Published:Updated:

தேனியில் மீண்டும் ஒரு காட்டுத்தீ சம்பவம்!

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படுகிறது
விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படுகிறது

குரங்கணி போன்றதொரு சம்பவம் தேனியில் மீண்டும் நடந்திருப்பது, தேனி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2018 மார்ச் 11-ம் தேதி குரங்கணி மலையில் டிரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 23 பேரை பலிகொண்ட அச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக தமிழக வனப்பகுதிகளில் டிரெக்கிங் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமீபத்தில், குரங்கணி மலையில் உள்ள கொழுக்குமலை எஸ்டேட்டுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள், ஜீப் டிரைவர்கள் உதவியுடன், ஆபத்தான மலைப்பகுதிகளுக்குச் செல்கின்றனர் என ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. குரங்கணி போன்றதொரு பெரும் விபத்து அதே மலையில் ஏற்படும் முன்னர் தடுக்க வேண்டும் என எச்சரித்திருந்தது.

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படுகிறது
விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படுகிறது

இந்த நிலையில், நேற்று கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்ற போடி ராசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், மலைப்பாதை வழியாக வீடு திரும்பும்போது, காட்டுத்தீயில் சிக்கினர். இதில், 2 வயது குழந்தை உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார். இச்சம்பவம் தேனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடர் காடு என்பதால், எந்தப் பக்கம் தீ வந்தது என தெரியவில்லை. பக்கத்தில் தீ வந்ததும்தான் தெரிந்திருக்கிறது. சட்டென சிலர் மரத்தின் மீது ஏறிவிட்டனர். விஜயமணியிடம் குழந்தை இருந்ததால் அவரால் மரத்தில் ஏற முடியவில்லை.
ராசிங்காபுரம் கிராம மக்கள்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது ராசிங்காபுரம் கிராமம். இக்கிராமத்தினர் பெரும்பாலானோர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்துவருகின்றனர். தினமும் ஜீப் மூலம் ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்புவார்கள். கொரோனா அச்சம் காரணமாக, இரு மாநில எல்லைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில், ஏலக்காய் தோட்டங்களுக்குச் செல்ல முடியாமல், பேருந்துகள் மூலம் போடி மெட்டுக்குச் சென்று, அங்கிருந்து ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று அங்கேயே தங்கி வேலை செய்துவந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படுகிறது
விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படுகிறது

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை, உடனே வீட்டுக்கு அனுப்ப, அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்த தமிழகத் தொழிலாளர்கள், வீடுகளுக்குப் புறப்பட்டனர். அதில், ராசிங்காபுரத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பேத்தொட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள ஏலத் தோட்டத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

போடி மெட்டு வந்து அங்கிருந்து பேருந்தில் ராசிங்கபுரம் வருவதாக திட்டம். ஆனால், போடி மெட்டில், சுகாதாரத்துறையினரின் கடும் சோதனை நடைபெற்றுவருவதால், நேரம் ஆகும் என்றும், போடி மெட்டில் பேருந்துகள் இல்லை என்றும் தகவல் கிடைத்தது. அதையடுத்து, காட்டுப்பாதையில் பயணித்து ஊருக்குச் செல்ல திட்டமிட்டனர். அதன்படி, ஜெயபிரியா (வயது 26), விஜயமணி (வயது 52), வஜ்ரமணி (வயது 36), மகேஷ்வரி (வயது 31), கீர்த்திகா (வயது 2), லோகேஷ் (வயது 26), மஞ்சுளா (வயது 36), கல்பனா (வயது 46), மற்றும் ஒண்டிவீரன் ஆகிய ஒன்பது பேர், பேத்தொட்டியிலிருந்து உச்சலூத்து மலைப்பதையில் வந்துகொண்டிருந்தனர்.

கடினமான பாதை என்றாலும் கூட, நம்மை குழப்பும் விதமாக நிறைய பாதைகள் மலையில் இருந்தது. அது மீட்புப்பணியில் சிக்கலை ஏற்படுத்தியது.
தீயணைப்புத்துறை வீரர்கள்

நேற்று மதியம் சுமார் 1 மணியளவில், மலையடிவாரப்பகுதியில் இருந்து வந்த காட்டுத்தீ, அனைவரையும் சுற்றிவளைத்துள்ளது. இதில், கீர்த்திகா என்ற இரண்டு வயது குழந்தை, மகேஷ்வரி, கீர்த்திகாவின் பாட்டி விஜயமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லோகேஷ் மஞ்சுளா, ஜெயஸ்ரீ ஆகியோர் படுகாயமடைந்தனர். கல்பனா, ஒண்டிவீரன், வஜ்ரமணி ஆகியோர் காயம் ஏதும் இன்றி தப்பித்தனர். காயமின்றி தப்பித்தவர்கள், ராசிங்காபுரத்தில் உள்ள தனது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, போடி போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறைக்குத் தகவல் சென்றது. தீயணைப்புத்துறை மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் செல்லும் முன்னர், ராசிங்காபுர கிராம மக்கள் சிலர் மலைக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். படுகாயமடைந்த மஞ்சுளா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விபத்தில் உயிர்தப்பியவர்கள்
விபத்தில் உயிர்தப்பியவர்கள்

இது தொடர்பாக நம்மிடையே பேசிய ராசிங்காபுரம் கிராமத்தினர் சிலர், ``ஒற்றையடி காட்டுப்பாதை அது. கரடுமுரடாக இருக்கும். எனவே, இப்பாதையை நாங்கள் பெரும்பாலும் பயன்படுத்தவே மாட்டோம். கொரோனா காரணமாக பஸ் ஓடாது எனச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் வேகமாக வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று இப்பாதையில் வந்திருக்கிறார்கள். அடர் காடு என்பதால், எந்தப் பக்கம் தீ வந்தது எனத் தெரியவில்லை. பக்கத்தில் தீ வந்ததும்தான் தெரிந்திருக்கிறது. சட்டென சிலர் மரத்தின் மீது ஏறிவிட்டனர். விஜயமணியிடம் குழந்தை இருந்ததால் அவரால் மரத்தில் ஏற முடியவில்லை. மரத்தில் ஏறிய சிலருக்கும் கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.

மீட்புப்பணிக்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் சிலரிடம் பேசியபோது, ``கடினமான பாதை என்றாலும் கூட, நம்மை குழப்பும் விதமாக நிறைய பாதைகள் மலையில் இருந்தது. அது மீட்புப்பணியில் சிக்கலை ஏற்படுத்தியது. போடி போலீஸாரும், நாங்களும் சம்பவ இடத்துக்குச் சென்றபோது கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. அவர்களைக் கீழே தூக்கிவருவது பெரிய சவாலாக இருந்தது” என்றனர்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படுகிறது
விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படுகிறது

இரண்டு நாள்களாக அப்பகுதியில் காட்டுத்தீ எரிந்துவந்ததாகவும், அதை வனத்துறை கவனிக்காமல் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``மலைகளில், சில பாதைகள், உள்ளூர் மக்கள் பயன்படுத்த உரிமை உள்ள பாதைகளாக இருக்கும். அப்படித்தான் குரங்கணி முதல் கொழுக்குமலை செல்வதற்கான பாதை. ஆனால், ராசிங்காபுரத்தைச் சேர்ந்தவர்கள் நடந்துவந்த பாதைக்கு, எந்த உரிமையும் இல்லை. முழுவதும் காட்டுப்பாதை. இது எதிர்பார்க்காத ஒரு விபத்து. மிகவும் வருத்தமளிக்கிறது. இரண்டு வருடத்துக்கு முன்னர் இதே மார்ச் மாதத்தில்தான் குரங்கணி சம்பவம் நடந்தது. காட்டுத்தீ காலத்தில் மலைகளுக்குச் செல்வதை உள்ளூர் மக்கள் தவிர்க்க வேண்டும்” என்றார்.

தடையை மீறி ட்ரெக்கிங்... மீண்டும் சர்ச்சையில் குரங்கணி... கண்டுகொள்ளாத கேரளா!
அடுத்த கட்டுரைக்கு