Published:Updated:

``கையில பணத்தைக் கொடுக்காம தரையில வெக்கிறாங்க!" – சிலிண்டர் டெலிவரி செய்பவரின் ஊரடங்குப் பணி அனுபவம்

செந்தில் குமார்
செந்தில் குமார்

" ‘வீட்டுக்குள் வந்து சிலிண்டரை வைங்கண்ணா. நோய்த் தொற்று எதுவும் வராது’ன்னும் சிலர் நேசத்தோடு சொல்றாங்க. மனிதர்கள் பலவிதம். எந்த விருப்பு வெறுப்புக்கும் இடம்கொடுக்காம வேலை செய்ய வேண்டிய கடமையின்படி எதையும் மனசுல ஏத்திக்காம கடந்துபோயிடுவேன்."

கொரோனா பாதிப்பு உலக மக்கள் அனைவரையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அலுவலகப் பணியாளர்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார்கள். தினக்கூலி மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக மருத்துவப் பணியாளர்கள், காய்கறிகள் விற்பனையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பால் விற்பனை செய்வோர், பத்திரிகையாளர்கள், கேஸ் ஏஜென்சி பணியாளர்கள் உள்ளிட்ட சில துறையினர் மட்டுமே இந்த அவசரகால நிலையிலும் அயராது பணியாற்றிவருகிறார்கள்.

செந்தில் குமார்
செந்தில் குமார்

ஊரடங்கு அமலில் இருக்கும் தற்போதைய சூழலில், அரசு மற்றும் காவல்துறையினரின் வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கையை மீறிச் சிலர் வெளியில் நடமாடுவதும், வாகனங்களில் பயணம் செய்வதும் தொடர்கிறது. இந்தக் காட்சிகளுடன், சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் தொழிலாளர் ஒருவர் லோடுடன் கூடிய 10-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடங்கிய மூன்று சக்கர சைக்கிளை நீண்ட தொலைவிலிருந்து தள்ளிக்கொண்டே வந்ததையும் காண முடிந்தது. மதியம் 2 மணிக்கு உச்சிவெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த வேளையில், வியர்வைத்துளிகள் ஆடைகளை நனைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பணியில் இருந்தார். அந்த ஊழியரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

“நான் இந்த சைக்கிள்லதான் தினமும் சிலிண்டர் சப்ளை பண்றேன். என்னோட சைக்கிள்ல சுத்தமா காத்தில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருக்கு. சைக்கிள் பழுதுபார்க்கிற கடைகள்கூட இல்லை. அதனால, ரெண்டு மணிநேரமா சைக்கிளைத் தள்ளிகிட்டே நடந்துவந்துதான் பல வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்றேன்.” மெல்லிய குரலில் ஆதங்கத்துடன் பேசுகிறார், செந்தில் குமார்.

சென்னை தி.நகரிலுள்ள தனியார் கேஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் செந்தில் குமார். நீண்ட தூரம் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வந்த களைப்பு செந்திலை சோர்வடையச் செய்ய, சற்றே இளைப்பாறிவிட்டுத் தொடர்ந்தார்.

செந்தில் குமார்
செந்தில் குமார்

“சென்னை ஓ.எம்.ஆர் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் என் வீடு இருக்கு. தினமும் பஸ்லதான் குடோனுக்கு வருவேன். இப்போ பஸ், ஆட்டோ உட்பட எல்லாப் போக்குவரத்தும் முடங்கியிருக்கிறதால என் வீட்டுல இருந்து சைதாப்பேட்டையில இருக்கிற எங்க ஆபீஸ் குடோனுக்கு ரெண்டு நாளா சைக்கிள்லதான் வந்து போறேன். காலையில ஏழு மணிக்கெல்லாம் அங்க வந்து அந்த நாள்ல சிலிண்டர் சப்ளை பண்ண வேண்டிய வீடுகளுக்கான மொத்த பில்லையும் வாங்கிட்டு, அங்கிருந்தே இந்த மூணு சக்கர சைக்கிள்ல சிலிண்டர் லோடு ஏத்திக்கிட்டு சப்ளைக்கு வந்திடுவேன்.

சப்ளை செய்ய வேண்டிய பேலன்ஸ் சிலிண்டர்களைச் சுத்துவட்டாரப் பகுதியில ஓரிடத்தில் வெச்சிருப்பாங்க. மதிய வாக்குல அங்க போய் காலி சிலிண்டர்களை இறக்கிவெச்சுட்டு, லோடுடன் கூடிய அந்த சிலிண்டர்களை மீண்டும் வண்டியில ஏத்திக்கிட்டுவந்து சாயந்திரம் 5 – 6 மணிவரைக்கும் சப்ளை செய்வேன். ஒருநாளைக்குச் சராசரியா 40 சிலிண்டர்களை சப்ளை செய்வேன். இதுதான் என்னோட தினசரி வாழ்க்கை.

செந்தில் குமார்
செந்தில் குமார்

நாள் முழுக்க நிறைய இடத்துல சுத்துறதால, இப்போதைய கொரொனா பீதியில என்னால யாருக்கும் நோய்த் தொற்று வரக்கூடாதுனு முகத்துல கர்சீப் கட்டியிருக்கேன். வண்டியிலயே ஒரு சோப்பு வெச்சிருக்கேன். வழியில தண்ணீர் எங்கயாச்சும் வந்துச்சுன்னா அடிக்கடி கைகழுவிக்குவேன். சிலிண்டர் சப்ளை செய்யப்போறப்போ பல அப்பார்ட்மென்ட்ல கேட் மூடப்பட்டிருக்கு. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் போன் பண்ணிக் கூப்பிடுவேன். சிலர் அவங்க வசிக்கிற மாடிக்கே சிலிண்டரைக் கொண்டுவந்து வெக்கச் சொல்வாங்க. அப்போ என் கையைச் சுத்தம் செய்ய சானிடைஸர் கொடுக்கிறவங்களும் உண்டு.

சிலரோ பில்லை தரையில வெக்கச் சொல்லிட்டு, பணத்தையும் தரையிலயே வெக்கிறாங்க. இதெல்லாம் புதுசா இருந்தாலும், சுகாதாரக் காரணங்களுக்காக மக்களின் அச்சம் எனக்கும் புரியுறதால வருத்தப்படாம வந்திடுவேன். ‘வீட்டுக்குள் வந்து சிலிண்டரை வைங்கண்ணா. நோய்த் தொற்று எதுவும் வராது’ன்னும் சிலர் நேசத்தோடு சொல்றாங்க. மனிதர்கள் பலவிதம். எந்த விருப்பு வெறுப்புக்கும் இடம்கொடுக்காம வேலை செய்ய வேண்டிய கடமையின்படி எதையும் மனசுல ஏத்திக்காமக் கடந்துபோயிடுவேன்” என்பவரை, கேஸ் வாடிக்கையாளர்களின் அழைப்புகள் இடைமறித்துக்கொண்டே இருந்தன. ஒவ்வொன்றுக்கும் பதிலளித்தவாறே, உரையாடலைத் தொடர்ந்தார்.

மக்களுக்கான சர்வீஸ் பணி இது. மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மழை, வெயில், அவசரகாலங்கள்னு எல்லா நேரத்துலயும் நாங்க வேலை செய்தே ஆகணும். எங்களுக்கு என்ன பாதிப்பு வந்தாலும் பில்லை மட்டும் பாதுகாப்பா வெச்சுக்கணும்.
செந்தில் குமார்

“காலையில சீக்கிரமே வேலைக்கு வர்றதால காலையிலேயும் மதியமும் கடைகள்லதான் சாப்பிடுறேன். சைக்கிள் சர்வீஸ் கடைகள் எதுவுமே இல்லாததால, காற்றடிக்கக்கூட முடியலை. சாயந்திரம் வரைக்கும் சைக்கிளைத் தள்ளிகிட்டே போய்தான் சிலிண்டர் சப்ளை செய்யணும். இதனால இன்னைக்கு வேலையை முடிக்க நேரமாகும். பிறகு சைதாப்பேட்டை குடோனுக்குப் போய் இந்த வண்டியை விட்டுட்டு, என் சைக்கிள்ல வீட்டுக்குப் போகணும்.

வெயில்லயே சுத்துறதால உடம்பெல்லாம் அசதியாவும் எரிச்சலாவும் இருக்கும். அதையெல்லாம் தாங்கிகிட்டுதான் வேலை செய்றோம். வீட்டுக்குப் போய் சேர நைட்டு பத்து மணியாகிடும். குளிச்சுட்டு சாப்பிட்டு தூங்கினா, விடியற்காலை எழுந்து மறுபடியும் வேலைக்கு வரணும். தீபாவளி, பொங்கல் உட்பட பண்டிகை மற்றும் விடுமுறை தினங்கள்லகூட வேலை இருக்கும். எங்களுக்கு விடுமுறை தினம்னு எதுவும் இல்லை. எல்லா நாளும் வேலை உண்டு. நாங்களா பார்த்து சொந்தத் தேவைக்கு லீவ் எடுத்துக்கலாம். மக்களுக்கான சர்வீஸ் பணி இது. மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மழை, வெயில், அவசரகாலங்கள்னு எல்லா நேரத்துலயும் நாங்க வேலை செய்தே ஆகணும். எங்களுக்கு என்ன பாதிப்பு வந்தாலும் பில்லை மட்டும் பாதுகாப்பா வெச்சுக்கணும்.

செந்தில் குமார்
செந்தில் குமார்

இவ்வளவு லோடு சிலிண்டரையும் வெச்சுக்கிட்டு மூச்சு வாங்க தினமும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளை மிதிக்கிறது சிரமம்தான். வேற வழியில்லையே! இந்த வேலையால் கிடைச்ச பயன் என்னன்னா, எனக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்னு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை. அதேசமயம் இவ்வளவு எடையையும் சுமந்துகிட்டு டிராஃபிக்ல சைக்கிளை ஓட்டிட்டுப் போறது பெரிய சவால்தான். இப்போ டிராஃபிக் இல்லாம இருக்கிறது எங்க பணிகளுக்கு உதவியா இருக்கு. இதுக்கு முன்னாடி சென்னையில மழை வெள்ளம் வந்தபோதும், வர்தா புயல் பாதிப்பு வந்தபோதும் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். ஆனா, அதையெல்லாம்விட இப்போதைய கொரோனா அச்சுறுத்தல் சூழல்தான் ரொம்பவே புது அனுபவம்” என்பவர் மக்களுக்குச் சில வேண்டுகோளையும் விடுத்தார்.

“நம்மைத் தற்காத்துக்கொள்வதோடு, நம்மாள நம் குடும்பத்தினருக்கும் மத்தவங்களுக்கும் நோய் பாதிப்பு வரக்கூடாதுனு எல்லோரும் உணரணும். ஆனா, அதைப் பொருள்படுத்தாம பலரும் சாலையில் பயணம் செய்றாங்க. மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க வழிநெடுகவும் போலீஸார் ‘எஸ்’ வடிவத்துல பேரிகார்டு வெச்சிருப்பதுடன் பாதுகாப்புக்கும் நிற்கிறாங்க. ஆனாலும், மக்களின் நடமாட்டம் இருக்குது.

செந்தில் குமார்
செந்தில் குமார்

‘எங்களை மாதிரியான பணியாளர்கள் உங்க நலனுக்காகச் சிரமம் பார்க்காம வேலை செய்துகிட்டுதானே இருக்கோம். கவர்ன்மென்ட் சொல்றமாதிரி நோய்ப் பரவலைத்தடுக்க வீட்டுக்குள்ளயே இருங்க’ன்னு நானும்கூட சிலர்கிட்ட சொன்னேன். ஆனா, சில மக்கள் தொடர்ந்து அச்சத்தை உணர மறுக்கிறாங்க. அதுதான் வருத்தமா இருக்கு. மக்கள் வெளிய வராமல் வீட்டுக்குள்ளேயே இருங்க. உங்களுக்கான தேவையை நாங்க நிறைவேத்திக்கொடுக்கிறோம்” என்று வேண்டுகோளுடன் விடைகொடுத்த செந்தில் குமார், மீண்டும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வேலையைத் தொடங்கினார்.

கொரோனா பரவலைத் தடுக்க சுயக்கட்டுப்பாட்டு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், இதுபோன்று தன்னலம் பார்க்காமல் வேலை செய்யும் பணியாளர்களின் சேவையையும் மதிப்போம்.

அடுத்த கட்டுரைக்கு