Published:Updated:

செஞ்சிக்கோட்டை: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தாரா ராஜா தேசிங்கு? வரலாற்று ஆர்வலரின் கேள்வி! 

ஆங்கிலத்தில் இலச்சினை, செஞ்சிக்கோட்டை

"பொறுப்புமிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்படும் விவரம், தவறான வரலாறாக மக்கள் மத்தியில் தங்கிவிடக் கூடாது எனும் அக்கறையின் அடிப்படையில்தான் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது." - செங்குட்டுவன்

செஞ்சிக்கோட்டை: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தாரா ராஜா தேசிங்கு? வரலாற்று ஆர்வலரின் கேள்வி! 

"பொறுப்புமிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்படும் விவரம், தவறான வரலாறாக மக்கள் மத்தியில் தங்கிவிடக் கூடாது எனும் அக்கறையின் அடிப்படையில்தான் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது." - செங்குட்டுவன்

Published:Updated:
ஆங்கிலத்தில் இலச்சினை, செஞ்சிக்கோட்டை

செஞ்சிக்கோட்டையின் பாரம்பரியத்தை வெளியுலகுக்கு உணர்த்தும் விதமாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 'மரபு நடை விழா' நேற்று முன்தினம் முதல் தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மரபு நடையை நடத்துவது தொடர்பாக கடந்த 5-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த விழாவுக்காக ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட பதாகைகளை மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டிருந்தார். உடன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். பதாகைகள் ஆங்கிலத்தில் இருந்ததால் அது விவாதமாகி இருக்கிறது.

கூடவே, இந்த மரபு நடை விழா குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தினை எதிர்த்து போரிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களில் மிகவும் தொன்மையானவர்களில் ஒருவரான இராஜாதேசிங்கால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பதாகைகளை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்
பதாகைகளை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் மூலமாகக் கடிதம் அனுப்பியிருக்கும் விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செஞ்சிக்கோட்டையில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலான வரலாற்று மரபு நடை விழா 07.01.2023 முதல் தொடங்க இருப்பதாகப் பத்திரிகை செய்திகளின் வாயிலாக அறிந்தேன். சிறந்த முன்னெடுப்பிற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும். செஞ்சி, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரம். 'தென்னகத்தின் டிராய்', 'எளிதில் வெல்ல முடியாத கோட்டை' எனும் புகழைப் பெற்றது செஞ்சிக்கோட்டை. ஒரு காலத்தில் தென்னகத்தின் அரசியல் செஞ்சியை மையப்படுத்தியே நடந்தது என்பது வரலாற்று உண்மை.

இந்த மரபு நடை விழா தொடர்பாக தாங்கள் வெளியிட்ட அறிக்கையில் சில நெருடல்கள் காணப்படுகின்றன. 'ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தினை எதிர்த்து போரிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களில் மிகவும் தொன்மையானவர்களில் ஒருவரான இராஜாதேசிங்கால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டை' எனத் தங்களின் அறிக்கையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இராஜா தேசிங்கிற்கும் ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் இறந்தது 1714-ம் ஆண்டு. செஞ்சிக் கோட்டையில் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு வந்தது 1761-ல். அதாவது, தேசிங்கு இறந்து 47 ஆண்டுகளுக்குப் பிறகு. வாதத்திற்கு வேண்டுமானால், ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டதாக தேசிங்கின் தந்தை சாரூப் சிங்கைச் சொல்லலாம். அதுவும் கூட செஞ்சியின் கட்டுப்பாட்டில் இருந்த தேவனாம்பட்டினத்தின் வரி வசூலிப்பு தொடர்பாக, ஆங்கிலேயருடன் அவர் மோதலில் (1711-1713) ஈடுபட்டார். இந்த மோதலும் பின்னர் புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது.

செஞ்சிக்கோட்டை
செஞ்சிக்கோட்டை

அதேபோல், செஞ்சிக்கோட்டை 13-ம் நூற்றாண்டில், சோழர் காலத்தின் இறுதிப் பகுதியில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. செஞ்சி நாயக்கர்கள், பீஜப்பூர் சுல்தான்கள், மராத்தியர், மொகலாயர், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷார் ஆகியோர் செஞ்சிக்கோட்டையை ஆட்சி செய்ததாகப் பட்டியலிடுகிறார் 'செஞ்சிக்கோட்டை' நூலாசிரியர் ஏ.கே.சேஷாத்திரி. இராஜா தேசிங்கின் தந்தையான சாரூப் சிங், 1700 முதல் 1714 ஜனவரி வரையிலும் முகலாயப் பேரரசின் பிரதிநிதியாக செஞ்சியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர். இவர் மறைவுக்குப் பின்னர் செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பை தேசிங்கு ஏற்றார். தந்தை, மகனது ஆட்சிக் காலங்களில் செஞ்சிக்கோட்டையில் எவ்விதமான கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், செஞ்சிக்கோட்டையை இராஜா தேசிங்கு கட்டினார் என்பதும் மாறுபட்ட தகவலாகும். பின்னர் இயற்றப்பட்ட கதைப் பாடல்களின் மூலம் இராஜா தேசிங்கு மாவீரனாக இன்றளவும் மக்கள் மத்தியில் திகழ்கிறார் என்பதும் உண்மை. எனவே, ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் இராஜா தேசிங்குக்கும், செஞ்சிக்கோட்டை கட்டுமானத்துக்கும் இராஜா தேசிங்குக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பொறுப்புமிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்படும் விவரம், தவறான வரலாறாக மக்கள் மத்தியில் தங்கிவிடக் கூடாது எனும் அக்கறையின் அடிப்படையில்தான் இந்த விளக்கம். மேலும், செஞ்சி மரபு நடை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள லோகோ எனப்படும் இலச்சினை ஆங்கிலத்திலேயே அமைந்துள்ளதும் வருத்தத்திற்குரியது.

செங்குட்டுவன்
செங்குட்டுவன்

வெளி மாநிலத்தவரையும் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் சென்றடைய ஆங்கிலம் அவசியம் என்பதை உணர்கிறேன். ஆனாலும், ஆட்சித் தமிழ், நம் அன்னைத் தமிழ் அதில் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும். எனவே தமிழ், இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.