Published:Updated:

`இறைவனுக்குத்தான் தெரியும்!’ -கொரோனா முடிவுக்கு வருவது குறித்து முதல்வர் பழனிசாமி

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

``வைரஸ் தொடர்பான நிலையான தன்மைகள் எதுவும் தெரியவில்லை என்பதால் மருத்துவக் குழுவின் வழிகாட்டுதலின்படிதான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன"

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,449 -ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று 1,322 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னை வேளச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ``கொரோனா வைரஸ் நோய்த்தொற்று புதியதாக இருப்பதால், இன்னும் இதற்கு உலகளவிலேயே மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை காரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54 சதவிகிதமாக உள்ளது.

எனினும், மக்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் அறிவுரைக்கேற்ப ஊரடங்கையும் அமல்படுத்தி வைரஸ் பரவலைத் தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வேகமாகப் பரவும் நோயைத் தடுக்க ஸ்பீட் பிரேக்கர் மாதிரி இந்த ஊரடங்கு பயன்படுகிறது. அதைத் தவிர வேறொன்றுமில்லை. ஊரடங்கை நீட்டிப்பது குறித்த முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மக்கள்தான் அரசாங்கம். அரசாங்கம் மட்டும் தனியாக நடவடிக்கைகளை எடுக்க முடியாது” என்றார்.

30 நாள்களில் கொரோனாவை ஒழிப்பது எப்படி?- ‘புத்தகம் எழுதும்’ எடப்பாடி!

இன்றைய அளவில் 8,27,980 பரிசோதனைகளை அரசு மேற்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்ட முதல்வர், ``இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் தமிழகத்தில்தான் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனைகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரிசோதனைகளை செய்ய 83 நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. வெளியிலிருந்து வருபவர்கள் மூலமாகதான் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. வைரஸால் பாதிப்படைந்தவர்களில் சுமார் 80 சதவிகிதம் பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவில்லை. வைரஸ் தொடர்பான நிலையான தன்மைகள் எதுவும் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்பதால் மருத்துவக் குழுவின் வழிகாட்டுதலின்படிதான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றும் குறிப்பிட்டார்.

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்

கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த எவ்வளவு காலம் ஆகும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``இறைவனுக்குத்தான் தெரியும். எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. இந்த நோயை ஒழிக்க முடியாது. தடுக்கத்தான் முடியும்” என்று கூறினார். மேலும், அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா உள்ளதா என்று கேட்டதற்கு `அதை அவரே மறுத்துள்ளார்’ என்றும் குறிப்பிட்டார்.

`வெளிமாநிலத்திலிருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் பரவுகிறது!’ -முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அடுத்த கட்டுரைக்கு