Published:Updated:

திடீரென பறந்து வந்த கல்; நொறுங்கிய பேருந்துக் கண்ணாடி! பயணிகளைப் பதற வைத்த புதுக்கோட்டைப் பெண்

பேருந்துக் கண்ணாடிக்குக் கல்வீச்சு
பேருந்துக் கண்ணாடிக்குக் கல்வீச்சு

புதுக்கோட்டை பழைய பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோது, பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை நோக்கி பெண் ஒருவர் கல்லை வீசிவிட்டு சில விநாடிகளில் அங்கிருந்து ஓடிவிட்டார்.

கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் படிப்படியாகச் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுக்கோட்டையிலிருந்து திருச்சி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் 50 சதவிகித பேருந்துகள் 60 சதவிகித பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன.

`பொது போக்குவரத்து, கடைகள், நிறுவனங்களுக்கு அனுமதி!’ - தமிழக அரசு அறிவிப்பு

புதுக்கோட்டைப் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி நோக்கிக் குறைவான பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோது, பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை நோக்கி பெண் ஒருவர் கல்லை வீசிவிட்டு சில விநாடிகளில் அங்கிருந்து ஓடிவிட்டார். கல் விழுந்ததில், முன்பக்கக் கண்ணாடி முழுவதுமாக நொறுங்கியது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பேருந்தை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

குறைவான பயணிகளே பேருந்தில் இருந்ததால், பயணிகளுக்கு ஏதும் பாதிப்பு இல்லை. அனைவரும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். போலீஸார் விசாரணையில், கண்ணாடியை நொறுக்கியது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாள்களாகவே புதுக்கோட்டைச் சாலைகளில் சுற்றி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், சாலையில் செல்லும் பொதுமக்களை வழிமறித்து, கல், கம்புகளைக் காட்டி பயமுறுத்தி வந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

பேருந்து கண்ணாடிக்குக் கல்வீச்சு
பேருந்து கண்ணாடிக்குக் கல்வீச்சு

பல நாள்களுக்குப் பிறகு, பேருந்தைப் பார்த்ததால்தான் மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பேருந்தில் கல்லை வீசியுள்ளார் என்று கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம், அந்தப் பெண்ணை மீட்பதோடு, மனநலச் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். புதுக்கோட்டையில் பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு