Published:Updated:

கவனப்படுத்திய ஜூ.வி... களத்தில் இறங்கிய ஆட்சியர்; பட்டா வழங்கிய முதல்வர்! - நெகிழும் பழங்குடியினர்

நலத்திட்ட உதவி நிகழ்ச்சி - ஒழுந்தியாம்பட்டு ( தே.சிலம்பரசன் )

"13 பேருக்கும் கொண்டலாங்குப்பத்துல பட்டா கொடுத்திருக்காங்க. ``நாங்க இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கோம். சாதிச் சான்றிதழ் கொடுத்துட்டா இன்னும் சந்தோஷமா இருப்போம்." - பழங்குடிப் பெண்மணி ராதா.

கவனப்படுத்திய ஜூ.வி... களத்தில் இறங்கிய ஆட்சியர்; பட்டா வழங்கிய முதல்வர்! - நெகிழும் பழங்குடியினர்

"13 பேருக்கும் கொண்டலாங்குப்பத்துல பட்டா கொடுத்திருக்காங்க. ``நாங்க இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கோம். சாதிச் சான்றிதழ் கொடுத்துட்டா இன்னும் சந்தோஷமா இருப்போம்." - பழங்குடிப் பெண்மணி ராதா.

Published:Updated:
நலத்திட்ட உதவி நிகழ்ச்சி - ஒழுந்தியாம்பட்டு ( தே.சிலம்பரசன் )

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை அருகே உள்ளது கரசானூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சித்தேரிக்கரையின் ஓரமாக தரையை ஒட்டிக்கிடந்த குடிசைகளில் இன்னல்பட்டு வாழ்ந்து வந்துள்ளனர் பழங்குடி இருளர் சமூக மக்கள். கடந்த 2020-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவு, இந்த மக்களின் 14 குடிசை வீடுகள் உடைமைகளுடன் தீயில் கருகிப்போக, குழந்தைகளுடன் திக்கற்று நின்றுள்ளனர். இவர்களுக்கு ஆறுதலாக, அரசு அதிகாரிகளின் வார்த்தைகள் மட்டுமே உடன் இருந்துள்ளன... வாழ்க்கையில் மாற்றம் ஏதும் இன்றி, அதன் பின்னர், வேறு வழியின்றி அதே இடத்தில் பனை ஓலைகளையும் பாலிதீன் தார்ப்பாய்களையும் கொண்டு குடிசை அமைத்து தங்களின் வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளனர்.

கரசானூர், பழங்குடி இருளர் சமூக மக்கள்
கரசானூர், பழங்குடி இருளர் சமூக மக்கள்

அப்போதைய மாவட்ட ஆட்சி அதிகாரி, புதிய இடத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா தருவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதாக அந்த மக்களிடம் கூறியுள்ளார். ஆனால், மிகுதியான ஆழம்கொண்ட குவாரி பள்ளங்கள் இருக்கிற இரு வெவ்வேறு இடங்களே, இந்த மக்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவிருக்கும் இடமாக காண்பிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை எண்ணி... குவாரி பள்ளங்களைக் கண்டு அஞ்சிய அந்த மக்கள், அந்த இடத்துக்கு மாற்றாக வாழத்தகுந்த இடத்தைக் கேட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கைவைத்து நடையாக நடந்துள்ளனர். இதற்கு மத்தியில், மழை நேரம் என்றால் ஏரிப் பகுதியிலுள்ள அந்தச் சிறு குடிசைகளில் தண்ணீர் புகுந்துகொள்ள, பள்ளிகளில் ஒண்டியபடி வாழ்க்கையைக் கடத்திவந்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாம் நேரில் சந்தித்தபோது இந்தத் துயரங்கள் அனைத்தையும் விரிவாகப் பகிர்ந்துகொண்ட அந்த மக்கள், "நாங்களும் மனுஷங்கதானே... எங்களுக்கான வீட்டுல, நல்லா வாழணும்னு எங்களுக்கும் ஆசை இருக்கு. அரசாங்கம் எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கி உதவி பண்ணனும்" என்றதோடு, "எங்களின் குடிசைகள் எரிஞ்சப்போ அஞ்சு பேருடைய ஏரி வேலை அட்டையும், ஒருவருடைய மாற்றுத்திறனாளி அட்டையும் சுத்தமா எரிஞ்சு போச்சு. அவங்களுக்கு இப்போ ஏரி வேலை (100 நாள் வேலை) இல்லைனு சொல்லுறாங்க. புது அட்டைக்கு... 100 ரூபா லஞ்சம் கேட்கிறாங்க" என்றனர் ஆதங்கத்தோடு.

இருளர் சமூக மக்கள் குடிசை, ராதா
இருளர் சமூக மக்கள் குடிசை, ராதா

கரசானூர் பழங்குடி இருளர் சமூக மக்களின் தொடர் கோரிக்கைகள் பற்றியும், நடைமுறை வாழ்வின் சிக்கலையும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தோம். "அந்த மக்கள் வாழத்தகுந்த இடத்தில் பட்டா கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். ஐந்து நபர்களுக்கு ஊரக வேலை அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி அட்டையை உடனே தரும்படி கூறுகிறேன்" என்றார்.

அதன்படி, தீ விபத்தில் 100 நாள் வேலை அட்டை இழந்த ஐந்து பேருக்கும், மறு தினமே (31.07.2021) அந்த அட்டைகள் அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது நம்மைத் தொடர்புகொண்டு பேசியிருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ராதா, "புது ஏரி வேலை அட்டை கொடுத்துட்டாங்க. விகடனுக்கும் கலெக்டர் சாருக்கும் நன்றி. இதே மாதிரி, சொந்தமா வீடு இன்றி தவித்துவரும் எங்களுக்கு, கலெக்டர் சார் கருணை கூர்ந்து விரைவாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

இந்தத் தகவல்களை விரிவாகப் பதிவிட்டு, 31.07.2021 அன்று விகடன் தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

இதன் தொடர்ச்சியாக, இந்த மக்களுக்கு வீட்டுமனை கொடுப்பதற்கு இடங்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்நிலையில், 13 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாம்பட்டுக்கு வந்திருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது சுமார் 2,022 இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியிருந்தார். அதில், இந்த 13 குடும்பங்களும் அடக்கம்.

இது குறித்து நம்மைத் தொடர்பு கொண்டு பேசிய கரசானூர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ராதா, "13 பேருக்கும் கொண்டலாங்குப்பத்துல பட்டா கொடுத்திருக்காங்க. உடனே வீடு கட்டுறதுக்கு ஏற்பாடு செய்யறதாவும் சொல்லியிருக்காங்க. நாங்க இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கோம். கல்யாணி ஐயாவுக்கு நேற்று போன் பண்ணி நன்றி சொன்னேன். விகடனும் எங்களுக்காகப் பேசியிருக்கீங்க, உங்களுக்கும் நன்றி. முதலமைச்சர், கலெக்டர் சார் எல்லாருக்கும் நன்றி. எங்களுக்கு சாதிச் சான்றிதழ் கொடுத்துட்டா இன்னும் சந்தோஷமா இருப்போம்" என்றார் ஆனந்தக் குரலில்.

பேராசிரியர். கல்யாணி
பேராசிரியர். கல்யாணி

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பேராசிரியர் கல்யாணி, "நிறைய பழங்குடி மக்களுக்கு இப்போது வீட்டுமனைப் பட்டா கொடுத்திருக்கிறார் முதலமைச்சர். வழங்கப்பட்டுள்ள வீட்டுமனைகளுக்காக முதலமைச்சர், மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பாக நன்றி. விடுபட்டவர்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டி, விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism