நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி வனப்பகுதிகளில் காட்டுமாடுகளை இறைச்சிக்காக ஒரு கும்பல் தொடர்ந்து வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் மோப்ப நாய்களை வரவழைத்த வனத்துறை அதிகாரிகள் இரவோடு இரவாக தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

ஓவேலி வனச்சரகத்திற்கு உட்பட்ட சூண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காட்டுமாட்டின் 4 கால்கள், கொம்பு, தோல் போன்றவை மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அழுகிய நிலையில் இருந்த காட்டுமாட்டின் உடல் பாகங்களைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வேட்டைக் கும்பலைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காட்டுமாடுகள் வேட்டையில் ஒரு சில வனத்துறை பணியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காட்டுமாடு வேட்டைக் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், "ஓவேலி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுமாடுகள் தொடர்ந்து வேட்டையாடப்படுவதாக சமீபத்தில் புகார் வந்தது. துப்பாக்கியுடன் இரவு நேரத்தில் நுழையும் கும்பல் ஒன்று இறைச்சிக்காக காட்டுமாடுகளை வேட்டையாடி கேரளாவிற்கு கடத்தி வந்ததாகத் தெரிகிறது. தற்போது சூண்டி பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்டுமாட்டின் உடல் பாகங்களைக் கைப்பற்றி ஊட்டி அரசு கலைக்கல்லூரி உள்ள மரபியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். வேட்டைத் தொடர்பாக வனத்துறை பணியாளர்கள் முறையாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இது அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கூடலூர் வழியாக காட்டுமாடு இறைச்சியைக் கடத்தி கேரளாவில் கிலோ ரூ.700 வரை விற்பனை செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. தொடர் வேட்டையில் ஈடுபட்டு வந்த வேட்டைக் கும்பலைப் பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து பேசும் சுற்றுச் சூழல் ஆர்வார்கள், "காட்டுக்குள் நடக்கும் அத்துமீறல்களை மூடி மறைக்கவே வனத்துறை பார்க்கிறது. வனத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இறைச்சிக்காக காட்டுமாடுகள் வேட்டையாடப்பட்டு கேரளாவுக்கு கடத்தி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வனக் குற்றங்களை மூடி மறைப்பதை விட்டுவிட்டு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வன விலங்குகளுக்கு எதிராக நடக்கும் கொடூரங்களை தடுக்க வேண்டும்" என்கிறார்கள்.