Published:Updated:

`சம்பளம்தான் கேட்டேன்; சஸ்பெண்டு செய்துவிட்டார்கள்!’ – தேனி அரசுப் பேருந்து ஓட்டுநர் வேதனை

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

``என்னுடைய ஒரு டியூட்டிக்கு அதிக நேரம் பிடிக்கிறது. அதாவது,சரியாக 9 மணி நேரம் ஆகிறது. அதிகரிக்கும் அந்த 1 மணி நேரத்திற்கான ஊதியம் வேண்டும் எனக் கேட்டேன்!''

பஸ்ஸில் இருந்து வெளியேற்றப்படும் பாலகிருஷ்ணன்
பஸ்ஸில் இருந்து வெளியேற்றப்படும் பாலகிருஷ்ணன் ( வீ.சக்தி அருணகிரி )

வேலை செய்ததற்கான சம்பளம் கேட்டதற்கு, அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம், தேனி அரசுப் பேருந்து ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

பஸ்ஸில் இருந்து வெளியேற்றப்படும் பாலகிருஷ்ணன்
பஸ்ஸில் இருந்து வெளியேற்றப்படும் பாலகிருஷ்ணன்

தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன், கம்பம் டு திண்டுக்கல் வழித்தடத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். வழக்கம்போல, நேற்று காலை கம்பம் பணிமனையிலிருந்து பேருந்தை எடுத்துள்ளார். அவரை சுற்றிவளைத்த போலீஸார், பேருந்தை எடுக்கவிடாமல் தடுத்து, பேருந்திலிருந்து அவரை வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் கம்பம் பணிமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக பாலகிருஷ்ணனிடம் பேசினோம். “கம்பம் டு திண்டுக்கல் வழித்தடத்தில் ஓட்டுநராக இருக்கிறேன். கம்பத்திலிருந்து திண்டுக்கல் சென்றுவிட்டு, சிறிது ஓய்விற்குப் பிறகு திண்டுக்கலில் இருந்து கம்பம் வந்தால் ஒரு டியூட்டி என்பார்கள். இதற்கு 8 மணி நேரம் ஆகும். தற்போது, கம்பத்திலிருந்து திண்டுக்கல் வரையிலான சாலையில், பல்வேறு இடங்களில் வேகத்தடைகளும் பேரிகேடுகளும் அதிகம் வைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுநர் பாலகிருஷ்ணன்
ஓட்டுநர் பாலகிருஷ்ணன்

விபத்து ஏற்படக்கூடாது என அமைக்கப்பட்ட அந்த வேகத்தடைகளிலும் பேரிகேடுகளிலும், வேகத்தைக் குறைத்துச் சென்றால், என்னுடைய ஒரு டியூட்டிக்கு அதிக நேரம் பிடிக்கிறது. அதாவது, 9 மணி நேரம் ஆகிறது. அதிகரிக்கும் அந்த 1 மணி நேரத்திற்கான ஊதியம் வேண்டும் எனக் கேட்டு கடிதம் போட்டேன். ஆனால், சஸ்பெண்டு செய்துவிட்டார்கள்” என்றார்.

அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு வருடம் நான்கு செட் சீருடைகள், அவற்றைத் தைப்பதற்கான கூலி கொடுக்க வேண்டும். ஆனால், அதைக் கொடுக்காத மாவட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகளைக் கண்டித்து, கடந்த சில நாள்களாக சீருடை இல்லாமல், வேறு சட்டை போட்டுக்கொண்டு பேருந்தை இயக்கிவந்தார் பாலகிருஷ்ணன்.

போலீசாரல் தூக்கிவரப்படும் பாலகிருஷ்ணன்
போலீசாரல் தூக்கிவரப்படும் பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன் ஏன் சஸ்பெண்டு செய்யப்பட்டார் என கம்பம் பணிமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``மேலிடத்திற்கு அவர் கடிதம் போட்டதால்தான் பிரச்னை. அதனால், மேலிடத்தில் இருந்து சஸ்பெண்டு ஆர்டர் வந்துவிட்டது. இங்கிருக்கும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” என்றனர்.