Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி மாவட்டத்தின் கடைசி சுதந்திரப் போராட்ட தியாகி காலமானார்! - நேரில் அஞ்சலி செலுத்திய ஆட்சியர்

தியாகி ஹள்ளிகவுடர்
தியாகி ஹள்ளிகவுடர்

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிக்கடி இளைஞர்களுக்குச் சொல்லிவருவார். நாட்டின் சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை ஊர் மக்களுக்கு உணர்த்த ஒருபோதும் தியாகி ஹள்ளிகவுடர் தவறியதில்லை.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹள்ளிகவுடர்.1929-ம் ஆண்டு பிறந்த இவர்,1947-ம் ஆண்டு ஊட்டியில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்துக்காக இவரைக் கைதுசெய்து, மைசூர் சிறையில் அடைத்தனர். இரண்டு மாதங்கள் சிறையில் தண்டனையை அனுபவித்து பின்னர் விடுதலையானார்.

தியாகி ஹள்ளிகவுடர்
தியாகி ஹள்ளிகவுடர்

இவரது தியாகத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, ஊட்டியில் நடைபெறும் சுதந்திரதின விழாவுக்கு வரவழைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் இவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக, சுதந்திரதினத்தில் இவர் பங்கேற்கவில்லை என்றாலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இவரது வீட்டுக்குச் சென்று உரிய மரியாதை செய்துவந்தனர்.

இந்தநிலையில், உடல் நலக்குறைவு காரணமாக தியாகி ஹள்ளிகவுடர் நேற்று காலை தனது சொந்த ஊரான நஞ்சநாடு கிராமத்தில் காலமானார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று, மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டத்தில் கடைசியாக வாழ்ந்துவந்த ஒரே சுதந்திரப் போராட்ட வீரரும் தற்போது உயிரிழந்திருப்பது இந்த மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தியாகி ஹள்ளிகவுடர்
தியாகி ஹள்ளிகவுடர்

தியாகி ஹள்ளி கவுடர் குறித்து நம்மிடம் பேசிய நஞ்சநாடு கிராம மக்கள், ``இவருக்கு தற்போது 92 வயது. இவரின் மனைவி நஞ்சம்மாள், கடந்த சில ஆண்டுக்கு முன்பு காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இவருக்கு நம் தேசத்தின் மீதும், தேசத் தலைவர்கள் மீதும் பற்று அதிகம். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிக்கடி இளைஞர்களுக்குச் சொல்லிவருவார். நாட்டின் சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை ஊர் மக்களுக்கு உணர்த்த ஒருபோதும் இவர் தவறியதில்லை" எனப் புகழஞ்சலி செலுத்துகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு