Published:Updated:

`ஓட்டு வீடு, தங்க நாணயம், நாடன் அடிமுறை!' - சைலேந்திர பாபு குறித்து நெகிழும் குழித்துறை மக்கள்

டி.ஜி.பி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
டி.ஜி.பி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் ( வி.ஸ்ரீனிவாசுலு )

`சதானந்த் டீச்சருக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்ப அவரைப் போய் பார்த்து, அவரை கவனித்துக்கொண்டார் சைலேந்திர பாபு. கடைசி வரை அந்த ஆசிரியரை சைலேந்திர பாபு கவனிச்சுக்கிட்டிருந்தார். சமீபத்திலதான் அவங்க இறந்தாங்க' என்கிறார் அவரின் நண்பர்.

தமிழகத்தின் 30-வது டி.ஜி.பியாகப் பொறுப்பேற்று இருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். அவர் வசித்த பழைமையான ஓட்டு வீடு, குழித்துறையில் உள்ளது. அங்கு 95 வயதான அவரின் தாய் ரத்தினம்மாள் வசித்து வருகிறார். சைலேந்திர பாபுவுடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். சைலேந்திர பாபு 6-வது பிள்ளை. எட்டுப் பேரில் ஒரு சகோதரி தவிர மற்ற 7 பேரும் அரசு ஊழியர்கள்.

குழித்துறையில் உள்ள விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்தார் சைலேந்திர பாபு. அவரது பழைய ஓட்டு வீட்டை மாற்றி புதிய கான்கிரீட் வீடு கட்டலாமே என நண்பர்கள் கேட்டதற்கு, `எத்தனை லட்சம் செலவு செய்தாலும் இதுபோன்ற ஒரு வீட்டைக் கட்ட முடியுமா?' எனக் கேட்டு ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் சைலேந்திரபாபு. பழைமையில் ஆர்வம் கொண்டதோடு, அதைப் பாதுகாக்கவும் நினைக்கும் சைலேந்திர பாபு, அவர் படித்த விளவங்கோடு அரசுப் பள்ளியில் அனைத்துக் கட்டடங்களும் கான்கிரீட்டில் அமைக்கப்பட்ட சமயத்தில், பழைமையான ஓட்டுக்கட்டடமான தலைமை ஆசிரியர் அலுவலகத்தை மட்டும் அப்படியே புதுப்பித்துப் பராமரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பழைமையான கட்டடங்கள் நினைவுகளின் ஊற்று என்று அடிக்கடி சைலேந்திரபாபு சொல்லுவார் என அவரின் நண்பர்கள் கூறுகிறார்கள்.

டி.ஜி.பி சைலேந்திரபாபு-வின் வீடு
டி.ஜி.பி சைலேந்திரபாபு-வின் வீடு
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் பற்றி அறியாத தகவல்கள்! | Vikatan Tv

சைலேந்திர பாபுவுடன் ஒன்றாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படித்த சுதிர்சந்திரகுமாரிடம் பேசினோம். ``குழித்துறையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சைலேந்திர பாபுவும் நானும் படித்தோம். அவர் ஆசிரியர்களை மிகவும் நேசிப்பார். ஸ்கூல் பீப்புள் லீடராக இருந்தார். என்.சி.சி கேப்டனாகவும் இருந்திருக்கிறார். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் நண்பர்களை எல்லாம் சந்திப்பார்.

ஊரில், இலவச காவலர் பயிற்சி, இலவச டி.என்.பி.எஸ்.சி பயிற்சி போன்றவற்றை அவர் மூலம் நடத்தி வருகிறோம். நிறைய பேர் வேலைவாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்கள். அவர் ஐ.பி.எஸ் ஆனதில் இருந்து, அவர் படித்த அரசுப் பள்ளியில் படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தங்க நாணயம் வழங்கி வருகிறார்'' என்றவர், பள்ளி வளாகத்தில் ஒரு கட்டடத்தைக் காட்டினார்...

``நாங்கள் இந்தப் பழைய ஓட்டு பில்டிங்கில்தான் ஏழாம் வகுப்புப் படிச்சோம். சதானந்த் டீச்சர், அப்போது எங்களுக்கு ஆசிரியராக இருந்தார். அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது, அவரைப் போய் பார்த்து, அவரை கவனித்துக்கொண்டார் சைலேந்திர பாபு. கடைசிவரை அந்த ஆசிரியரை சைலேந்திர பாபு கவனித்துக்கொண்டார். சமீபத்தில்தான் அந்த ஆசிரியர் இறந்தார்'' என்றவர்,

சுதிர்சந்திரகுமார்
சுதிர்சந்திரகுமார்

``சைலேந்திர பாபு, இந்தப் பள்ளி மாணவர்களுக்காக லாங் ஜம்ப் பிட் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் போட்டுக்கொடுத்தார். காவலர் பயிற்சிக்கான கயிறு ஏறும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். காவலர்களுக்கான இலவச பயிற்சிக்கான உதவிகளைச் செய்து வருகிறார்.

நாங்கள் பள்ளியில் படித்தபோது, நண்பர்கள் சேர்ந்து நாடன் அடிமுறை போன்ற விளையாட்டுகளை விளையாடுவோம். சைலேந்திர பாபு, அதை மேடையில் செய்துகாட்டுவதில் வல்லவர். அவர் சத்தியமங்கலத்தில் வேலைபார்த்தபோது, காவலர்களுக்கு சிலம்பம் கிளாஸ் எடுப்பதற்காக, சிலம்பம் மாஸ்டரான என்னை நிறைய தடவை அழைத்திருக்கிறார். ஊரை, நண்பர்களை மறக்காமல், எனக்கு அந்த வாய்ப்பை தந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.

சைலேந்திரபாபு படித்த விளவங்கோடு அரசுப் பள்ளி
சைலேந்திரபாபு படித்த விளவங்கோடு அரசுப் பள்ளி
Vikatan

சைலேந்திரபாபு படித்த விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மெர்சி ரோஸ்லின் கூறுகையில், ``டி.ஜி.பி சைலேந்திர பாபு இப்பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர் என்பதில் எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமை. தான் படித்த பள்ளியின் மாணவர்கள் நல்ல நிலையில் முன்னேறுவதற்காக, இந்தப் பகுதிக்கு அவர் வரும்போதெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வந்து, மாணவர்களோடு உரையாற்றி அதிக ஊக்கமும் உற்சாகமும் தந்துவிட்டுச் செல்வார். ஆண்டுதோறும் நடக்கும் பள்ளி ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குத் தங்க நாணயம் பரிசாக அளிப்பார்.

அதேபோன்று, விளையாட்டில் முதலாவதாக வரும் மாணவர்களுக்கும் தங்க நாணயம் பரிசளிப்பார். ஏழை மாணவர்கள் படிக்கவும், மாணவர்கள் உயர் கல்விக்கான உதவிகளையும் செய்வார். கிராமப்புற மாணவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணம் அவர். நல்லுள்ளம் கொண்ட சைலேந்திர பாபு சாரின் பணிசிறக்க அனைவர் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு