`109 பேருக்கு தினமும் இலவச உணவு!’ -வேலூரில் விஜய் ரசிகர்களின் `விலையில்லா விருந்தகம்'

வேலூரில், ஏழை மக்களுக்கு தினமும் இலவச காலை உணவு வழங்க விலையில்லா விருந்தகத்தை விஜய் ரசிகர்கள் திறந்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்குவதற்காக `விலையில்லா விருந்தகம்’ மாவட்டந்தோறும் தொடங்கப்பட்டுவருகிறது. வடசென்னை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே இலவச உணவகம் திறக்கப்பட்டு பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. அந்த வகையில், வேலூரிலும் `விலையில்லா உணவகம்’ நேற்று திறக்கப்பட்டது.

இதன் தொடக்க விழாவில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டார். உணவகத்தைத் திறந்துவைத்த அவர், ரூ.3 லட்சம் மதிப்பில் 100 பேருக்கு ஹெல்மெட், 600 ஏழைப் பெண்களுக்குப் புடவை, 150 பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப் பை, மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருள்களை வழங்கினார்.
இந்த விருந்தகம், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் திறந்திருக்கும். காலை உணவு மட்டும் 109 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை உணவு வழங்கப்படும் என்று நேரத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

இட்லி, பொங்கல் என ஒவ்வொரு நாளும் வகை வகையான உணவுகளைப் பரிமாற உள்ளனர். தொடர்ந்து 321 நாள்களுக்கு இலவசமாகக் காலை உணவு வழங்கத் திட்டம் வகுத்துள்ளனர். இந்த விழாவில், `கொரோனா’ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நிர்வாகிகள் அனைவரும் முகத்தில் `மாஸ்க்’ அணிந்து ஏழை மக்களுக்கு உணவு பரிமாறினர்.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் வேல்முருகன் கூறுகையில், ``விஜய் ரசிகர்களாக இருப்பதில் பெருமை கொள்கிறோம். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்பத் தமிழகத்தில் தளபதி விஜய்யைத் தவிர்த்து வேறு யாருமில்லை.

ஏழை மக்கள் நலனில் அக்கறை செலுத்த தளபதி கட்டளையிட்டுள்ளார். மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவராகத் தினமும் உணவுக்கான செலவை ஏற்றுக் கொள்கிறோம்’’ என்றார் பெருமிதமாக. விஜய் ரசிகர்களின் இந்த இலவச உணவுத் திட்டம், வேலூர் மக்களை வியப்புக்குள்ளாக்கி பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.