Published:Updated:

`கடவுள் சாதி பார்ப்பதில்லை' - கோயில் திருவிழா வழக்கை முடித்துவைத்த நீதிபதிகள்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளைi
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைi

திருச்சி, திருவானைக்காவல் கோயில் திருவிழா குறித்த வழக்கில், `கோயில் பாகுபாட்டுக்கான இடமாக இருக்கக் கூடாது’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

திருச்சி அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை குறித்த வழக்கில், ``கோயில் என்பது பாகுபாட்டை உருவாக்கும் இடமில்லை” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

திருச்சியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ``திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு உட்பட்ட இரணி அம்மன் கோயில் விழா, ஆண்டுதோறும் சீரும் சிறப்புமாக நடைபெறும். அனைத்துச் சமூகத்தினரும் இணைந்து இவ்விழாவை சிறப்பாக நடத்திவந்தனர். ஆனால், தற்போது அந்தநிலை நீடிக்கவில்லை. விழா நடத்துவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே பிரச்னை நிலவிவருகிறது.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்

இதனால் விழா கொண்டாடுவதில் சிக்கல் எழுந்திருக்கிறது. இதை ஆரோக்கியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, வருவாய்த்துறையினர் சமரசம் செய்து, அனைத்துத் தரப்பினரும் இணைந்து, விழா நடத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனத் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தங்கள் கருத்தைக் கூறிய நீதிபதிகள்...

``கோயில் என்பது நம்பிக்கையின் அடையாளம். உயரிய எண்ணங்களைச் பெறத்தான் மக்கள் கோயிலுக்குச் செல்கின்றனர். கோயிலுக்கு வருவோரிடம் கடவுள், வேற்றுமை பார்ப்பதில்லை. சாதிகளை ஏற்பதும் இல்லை, மறுப்பதும் இல்லை. கோயில் என்பது மன அமைதிக்கான் இடம். மனிதர்கள் இடையே பாகுபாடு உருவாக்குவதற்கான இடமல்ல. எனவே, இந்த விஷயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து

திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் இணை ஆணையர் இது குறித்து உரிய முடிவு எடுக்கலாம்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு