Published:Updated:

சென்னை: குறுக்கே வந்த குழந்தை... திடீர் பிரேக்! - கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்த கண்டக்டர்

கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்த கண்டக்டர்
கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்த கண்டக்டர்

சென்னை ஆவடியில், அரசுப் பேருந்தின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் பேருந்துக்குள் நின்றுகொண்டிருந்த கண்டக்டர், நடிகர் வடிவேலு மாதிரி முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியில் விழுந்தார்.

திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலுவும், அவரின் கூட்டாளியும் பேருந்தில் பயணிப்பார்கள். அப்போது பேருந்தில் சீட்கள் காலியாக இருந்தும் நடிகர் வடிவேலு உட்காராமல், கம்பியையும் பிடிக்காமல் ஸ்டைலாக நின்றுகொண்டிருப்பார். நடிகர் வடிவேலுவுடன் வந்தவரிடம் கண்டக்டர் டிக்கெட் கேட்கும்போது, `எங்க அண்ணன் (நடிகர் வடிவேலு) டிக்கெட் எடுப்பார்’ என்று கூறுவார். உடனே கண்டக்டரும் `இவருக்கு நீங்க டிக்கெட் எடுக்குறீங்களா?’ என்று கேட்கும்போது, `இங்கு வந்தா எடுப்போம்...’ என்று வடிவேலு கூறுவார். அப்போது, `ஏன் உங்க அண்ணன் நின்னுக்கிட்டே இருக்காரு... பஸ்ஸுதலதான் சீட் காலியா இருக்குல்ல...' என்று கண்டக்டர் கேட்பார். அதற்கு, `இந்த பஸ் இல்லை... எந்த பஸ்ஸுலயும் எங்க அண்ணன் உட்கார மாட்டார்' என்று வடிவேலுவுடன் வந்தவர் சொல்வார்.

நடிகர் வடிவேல்
நடிகர் வடிவேல்

உடனே கண்டக்டர் விசில் அடிப்பார். டிரைவர் பிரேக் போட்டு பஸ்ஸை நிறுத்துவார். அப்போது நின்றுகொண்டிருந்த வடிவேலு, டைவ் அடித்தபடியே பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியில் போய் விழுவார். அதைப் பார்த்து பேருந்துக்குள் இருப்பவர்கள் மட்டுமல்ல, அந்த காமெடி காட்சியைப் பார்ப்பவர்களுக்கும் சிரிப்பு வரும். அதைப்போல ஒரு நிஐ சம்பவம் சென்னை ஆவடியில், அரசுப் பேருந்தில் நடந்திருக்கிறது.

சென்னை ஆவடியிலிருந்து, பூந்தமல்லிக்கு அரசுச் சிற்றுந்து (மினி பஸ்) சென்றுகொண்டிருந்தது. பஸ்ஸை டிரைவர் சேகர் ஓட்டினார். கண்டக்டர் ஆறுமுகம், பயணிகளுக்கு டிக்கெட்டுகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆவடி காமராஜர் நகர் பகுதியில் பேருந்து சென்றபோது, சாலையின் குறுக்கே குழந்தை ஒன்று ஓடி வருவதை டிரைவர் சேகர் கவனித்திருக்கிறார். குழந்தையின் மீது பேருந்து மோதாமலிருக்க பிரேக்கைப் பிடித்தார். அதனால் பேருந்துக்குள் இருந்தவர்கள் அனைவரும் நிலைகுலைந்தனர். பேருந்தின் முன்பகுதியில் டிக்கெட்டுகளைக் கொடுத்துக்கொண்டிருந்த கண்டக்டர் ஆறுமுகம், நிலைதடுமாறி, நடிகர் வடிவேலு மாதிரி பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தார்.

பேருந்து
பேருந்து
சென்னை: `அரிசி என்ன விலை... என்ன ரகம்?' - நடிகர் வடிவேலு பாணியில் நடந்த நூதனத் திருட்டு

அதை டிரைவரும் பயணிகளும் அதிர்ச்சியோடு பார்த்தனர். பின்னர் கீழே இறங்கிச் சென்று கண்டக்டரை மீட்டனர். கண்ணாடிச் சிதறல்களாலும், கீழே விழுந்ததிலும் கண்டக்டர் ஆறுமுகத்துக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், இந்தச் சம்பவம் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பேருந்தின் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். மாற்றுப் பேருந்து மூலம் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். கண்ணாடி உடைந்த பேருந்து, பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் பஸ் ஊழியர்கள் தரப்பில் புகாரளிக்கப்படவில்லை.

ஏன் புகாரளிக்கவில்லை என போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் கேட்டதற்கு, `சேதமடைந்த பேருந்தின் கண்ணாடியைச் சம்பந்தப்பட்டவர்களே தங்களின் சொந்தச் செலவில் புதிதாக வாங்கி மாற்றிக்கொள்வார்கள். அதனால்தான் புகார் கொடுத்திருக்க மாட்டார்கள்' என்றனர்.

இந்தச் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு