Published:Updated:

`ஒரு மாத சம்பளம்; பயணிகளுக்கு இலவச மாஸ்க்!’ - அசத்தும் தேனி அரசுப் பேருந்து நடத்துநர்

இலவச மாஸ்க் கொடுக்கும் நடத்துநர் கருப்பசாமி
இலவச மாஸ்க் கொடுக்கும் நடத்துநர் கருப்பசாமி

அரசுப் பேருந்தில் பயணிப்பவர்கள், மாஸ்க் அணியவில்லையென்றால், அவர்களுக்கு இலவச மாஸ்க் கொடுத்துவருகிறார் அரசுப்பேருந்து நடத்துநர் கருப்பசாமி.

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர், கருப்பசாமி. அரசுப் பேருந்து நடத்துநரான இவர், தற்போது போடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு செல்லும் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். முழுக் கவசஉடை அணிந்துகொண்டு வரும் கருப்பசாமி, தனது பேருந்தில் ஏறும் பயணிகள் மாஸ்க் அணியவில்லையென்றால், அவர்களுக்கு கொரோனா தொற்றுத் நோய் பற்றி எடுத்துக்கூறி, மாஸ்க் அணிவதன் கட்டாயத்தை வலியுறுத்தி, இலவசமாக மாஸ்க் கொடுக்கிறார். அதன்பின்னர்தான் பேருந்தில் ஏற அனுமதிக்கிறார். அது மட்டுமல்லாமல், மாஸ்க் வாங்குவதற்காகத் தனது ஒரு மாத சம்பளத்தை முழுவதுமாக செலவுசெய்துள்ளார்.

இலவச மாஸ்க் கொடுக்கும் நடத்துனர் கருப்பசாமி
இலவச மாஸ்க் கொடுக்கும் நடத்துனர் கருப்பசாமி

அவரிடம் பேசினோம். ”கடந்த 12 ஆண்டுகளாக, அரசு போக்குவரத்துத் துறையில் நடத்துநராகப் பணியாற்றிவருகிறேன். போடியிலிருந்து திண்டுக்கல் செல்லும் பேருந்தில் தற்போது பணிக்குச் செல்கிறேன். போடி பேருந்து நிலையத்தில் எனது பேருந்தில் ஏறும் பணிகள் யாரேனும் மாஸ்க் அணியாமல் இருந்தால், உடனடியாக அவர்களுக்கு இலவச மாஸ்க் கொடுப்பேன். போடியிலிருந்து திண்டுக்கல் வரை, இடையில் எத்தனை பேர் ஏறினாலும் சரி, மாஸ்க் அணியவில்லையென்றால் அவர்களுக்கு மாஸ்க் கொடுத்துவிடுவேன். கூடவே, கொரோனா பற்றிய விழிப்புணர்வும் செய்வேன்.

``குழந்தைகளுக்கு கொரோனா பற்றி தெரியணும்…” - விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையும் தேனி இளைஞர்

பணிக்குக் கிளம்பும்போது, வீட்டிலிருந்து தினமும் 200 மாஸ்க் எடுத்துவருகிறேன். இதற்காக மொத்தம் 2,000 மாஸ்க் வாங்கி வைத்துள்ளேன். இவற்றை வாங்க எனது ஒரு மாத சம்பளமான 27 ஆயிரம் ரூபாயை முழுவதுமாகச் செலவு செய்துவிட்டேன். அப்படியே 200 ரூபாய்க்கு எனக்கு முழுக் கவச உடையும் வாங்கினேன்” என்றவரிடம், ``மொத்த சம்பளத்தையும் செலவு செய்துவிட்டு வீட்டுச் செலவிற்கு என்ன செய்வீர்கள்?" என கேட்டோம்.

நடத்துநர் கருப்பசாமி
நடத்துநர் கருப்பசாமி

“எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்த சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் ஒருநாள், என்னுடைய பிள்ளைகளிடம், ‘பேருந்தில் ஏறும் பலரும் மாஸ்க் அணிவதில்லை. சில வயதானவர்களுக்கு கொரோனா பற்றி தெரியவே இல்லை. அவர்களுக்கு மாஸ்க் கொடுக்கலாம் என நினைக்கிறேன்’ என்று கூறினேன். அதைக் கேட்ட அவர்கள், ’அடுத்த மாதம்கூட கட்டணம் செலுத்திக்கொள்ளலாம்’ எனக் கூறியது மட்டுமல்லாமல், என்னை உற்சாகப்படுத்தினர். சம்பளம் வந்தவுடன் மாஸ்க் வாங்கிவிட்டேன். நேற்றிலிருந்து மாஸ்க் கொடுக்க ஆரம்பித்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார் உற்சாகமான குரலில்.

`திருமண உறவு முறிவுக்குப் பின் ஏற்பட்ட காதல்..' -தேனி இளைஞரால் தாய், மகளுக்கு நேர்ந்த கொடூரம்
அடுத்த கட்டுரைக்கு