Published:Updated:

விபத்தில் சிக்கிய காவலருக்கு நிதி உதவி -'டெலிகிராம் ஆப்' மூலம் ஒன்றிணைந்த ராமநாதபுரம் போலீஸ்!

நிதியினை வழங்கும் எஸ்.பி
நிதியினை வழங்கும் எஸ்.பி ( உ.பாண்டி )

ராமநாதபுரம் மாவட்ட காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவல்துறையில் பணிபுரியும் செல்வக்குமாரின் நண்பர்கள் இணைந்து சுமார் 5 லட்ச ரூபாய் நிதி திரட்டினர்.

பணி முடித்துச் சென்ற போது விபத்தில் சிக்கிக் காயமடைந்த காவலரின் சிகிச்சை செலவுக்காக ராமநாதபுரம் மாவட்ட காவலர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி உதவிய நிகழ்வு காவலர்கள் குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் காயமடைந்த ராமநாதபுரம் காவலர்.
விபத்தில் காயமடைந்த ராமநாதபுரம் காவலர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் செல்வக்குமார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பணி முடித்துவிட்டு தனது இரு சக்கரவாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார். வழியில் சாலையின் குறுக்கே நாய் ஓடிய நிலையில் இரு சக்கரவாகனத்தில் சென்ற காவலர் செல்வக்குமார் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். கீழே விழுந்த போது இவரது ஹெல்மெட் உடைந்துபோன நிலையில் முகம் மற்றும் தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மீட்கப்பட்ட செல்வக்குமாரை மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எஸ்.பி வருண்குமார்
எஸ்.பி வருண்குமார்
உ.பாண்டி

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவல்துறையில் பணிபுரியும் செல்வக்குமாரின் நண்பர்கள் இணைந்து சுமார் 5 லட்ச ரூபாய் நிதி திரட்டினர். 'டெலிகிராம் ஆப்' மூலம் ஒன்றிணைந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் என அனைவரும் வழங்கிய இந்த நிதியினைக் காவலர் செல்வக்குமாரின் தந்தையிடம் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வழங்கினார். இக்கட்டான சூழலில் தனது மகனின் சிகிச்சைக்கு உதவிய காவலர் குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாக நெகிழ்ந்தார் காவலர் செல்வக்குமாரின் தந்தை.

அடுத்த கட்டுரைக்கு