ஒரத்தநாட்டில் அதிகாரிகள் அலட்சியத்தால், கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வந்த பொருள்களை வழங்காமல், இரண்டு வருடங்களாகப் பூட்டிவைத்திருந்ததால் பொருள்கள் அனைத்தும் வீணானதுடன், துர்நாற்றம் வீசத் தொடங்கியநிலையில், அவை அதிகாரிகள் முன்னிலையில் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் விவசாயிகள், மீனவர்கள் எனப் பலரும் கடுமையன பாதிப்புக்கு உள்ளாகினர். மக்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதரத்தை இழந்து தவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை,பேராவூரணி போன்ற ஊர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமான தென்னை மரங்கள் அனைத்தும் வேரோடு முறிந்தும் சாய்ந்துவிட்டன.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே இரவில் மக்கள் உடை, உடமை, பொருள்கள் என அனைத்தையும் இழந்ததால் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் தவித்தநிலையும் உண்டானது. அப்போது அரசு மற்றும் தன்னார்வலர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவிசெய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 4,68,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 27 அத்தியாவசியப் பொருள்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும், கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்து, பொது மக்களுக்கு வழங்கின.

மேலும், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் வழங்கிய பொருள்களையும் அரசு பெற்று, ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் பாதுகாப்பாகவைத்திருந்து அதிகாரிகள் முன்னிலையில் விநியோகம் செய்யபட்டன. இதே போன்று ஒரத்தநாடு பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக புதூர் கிராமத்தில் நிவாரணப் பொருள்களை பஞ்சாயத்து அலுவலகத்தில் சேமித்துவைத்திருந்தனர்.
அவற்றை முறையாக வழங்காமல் பண்டலாக அப்படியே வைத்திருந்ததால், யாருக்கும் பயன்படாமல் அவை அனைத்தும் தற்போது வீணாகிவிட்டன. மேலும், துர்நாற்றமும் வீசியது. இதையடுத்து அவற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டனர்.
இது குறித்துப் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ``தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவுக்கு உட்பட்ட 58 பஞ்சாயத்துகளில், விடுபட்டவர்களுக்கு வழங்க அரசு சார்பில், அனுப்பிவைக்கப்பட்ட பொருள்களை தாலுகா அலுவலகத்திலுள்ள குடோனில் வைத்திருந்தனர். பின்னர் அங்கு போதிய இடம் இல்லாததால், ஒரத்தநாடு புதூர் பஞ்சாயத்து அலுவலகத்திலுள்ள இரண்டு பெரிய அறைகளில், நிவாரணப் பொருள்கள் அனைத்தையும் வைத்திருந்தனர்.
ஆனால், அந்த நிவாரணப் பொருள்களை கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல், இரண்டு வருடங்களாக அறைக்குள் பூட்டியேவைத்திருந்தனர். `பொருள்கள் வீணாகிடும்போல் இருக்கு. எத்தனையோ பேர் கஷ்டபடுறவங்க இருக்காங்க அவங்களுக்குக் கொடுத்தாலும் புண்ணியமாகப் போகும்’ என பொதுமக்கள் சிலர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

ஆனால், அதை அதிகாரிகள் அலட்சியம் செய்தனர். ஒரு வருடத்துக்கு முன்னர் சிலர் அந்த அலுவலகத்தின் கதவை உடைத்து அங்கிருந்த பொருள்களை அள்ளிச் சென்ற சம்பவமும் நடைபெற்றது. இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பிறகும் அதிகாரிகள் பொருள்களை அப்புறப்படுத்தவோ, அவற்றை பொதுமக்களுக்கு வழங்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தநிலையில், பொருள்கள் வீணானதைத் தொடர்ந்து சில தினங்களாகவே அந்தப் பகுதி முழுவதும் துார்நாற்றாம் வீசத் தொடங்கியது. பொதுமக்கள் இதை அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து பி.டி.ஓ.முருகன், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வீணாகியிருந்தது தெரியவந்தது.

அத்துடன் தார்ப்பாய், பிளாஸ்டிக் வாளிகள் போன்றவை எலி கடித்து சேதமடைந்திருந்தன. பின்னர் அந்தக் கட்டடத்தின் பின்புறத்திலேயே ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் 20 அடி ஆழத்துக்குக் குழி தோண்டி, வீணாகிப்போன பொருள்களைப் புதைத்தனர். யாருக்கும் வெளியே தெரியாமல் புதைப்பதற்குத்தான் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
ஆனால் எப்படியோ விஷயம் வெளியே கசிந்துவிட்டது. அதிகாரிகள் மனதுவைத்திருந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அல்லது அரசு உதவியுடன் வேறு ஏதேனும் பயன்பாட்டுக்கோ கொடுத்திருக்கலாம். ஆனால் ஒரு சில அதிகாரிகள் இவற்றை முறைகேடாக விற்க முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

அதனாலேயே இரண்டு வருடங்களாகப் பொருள்கள் பூட்டிவைக்கப்பட்டிருந்தன. சொல்லப்போனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏழை மக்கள் மட்டுமன்றி யாருக்கும் பயன் படாமல் அழிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது” என வருத்தத்துடன் தெரிவித்தனர்.
அதிகாரிகள் தரப்பிலோ, `நிவாரணப் பொருள்கள் கொஞ்சம்தான் இருந்தன. அவற்றை வேறு இடத்தில் வைத்திருக்கிறோம். பாலீதீன் பைகள்தான் புதைக்கப்பட்டன’ எனத் தெரிவித்தனர்.