Published:Updated:

`உதவித்தொகை கேட்டு ஒரு வருஷமா அலையுறேன்; நடக்கல!' - 92 வயது சுதந்தரப் போராட்ட தியாகி வேதனை

சுதந்தரப் போராட்ட தியாகி சுந்தரம்.
சுதந்தரப் போராட்ட தியாகி சுந்தரம்.

`நாடி தளர்ந்துப்போச்சு. கொஞ்சம் தூரம்கூட நடக்க முடியல. ஆனாலும் ஒரு வருஷத்துக்கும் மேலாக உதவித்தொகை கேட்டு நடையாய் நடக்கிறேன். ஆனால், அரசு உதவித்தொகை மட்டும் கிடக்கல” எனச் சோகமாய் சொல்கிறார் தியாகி சுந்தரம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சேதுரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற சுதேசி மற்றும் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இவர் மற்றும் இவரின் அண்ணன் முத்துவீராசாமி ஆகியோர் தேவகோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா விடுதலை அடைந்தபிறகு சுதந்தர போராட்ட தியாகி பட்டியலில் இருந்த இவருக்கு காமராஜர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அடுத்து இவரின் அண்ணனுக்கு காங்கிரஸ் சார்பில் மருங்காபுரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரின் போராதகாலம் தேர்தல் நடப்பதற்கு முன்பே உடல்நலக்குறைவால் காலமானார். செல்வாக்காக வாழ்ந்த குடும்பம். அடுத்து நலிவடைந்தது. இப்போது இவருக்கு வயது 92. அவருக்கு உதவித்தொகை வழங்கப்படாமல் அதிகாரிகள் தரப்பில் அலைக்கழிப்பு செய்வதாகத் தெரியவந்தது. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

``என்னுடன் பிறந்தவர்கள் 9 பேர். அதில் கடைசி மகன் நான். சுதந்தரப் போராட்டத்தில் எங்க அண்ணன் தீவிரமாகக் கலந்துகொண்டார். அவரைப் பார்த்து நானும் போராட்டங்களில் கலந்துகொண்டேன். போராட்டம் நடத்திய எங்களைச் சிறையில் அடைத்தார்கள். அதில் வெள்ளைக்கார போலீஸ் தடியால் அடித்ததில், எனது பல் சேதமானது. ஒரு மாதத்துக்கு மேல் சிறை; கடுமையாக நடத்தினார்கள். நாடு சுதந்திரம் அடையணும் என்பதற்காக வாங்கினோம். ஆனால், நாடு விடுதலை அடைந்த பிறகு, ரொம்ப செல்வாக்காக வாழ்ந்தோம்.

தியாகி சுந்தரம்.
தியாகி சுந்தரம்.

முன்னாள் முதல்வர் காமராஜர் எப்போது வந்தாலும் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுதான் போவார். அப்படி செல்வாக்காக இருந்த குடும்பம். காமராஜர்தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். இப்படி இருந்த எங்கள் நிலைமை மிகவும் மோசமானது. எனக்கு 7 பிள்ளைகள். அதில் 5 பேர் இறந்துவிட்டார்கள். தற்போது ஒரு மகனும், மகளும் மட்டும் இருக்கிறார்கள். மகள் திருமணம் ஆகி இலுப்பூரில் உள்ளார். மகன் கூலிவேலை செய்து சம்பாதிக்கிறார். அவரின் குடும்பத்தைக் காப்பாற்றவே போதவில்லை. அதனால் அவரால் எங்களைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை.

நல்லா இருந்த காலகட்டத்தில் மணப்பாறை பகுதிகளில் நியூஸ் பேப்பர் போட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் நானும் எனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தேன். இப்போது என்னால் வேலை செய்ய முடியவில்லை. உடல் தளர்ந்து போய்விட்டது. எங்களைப் பார்த்துக்கொள்ளவே ஆட்கள் தேவையான சூழல் என்பதால், பிள்ளைகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

நான் ஆரம்பத்தில் இருந்தே, அரசு வழங்கும் திட்டங்களை பெறுவதற்கு பெரும் போராட்டத்தைச் சந்திக்கிறேன். கடந்த 1979-ல் மணப்பாறை அடுத்த பெருமாள் பட்டியில் தியாகிகளுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனைப் பட்டா எனக்கு வழங்கப்பட்டது. கொஞ்சநாளில் அந்த இடத்தைச் சிலர் ஆக்கிரமித்துவிட்டார்கள். அதை அகற்றித் தரக்கோரி மணப்பாறை தாசில்தார் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனுக் கொடுத்தேன்.

சுதந்தரப் போராட்ட தியாகி சுந்தரம்.
சுதந்தரப் போராட்ட தியாகி சுந்தரம்.

ஆனாலும் நடவடிக்கை இல்லை. அதன்பிறகு கடந்த 2016-ல் சுதந்தர தினத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தேன். அதைத் தொடர்ந்து அதிகாரிகள், என்னிடம் விசாரணை நடத்தியதுடன், முதியோர் உதவித்தொகை கிடைக்கவும், எனக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

அதன்பிறகும் எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கு தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு பெற்றேன். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த ஒருவருடமாக மாநில அரசு சார்பில் வழங்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வு ஊதியம் வருகிறது. அந்தப் பணம் எனக்கும் என் மனைவியின் மருத்துவச் செலவுக்கு கூட போதவில்லை. மத்திய அரசு வழங்கும் தியாகிகளுக்கான உதவித்தொகை கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும். அதற்காகத் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்துட்டேன். ஒரு வருஷமாக நடவடிக்கையில்லை.

காமராஜர் எப்போது வந்தாலும் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுதான் போவார். அப்படி செல்வாக்காக இருந்த குடும்பம். காமராஜர்தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். இப்படி இருந்த எங்கள் நிலைமை மிகவும் மோசமானது.
தியாகி சுந்தரம்

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக உதவித்தொகை கிடைக்காமல் இருந்த நிலையில், போராடி தற்போதுதான் மாநில அரசின் தியாகிகளுக்கான உதவித்தொகை கிடைக்கிறது. மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை கிடைத்தால் மேலும் பயனாக இருக்கும்” எனக் கலங்கினார்.

இந்த நிலையில் தியாகி சுந்தரம், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் அழைத்துச் சென்றோம். மனுக்களைப் படித்துப் பார்த்தவர், `இவர் ஏற்கெனவே மாநில அரசின் உதவித்தொகை பெறுவதால், மத்திய அரசின் உதவித் தொகை கிடைக்குமா எனத் தெரியவில்லை' என்றார். உடனே தியாகி சுந்தரம், `மணப்பாறை பகுதியில் உள்ள மற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள், மத்திய மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகை இரண்டையும் பெறுகிறார்கள். எனக்கு மட்டும்தான் கிடைக்கவில்லை' என்றார்.

அதைக் கேட்ட ஆட்சியர், `நிச்சயமாக இது குறித்து விசாரிக்கச் சொல்கிறேன். மத்திய அரசின் உதவித்தொகை கிடைப்பதற்கு வழி முறை இருந்தால் நிச்சயம் ஏற்பாடு செய்கிறேன்' என்றார்

நாட்டுக்காக சிறை சென்றவர்.. உயிர்வாழ உதவித்தொகைக் கேட்டு பல போராட்டங்கள் நடத்திவருகிறார். அரசின் மனம் இறங்குமா?

அடுத்த கட்டுரைக்கு