Published:Updated:

`கஜா புயலால் ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிட்டீங்க!'- 10 பேருக்கு வீடுகள் வழங்கி ரஜினி நெகிழ்ச்சி

கோடியக்கரையைச் சேர்ந்த பன்னீர் என்ற முதியவரை அழைத்த ரஜினி, "உடம்பை கவனிச்சிக்கங்க" என்றார்.

ரஜினி
ரஜினி

நாகை மாவட்டத்தில், கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 10 குடும்பத்தினருக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டித்தரும் பணி நிறைவுபெற்றது. அதன் தொடர்ச்சியாக, உரிய பயனாளிகளை சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் வீடுகளின் சாவிகளை நடிகர் ரஜினிகாந்த் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

ரஜினி
ரஜினி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், வீடுகள், உடைமைகளை இழந்து தவித்த நேரத்தில், ரஜினியின் உத்தரவின் பேரில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஏராளமான நிவாரணப் பொருள்களை வாரி வழங்கினர். குறிப்பாக நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதிகளில் முகாமிட்டு, தினமும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்தனர். அப்போது பார்வையிட வந்த ரஜினி மக்கள் மன்றத் தலைமை நிர்வாகிகள், 'வீடுகளை இழந்து வாடும் ஏழைகளுக்கு மன்றம் சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும்' என்று அறிவித்தனர்.

அதன்படி முதல் கட்டமாக கோடியக்கரை, நாலுவேதபதி, கோயில்பத்து, வெள்ளப்பள்ளம், ஆலங்குடி, ஈசனூர் ஆகிய கிராமங்களில் 10 பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 218 சதுரடியில் ரூ.1.85 லட்சம் செலவில் வீடுகள் கட்டும் பணி, கடந்த 5 மாதங்களாக நடந்து வந்தது. அனைத்து செலவுகளையும் ரஜினி ஏற்றுக்கொண்டார். இப்பணி நிறைவடைந்ததையொட்டி, 10 பயனாளிகள் குடும்பத்தினரும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். இந்தப் பொறுப்பை, நாகை மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் ராஜேஸ்வரனும் மாவட்ட நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்.

ரஜினி
ரஜினி

இன்று (21.10.2019) காலை 10 மணிக்கு ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்த பயனாளிகளுக்கு, ஜூஸ் கொடுத்து உபசரித்தனர். அவர்களை இன்முகத்துடன் வரவேற்ற ரஜினி, "எல்லோருக்கும் வணக்கம். எல்லாரும் சாப்டீங்களா... என்று கேட்டவாறே வந்தமர்ந்தார். "கஜா புயலால் ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிட்டீங்க. எதிர்பாராம நடந்த இயற்கை சீற்றம் நடந்துடுச்சி. கவலைப்படாதீங்க. எல்லாம் ஒருநாள் சரியாகிடும்" என்று ஆறுதல் கூறினார். இதைக்கேட்க அவர்கள் கண்கலங்கினர். கோடியக்கரையைச் சேர்ந்த பன்னீர் என்ற முதியவரை அழைத்த ரஜினி, "உடம்பை கவனிச்சிக்கங்க" என்றார். ஒவ்வொரு குடும்பத்தினரையும் அழைத்து தாம்பளத்தில் குத்துவிளக்கு, குங்குமச்சிமிழுடன் வீட்டின் சாவியை வைத்துக் கொடுத்தார். பயனாளிகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

பின்னர், நாகை மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன் மற்றும் நிர்வாகிகளிடம் பேசிய ரஜினி, "வீடுகள் கட்டும் இடங்களைப் பார்வையிட பல மணி நேரம் ஆகும். உங்களுக்கு ரொம்ப சிரமம் ஏற்பட்டிருக்கும்.

ரஜினி
ரஜினி

இது ரொம்ப நல்ல விஷயம். குட் வொர்க் பண்ணியிருக்கீங்க. வாழ்த்துகள்" என்றார். சமீபத்தில் தன்னை ஹீரோவா உயர்த்திய இயக்குநர் கலைஞானத்திற்கு வீடு வழங்கிய ரஜினி, தன்னை சூப்பர் ஸ்டாராக உயர்த்திய மக்களுக்கும் வீடுகள் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.