Published:Updated:

சீர்காழி: `அரசு சிமென்ட் கிடைக்கலை..!’ - மத்திய, மாநில அரசுகளின் வீடுகட்டும் திட்டங்கள் பாதிப்பு

வீடு
வீடு

அரசு சார்பில் விநியோகம் செய்யப்படும் ஒரு சிமென்ட் மூட்டையின் விலை ரூ.190. ஆனால், தனியார் கடைகளில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.350 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சீர்காழிப் பகுதியில் அரசு சிமென்ட் கிடைக்காததால், சுமார் 3,000 வீடுகள் கட்டும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு மந்தநிலை தொடர்கிறது.

வீடு
வீடு

நாகை மாவட்டம்,  சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 42 ஊராட்சிகளில், 200 கிராமங்கள் இருக்கின்றன. அனைத்து கிராமங்களிலும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் மற்றும் தமிழக அரசு சார்பில் கட்டித்தரப்படும் பசுமை வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக அரசு சார்பில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பப்படும் சலுகை விலையிலான அரசு  சிமென்ட் மூட்டைகள் நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வீடுகள் கட்டும் பணி அப்படியே நிறுத்தப்பட்டிருக்கிறது. சிமென்ட் கிடைக்காததால் வீடு கட்டிக்கொள்ளும் பயனாளிகள், அவர்களின் வீடுகளைத் தொடர்ந்து கட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரசு சார்பில் விநியோகம் செய்யப்படும் ஒரு சிமென்ட் மூட்டையின் விலை ரூ.190. ஆனால், தனியார் கடைகளில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.350 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிக விலை கொடுத்து தனியாரிடம் சிமென்ட் மூட்டைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. வீடு கட்டிக்கொண்டிருக்கும் பயனாளிகள் கட்டுமானப் பொருள்கள் அதிக விலைக்கு விற்பனையாவதால் திணறிவரும் இந்தச்  சூழ்நிலையில் அரசு வழங்கிவரும் சிமென்ட் மூட்டைகள்  தற்போது நிறுத்தப்பட்டிருப்பது அதிரச்சியடைய வைத்திருக்கிறது. இதனால் கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள சுமார் 3,000 வீடுகள் முழுமையடையாத நிலையில் அரைகுறையாகவே இருக்கின்றன.

சமூக ஆர்வலர் காமராஜ்
சமூக ஆர்வலர் காமராஜ்

இது பற்றி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கைக் கடிதம் எழுதியிருக்கும் சமூக ஆர்வலர் காமராஜிடம் பேசியபோது, ``வீடு கட்டும் பணிகள் குறைந்த விலை சிமென்ட் கிடைக்காததால் பாதியில் நிற்கின்றன. வீடுகள் கட்டிவரும்  ஏழைப் பயனாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, அனைத்து வீடு கட்டும் பயனாளிகளுக்கும்  உடனடியாக சிமென்ட் மூட்டைகளை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மாவட்ட கலெக்டருக்கும்  கோரிக்கை விடுத்திருக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு