Published:Updated:

நெல்லை: விஷவாயு தாக்கி 4 ஊழியர்கள் மயக்கம்; பழைய பேப்பர் ஆலையில் நடந்த விபரீதம்!

பழைய பேப்பர் ஆலை
பழைய பேப்பர் ஆலை

நெல்லையில் செயல்பட்டுவந்த பழைய பேப்பர் ஆலையில், கழிவுத் தொட்டியிலிருந்து விஷவாயு வெளியேறியது. அப்போது அங்கு பணியிலிருந்த நான்கு தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம், திருப்பணி கரிசல்குளம் அருகே வடுகன்பட்டி என்ற இடத்தில் தனியார் பேப்பர் ஆலை செயல்பட்டுவருகிறது. பழைய பேப்பர் மற்றும் அட்டைகளை வாங்கி வந்து, அவற்றைக் கூழாக்கி புதிய பேப்பர் தயாரிக்கும் பணி நடக்கிறது.

விஷவாயு தாக்கிய ஆலை
விஷவாயு தாக்கிய ஆலை

அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் இன்று அங்குள்ள பழைய பேப்பர் கழிவுகள் கிடந்த தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தத் தொட்டிக்குள்ளிருந்து விஷவாயு வெளியேறியிருக்கிறது.

தொட்டியிலிருந்து நீர்க்குமிழிகள்போல வெளியேறிய விஷவாயுவை சுவாசித்த ராஜா (44 ) காளிமுத்து (33) மாரியப்பன் (55) செல்லப்பா (48) ஆகிய நால்வருக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, நால்வரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

விஷவாயு தாக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு நால்வரும் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அஜாக்கிரதை காரணமாக இந்த விபத்து நடந்ததா என்பது குறித்து சீதபற்பநல்லூர் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். இதற்கிடையே, நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன், மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு