Published:Updated:

`தேனியில் கல்வீச்சுக்குள்ளான அரசுப் பேருந்துகள்! - சாலையில் தவித்த பயணிகள்

நேற்று இரவு தேனி மாவட்டம் முழுவதும் 7 அரசுப் பேருந்துகளில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

கல்வீச்சு
கல்வீச்சு

நேற்று இரவு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 7 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

ரோட்டோரம் நின்றுகொண்டிருந்த பயணிகள்
ரோட்டோரம் நின்றுகொண்டிருந்த பயணிகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர்.

சுவர் எழுப்பியவரை கைது செய்ய வேண்டும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சம்பவம் நடந்த இடத்தில் தமிழ்புலிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Govt Bus
Govt Bus

அவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், மருத்துவமனையில் சிலர் போராட்டம் நடத்தினர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் வீட்டு உரிமையாளரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

`சம்பளம்தான் கேட்டேன்; சஸ்பெண்டு செய்துவிட்டார்கள்!’ – தேனி அரசுப் பேருந்து ஓட்டுநர் வேதனை

முன்னதாக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த காவல்துறையைக் கண்டித்து, நேற்று இரவு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தேனி மாவட்டம் போடியில் 3 அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

கல்வீச்சு
கல்வீச்சு

தொடர்ந்து உத்தமபாளையத்தில் ஒரு அரசுப் பேருந்து, கொடுவிலார்பட்டியில் ஒரு அரசுப் பேருந்து, வீரபாண்டியில் ஒரு அரசுப் பேருந்து, லெட்சுமிபுரத்தில் ஒரு அரசுப் பேருந்து என மாவட்டம் முழுவதும் 7 அரசுப் பேருந்துகளில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``அரசுப் பேருந்தில் இரவு நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருப்பவர்கள், பெண்கள், குழந்தைகள் என நிறைய பேர் பேருந்துகளில் இருந்துள்ளனர். வேகமாக வந்துகொண்டிருக்கும் பேருந்தில் திடீரென கற்களை வீசியுள்ளனர். ஓட்டுநரின் திறமையால், பேருந்துகள் பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளது. நடு ரோட்டில், இருட்டில் பயணிகள் அனைவரும் தவித்திருக்கிறார்கள். உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையங்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறை, மாற்றுப் பேருந்து வரவழைத்து பயணிகளை பத்திரமாக அனுப்பிவைத்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என சிலரை சந்தேகத்தில் பேரில் விசாரித்துவருகிறோம். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.” என்றார்.

`17 பேர் உயிரைப் பறித்த சுற்றுச்சுவர்!' - மேட்டுப்பாளையத்தில் ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி

சம்பவ இடத்தில் ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.