Published:Updated:

ஃபாக்ஸ்கான் விவகாரம்: பரவும் வதந்திகள்... நீடிக்கும் மர்மம்! - தெளிவுபடுத்துமா அரசு?!

போராட்டம்
News
போராட்டம்

தனியார் விடுதியில் உணவருந்திய 250-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் சில பெண்கள் இறந்ததாக வதந்தி பரவியதை அடுத்து போராட்டம் நடைபெற்றது. உண்மையில் அங்கு நடப்பது என்ன?

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் பகுதி அருகே, `ஃபாக்ஸ்கான்’ என்ற தனியார் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகிறார்கள். இங்கு பணிபுரியும் 3,000-க்கும் அதிகமான பெண் ஊழியர்கள் பல்வேறு தனியார் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியிலும் ஊழியர்கள் தங்கியிருக்கிறார்கள். இந்த விடுதியில் சில தினங்களுக்கு முன்பு உணவருந்திய 259 பெண் ஊழியர்களுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.

சிகிச்சையில் பெண் ஊழியர்கள்
சிகிச்சையில் பெண் ஊழியர்கள்

அதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் அருகிலிருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். சிகிச்சை பெற்ற பெரும்பாலானோர் விடுதிக்குத் திரும்பிய நிலையில் சிலர் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதில், சிகிச்சை பெற்றுவந்த சிலர் காணவில்லை என்றும், சிலர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. சிகிச்சை பெற்றுவந்த பெண் ஊழியர்களைப் பற்றி விவரம் கேட்டபோது எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதனால், ஆத்திரமடைந்த சக பெண் ஊழியர்கள், 1,000-க்கும் மேற்பட்டவர்கள், சுங்குவார் சத்திரம், ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் பெண் ஊழியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாகத் தெரியவில்லை. இதனால், சாலையிலிருந்த வாகனங்கள் மாற்றி வேறு வழியில் அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் போன்றவர்களும் நேரடியாகச் சம்பவ இடத்துக்கு வந்து இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

இதற்கிடையே சிகிச்சை பெற்றுவந்த கஸ்தூரி, ஐஸ்வர்யா ஆகிய இரண்டு பெண் ஊழியர்கள் இறந்துவிட்டதாகத் தகவல் காட்டுத்தீபோலப் பரவியது. அவர்களின் உண்மைநிலை என்ன என்பது குறித்துப் போராட்டம் நடத்தும் ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில்தான், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். இறந்ததாகக் கூறப்படும் பெண் ஊழியர்களோடு வீடியோ காலில் பேசி அவர்கள் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார். அவர்கள் இருவரும் இறக்கவில்லை என்பதை உறுதிசெய்ததையடுத்து 17 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. இருந்தபோதிலும், ஒரகடம் பகுதியில் மறியலைக் கைவிடாமல் இருந்த பெண் ஊழியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``புதுச்சத்திரத்திலிருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்கள் தங்கியிருக்கின்றனர். கடந்த 15-ம் தேதி இங்கிருக்கும் ஊழியர்களுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்களில் 259 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 159 பேர் மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 155 பேர் சிகிச்சை முடிந்து திரும்பிய நிலையில், நான்கு பேர் மட்டும் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த கேன்டீன் தற்போது மூடப்பட்டுவிட்டது. அங்குள்ளவர்களுக்கு வெளியிலிருந்து உணவு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் யாரும் இறக்கவில்லை. இறந்ததாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக சேலம் வளர்மதி, யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

போராட்டத்தில் ஃபாக்ஸ்கான் ஊழியர்கள்
போராட்டத்தில் ஃபாக்ஸ்கான் ஊழியர்கள்

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வீடியோ காலில் பேசியதாகக் கூறி கஸ்தூரி என்ற பெண், ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ``நான் அந்த நிறுவனத்தில்தான் பணியாற்றுகிறேன். அன்று அந்த விடுதியில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான். என் பெயர் கஸ்தூரி என்னிடம்தான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேசினார். அவரிடம் நான் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்று கூறினேன். இருந்தாலும் நான் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அந்த விடுதியில் பல கஸ்தூரிகள் இருக்கிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கஸ்தூரி நான் கிடையாது. தற்போது நான் என் சொந்த ஊரில் இருக்கிறேன்" என்று பேசியிருந்தார்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பலநூறு பெண் ஊழியர்களை தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும்படி விடுதி நிர்வாகம் வற்புறுத்தியதாகப் பெண் ஊழியர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர். காலையில் பெண்களிடம் வந்து பேசியவர்கள் `மாலை 3 மணிக்குள் விடுதியை காலிசெய்து சென்றுவிட வேண்டும்’ என்றும், `வரும் 26-ம் தேதி வரை உங்களுக்கு விடுமுறை’ என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் விடுதியில் தங்கியிருந்த ஊழியர்களிடம் எழுதி வாங்கி, ஊருக்கு அனுப்பிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தங்கள் உடைமைகளைக்கூட அந்த விடுதியில் வைத்துவிட்டுச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், அதோடு, தங்களை மீண்டும் பணிக்கு அழைப்பார்களா என்பது சந்தேகம்தான் என்றும் பெண் ஊழியர்கள் கூறுகின்றனர்.

``போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆதரவாகப் போராடச் சென்றவர்களில் 22 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு இந்தச் சம்பவத்துக்கு முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறேன்." - பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

ஆட்சியர் பேசியதாகக் கூறிய பெண், `மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கஸ்தூரி நான் இல்லை’ என்று வெளியிட்டிருக்கும் வீடியோ புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதேபோல, சிகிச்சை பெற்றுவருபவர்களின் நிலை என்ன என்பது இதுவரை மர்மமாகவே இருக்கிறது. அது குறித்த எந்தத் தகவலையும் இதுவரை அரசு தெளிவாக வெளியிடவில்லை. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இதுநாள்வரை நடைபெறாத அளவுக்கு ஒரு பெரும் போராட்டம் நடைபெற்றிருக்கிறது.

அந்தப் போராட்டத்தைக் கலைப்பதற்காக இப்படிப் பொய் கூறப்பட்டதா என்ற சந்தேகமும் வலுவாக எழுந்திருக்கிறது. சிகிச்சை பெற்றுவந்தவர்களின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடக் கூறவேண்டியது அரசின் கடமை. எந்த ஓர் ஒளிவு மறைவும் இல்லாமல் உடனடியாக உண்மையைச் சொல்ல வேண்டும்!