய்ய முயன்றனர்.

நித்யானந்தா வீடியோவில் சொல்வதைப் போல ஒரு கப் தயிர் சாதம், ஒரு கப் புளியோதரை சாப்பிட மாட்டார். அவருக்கு என்ன சாப்பிட வேண்டும். அவருக்கு எது பிடிக்கும் என்பது பிடதி ஆசிரமத்தில் உள்ள முக்கியமான சிலருக்கு மட்டும்தான் தெரியும். அவர் தினமும் 13 வகையான சைவ உணவுகளை சாப்பிடுவார். பாதாம், பிஸ்தா வகைகளை விரும்பிச் சாப்பிடுவார். நித்யானந்தாவுக்கு பணிவிடைகளைச் செய்ய ருத்ரகன்னிகள் உள்ளனர். அவர்கள் எப்போதும் நித்யானந்தாவுடனே இருப்பார்கள்.

நித்யானந்தா
நித்யானந்தா

நித்யானந்தா, தன்னை சிவனின் அவதாரம் என்று சொல்வார். அதோடு அவர் வாழும் இந்தக் காலத்தில் நாம் வாழ்வதை புண்ணியம் என்று அடிக்கடி சொல்வார். நித்யானந்தாவை ஒருவர் எதிர்த்தால் அவரின் தரப்பிலிருந்து அந்த நபரின் தனிப்பட்ட வாழ்க்கை கடுமையாக விமர்சிக்கப்படும். வீடியோவில் தோன்றும் நித்யானந்தாவும் நிஜ நித்யானந்தாவுக்கும் வித்தியாசங்கள் உண்டு.

நான் அந்த இரண்டு நித்யானந்தாவையும் நேரில் பார்த்துள்ளேன். எடுத்துக்காட்டாக ஆண்டாள் விவகாரத்தில் நித்யானந்தா வீடியோவில் கூறியது ஒன்று. ஆனால், நேரில் எங்களிடம் கூறியது வேறொன்று. நித்யானந்தாவுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. அவர்கள் அனைவரும் ஆசிரமத்தில்தான் இருந்தனர். அண்ணனுக்கு திருமணமாகிவிட்டது. அவர் வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒரு குழந்தையை நித்யானந்தாதான் பாசமாக ஆசிரமத்தில் வளர்த்துவருகிறார். அந்தக் குழந்தையோடு ஆசிரமத்தில் செல்ஃபி எடுக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்" என்றார்.