Published:Updated:

`வீடுகட்ட அனுமதி வாங்கி மசூதி கட்டுறாங்க!' - இந்து அமைப்பினர் எழுப்பிய சர்ச்சை... பின்னணி என்ன?

சர்ச்சைக்குரிய கட்டடம்

``தாய்க்கு தாயா, மனைவிக்கு மனைவியா ஆறுதலா இறந்த மனைவியோட நினைவுகளை மறக்க முடியலை. மனைவி நினைவா ஒரு நினைவிடம் கட்டலாம்னு தோணுச்சு." - முகமது அலி

`வீடுகட்ட அனுமதி வாங்கி மசூதி கட்டுறாங்க!' - இந்து அமைப்பினர் எழுப்பிய சர்ச்சை... பின்னணி என்ன?

``தாய்க்கு தாயா, மனைவிக்கு மனைவியா ஆறுதலா இறந்த மனைவியோட நினைவுகளை மறக்க முடியலை. மனைவி நினைவா ஒரு நினைவிடம் கட்டலாம்னு தோணுச்சு." - முகமது அலி

Published:Updated:
சர்ச்சைக்குரிய கட்டடம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காட்டைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரின் மனைவி சம்சல் பீவி, இவர் கடந்த 2016-ல் இறந்துவிட, தனக்குச் சொந்தமான இடத்தில், மனைவிக்கு நினைவிடம் கட்ட கடந்த 2017-ல் அரசின் அனுமதி பெற்று, கட்டடம் ஒன்றைக் கட்டியுள்ளார். தொடர்ந்து, அந்தக் கட்டடத்தின் மேற்பகுதியில் தற்போது கூடுதலாக இரண்டு மனோராக்கள் கட்டியிருக்கிறார்.

``கட்டடம் கட்டுவதாக அனுமதி வாங்கி, அனுமதியின்றி மசூதி கட்டுகின்றனர். இது மசூதியாக மாறும் பட்சத்தில் இரு மதத்தினருக்கும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது” எனக் கூறி இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சிலரும் எதிர்பு தெரிவித்தனர். இதற்கிடையே, இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு, அனுமதி பெற்ற கட்டடத்தைத் தவிர்த்து அனுமதி பெறாமல் கட்டப்படும் மனோராக்களை இடித்து அகற்றிக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். ஆனாலும், இது குறித்து சம்பந்தப்பட்ட முகமது அலிக்கு முறையாக உத்தரவு நகல் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான பாஜக-வினர் அங்கு திரண்டு, அனுமதியின்றி கட்டியிருக்கும் மனோராக்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினர். இதற்கிடையே, தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மீது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார் ஹெச்.ராஜா.

இதையடுத்து, தாமாக முன்வந்த ஊராட்சி மன்றத் தலைவர் `ஏப்ரல், 13-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் மனோராக்களை இடித்து அகற்றுவார்கள். இல்லையென்றால் ஊராட்சி நிர்வாகம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கும் என்று கூறி, அது ஊராட்சி மன்றம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையேதான், கிராம மக்களின் ஒற்றுமைக்குக் களங்கம் ஏற்படுத்தும்விதமாக ஹெச்.ராஜா நடந்துகொண்டதாக ஜமாத் அமைப்பினர் கீரமங்கலம் போலீஸாரிடம் மனு அளித்தனர். முன்னதாக, ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் புகார் கொடுக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேற்பனைக்காட்டில் என்ன நடந்தது என்று களத்தில் இறங்கி விசாரித்தோம்.

சம்பந்தப்பட்ட முகமது அலியிடம் பேசியபோது, ``என் மனைவி சம்சல் பீவியை ரொம்பவே நேசிச்சேன். அவங்களைக் கல்யாணம் செஞ்ச நேரம், உடனே வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைச்சு, அங்கே நல்லா சம்பாரிச்சு, சொத்து நிறைய சேர்த்தேன். ரொம்ப நல்லா வாழ்க்கை போய்க்கிட்டு இருந்துச்சு. இப்போ வயசான காலத்துல நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப ஒத்தாசையா இருந்துக்கிட்டு இருந்தோம். கொஞ்ச வருஷத்துக்கு முன்னால சம்சல் பீவிக்கு நோய் ஏற்பட்டுச்சு. நல்லது, கெட்டதெல்லாம் நானே செஞ்சு பார்த்துக்கிட்டேன். என்னால முடிஞ்ச அளவு வைத்தியம் பார்த்தேன். ஆனாலும், காப்பாத்த முடியலை. 2016-ல தவறிட்டாங்க. தாய்க்கு தாயா, மனைவிக்கு மனைவியா ஆறுதலா இறந்த மனைவியோட நினைவுகளை மறக்க முடியலை. மனைவி நினைவாக ஒரு நினைவிடம் கட்டலாம்னு தோணுச்சு.

முகமது அலி, சம்சல் பீவி
முகமது அலி, சம்சல் பீவி

என்னோட சொத்துகளைப் பிள்ளைகளுக்குப் பிரிச்சிக் கொடுத்தது போக, எனக்குன்னு இருந்த இடத்துல இந்த நினைவிடத்தை உருவாக்குனேன். அதுவும் இந்த இடம் சாதி, மத, பேதம் இல்லாம, எல்லாரும் தங்கும் இடமாகவும், அடைக்கலம் கொடுக்கிற இடமாவும் இருக்கணும்னு நெனச்சேன்.

சாப்பாடில்லாம இருக்கறவங்களுக்கு சாப்பாடு கிடைக்கணும். இலவச மருத்துவ உதவி கிடைக்கிற இடமாக மாத்தணும்னு நெனச்சேன். வாழ்ந்தோம், செத்தோம்னு இருக்காம, நல்லா வாழ்ந்து இப்படி மக்களுக்கு ஒரு நல்லதை செஞ்சுட்டுப் போனோம்னு வரலாறு சொல்லணும். பிள்ளைகளுக்குக்கூட இதுல விருப்பமில்லை. ஆனா, என்னோட மனைவி நினைவா, தாஜ்மஹால் மாதிரி வரணும்னு ரொம்பவே மெனக்கேட்டேன். ஆனாலும், இதைக் கட்டவிடாமல் பலரும் தடுக்குறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு"என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது பற்றிச் சம்பந்தப்பட்ட முகமது அலி தரப்பினரிடம் கேட்டபோது, ``2017-லயே இங்கே மசூதி கட்டுவதாக சிலர் வதந்தி பரப்பினாங்க. மாவட்ட நிர்வாகத்துக்கு மனுக்களையும் அனுப்பினாங்க. அப்போதே, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தாங்க. இங்கு மசூதி கட்டலை, நினைவிடம்தான் கட்டுறோம்னு எழுத்துபூர்மாக முகமது அலி எழுதிக்கொடுத்தார். தொடர்ந்து, கட்டடம் கட்டிக்கொள்ள அனுமதியும் கிடைச்சது. கட்டட அனுமதி பெற்று கட்டடம் கட்டப்பெற்று, எலிவேஷன் வேலை மட்டும்தான் இப்போ நடக்குது. இதற்காகக்கூட 2019-லேயே கூடுதலாக அனுமதி கேட்டு ஒரு மனுவும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கொடுத்தோம். அதை தற்போது வரையிலும் நிலுவையில்தான் வெச்சிருக்காங்க. இது முழுக்க முழுக்க முகமது அலியின் விருப்பத்தின் பேரில், மனைவியின் நினைவாக, பொது சேவைக்காகக் கட்டப்பட்ட கட்டடம். கஜா புயல் நேரத்தில் பலருக்கும் அடைக்கலம் கொடுத்தது இந்தக் கட்டடம். பலருக்கும் இங்கு சாப்பாடு செய்து கொடுத்திருந்தார். ஆனால், இந்து அமைப்பினர் சிலர் பொய்யான அவதூறு பிரசாரத்தைப் பரப்புகின்றனர். முடிந்த பிரச்னையை மீண்டும் கிளப்புகின்றனர்" என்றார்கள்.

சர்ச்சைக்குரிய கட்டடம்
சர்ச்சைக்குரிய கட்டடம்

இதுபற்றி அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்து அமைப்பினரிடம் கேட்டபோது, ``வெறும் கட்டடத்துக்கு மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு ,பள்ளிவாசல் போன்ற அமைப்புடன் கட்டுகின்றனர். விரைவிலேயே இங்கு தொழுகை நடத்துவார்கள். அருகிலேயே இடுகாடு இருக்கிறது. அடுத்தடுத்து நான்கு கோயில்களும் இருக்கின்றன. இந்தக் கட்டடம் அமைந்துள்ள சாலைவழியாக மேள, தாளங்கள் முழங்கச் சென்றுதான் திருவிழாக்கள் நடக்கும். அப்போது, பள்ளிவாசல் தொழுகை நடக்கிறது. இந்த வழியாக செல்லக் கூடாது, திருவிழா நடத்தக் கூடாது என்று அவர்கள் பிரச்னை செய்வார்கள். இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். ஏற்கெனவே, இங்கு மேற்குப் பகுதியில் இருக்கும் மசூதி வழியாகப் போய் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவிட மாட்டார்கள். காலம் காலமாக நாங்கள் நடத்திக்கொண்டிருக்கும் விழாக்களையும் மசூதி வந்த பிறகு நடத்தவிடாமல் செய்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. அதனாலேயேதான் மசூதி கட்ட எதிர்க்கிறோம்" என்கிறார்.

இது பற்றி மேற்பனைக்காடு ஊராட்சிமன்றத் தலைவரிடம் கேட்டபோது, "இது குறித்து முழுமையான விவரங்களை மாவட்ட வருவாய் அலுவலரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். விரைவில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism