Published:Updated:

`எனக்கு எதிரா போராட்டம் பண்ணுவியா.. நேர்ல வந்தேன்னா..!’ -திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வின் சர்ச்சை ஆடியோ

சிவானந்தம், அருண்குமார்
சிவானந்தம், அருண்குமார்

ஆரணி தி.மு.க தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட முன்னாள் தி.மு.க செயலாளருமான சிவானந்தம் என்பவர், அருண்குமார் என்பவரை வசைபாடும் ஆடியோ வெளியாகி ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள வடக்கு மாடவீதியில், நகராட்சி மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கழிவுநீர்க் கால்வாய் மற்றும் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. அதே தெருவில், ஆரணி முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தம் வீடு இருக்கிறது. அவர் வீடு இருக்கும் இடத்தில் மட்டும் கழிவுநீர்க் கால்வாய் தோண்டப்படாமல், சாலை விரிவாக்கப் பணிகள் ஏதும் செய்யாமல் அப்படியே இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பணிகள் முழுமை பெறுவதற்கு, சிவானந்தம் வீட்டு வாசலிலும் கால்வாய் தோண்டினால் மட்டுமே முழுமை பெறும்.

ஆடியோ
ஆடியோ

ஆனால், தன்னுடைய வாசலில் கால்வாய் தோண்டக்கூடாது என சிவானந்தம் முட்டுக்கட்டை போடுவதாகத் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே தெருவில் வசிக்கும் சிலர் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அருண்குமார் என்பவர்மூலம் நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர்.

வடக்கு மாடவீதி தெருவில் சிலரை ஒன்று திரட்டி, நகராட்சியில் மனு கொடுக்கவைத்தது அருண்குமார்தான் என்று சிலர் சிவானந்தமிடம் சொல்ல, அருண்குமாருக்கு போன் போட்டு அச்சில் எழுத முடியாத அளவிற்கு வசைபாடியுள்ளார் சிவானந்தம். இதை ரெக்கார்டு செய்து சமூக வலைதளத்தில் போட்டுவிட்டார் அருண்குமார். தற்போது இந்த ஆடியோதான் வைரலாகியுள்ளது.

அந்த ஆடியோவில், ‘ஹலோ யார் பேசுறது அருண்குமாரா? நான் எக்ஸ் எம்.எல்.ஏ சிவானந்தம் பேசுறேன். எங்க ஊட்டாண்ட(வீடு) காவா நோண்ட உடமாட்டனு உனக்கு எவன் சொன்னது. நீ போய் கம்ளைன்ட் கொடுத்து போராட்டம் பண்ணற... எனத் தொடங்கும் ஆடியோவில் 1.30 நிமிடத்திற்கு மேலாக அச்சில் எழுத முடியாத கடுமையான வார்த்தைகளால் அருண்குமாரைத் திட்டுகிறார். கடைசியாக, நான் நேர்ல வந்தனா உன்னை செருப்பாலேயே அடிப்பேன்டா... என்று முடிகிறது.

போன் அழைப்பு
போன் அழைப்பு

இதுகுறித்து அருண்குமார் கூறுகையில், ‘வடக்கு மாடவீதியில் கைலாசநாதர் கோயில் உள்ளது. திருவிழாவின் போது, தேர் செல்வதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்தப் பணிகள் கிடப்பில் இருப்பதால், அந்தத் தெருவில் இருக்கும் என்னுடைய நண்பர்கள் இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டார்கள். நான் நகராட்சிஆணையரிடம் புகார் கொடுங்கள் என்று கூறி, அவர்களுக்கு வழிகாட்டினேன். அதற்கு சிவானந்தம் எனக்கு போன்போட்டு, கடுமையான வார்த்தைகளில் திட்டுகிறார். இது சம்பந்தமாக போலீஸில் புகார் செய்துள்ளேன்’ என்றார்.

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தமிடம் பேசினோம். ‘நான் சாலை விரிவாக்கம் எதையும் தடுக்கவில்லை. என்மீது தவறாகப் புகார் கொடுத்துள்ளார் அருண்குமார்' என்றார். ‘அருண்குமாரை தகாத வார்த்தைகளில் திட்டும் ஆடியோ வந்துள்ளதே என்றதும்’, ‘நான் வெளியூரில் இருக்கிறேன் பிறகு பேசுகிறேன்’ என்று போனை வைத்துவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு