Published:Updated:

`அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்த பையில் பெண் குழந்தை!’ - சிதம்பரத்தில் அதிர்ச்சி

சிதம்பரம் அரசு மருத்துவமனையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடிகூட அகற்றாத நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் மீட்டனர்.

Girl baby
Girl baby

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தொட்டி அருகே ஒரு பை கிடந்துள்ளது. ஊழியர்கள் அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் அழகிய பெண் குழந்தை தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் துடித்துக்கொண்டிருந்துள்ளது. உடனே, மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையைப் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர். இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

Girl baby
Girl baby

மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வுசெய்து வருகின்றனர். பெண் குழந்தை என்பதால், அனாதையாக விட்டுச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் ஆண்களைவிட பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி பெண் குழந்தைகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Vikatan

பெண் குழந்தையைப் பெற்ற தாய்மார்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. இந்த நிலையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை பையில் வைத்துப் போட்டுச் சென்ற சம்பவம் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.