Published:Updated:

`அரசு பரிசீலனை செய்யும்..!' -நிவாரணம் குறித்து கடம்பூர் ராஜு சொன்னத் தகவல்

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

”ஊரடங்கு உத்தரவின் போது பணிபுரியும் பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினருக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனித்திற்கு எடுத்துச் செல்வேன். அரசும் இதனை பரிசீலனை செய்யும்” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``உலகத்தில் 186 நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா தொற்று குறைவாக இருந்தாலும், மத்திய அரசு விமானம், ரயில் போக்குவரத்து நிறுத்தம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மருத்துவர்களுடன் உரையாடும் அமைச்சர் கடம்பூர் ராஜு
மருத்துவர்களுடன் உரையாடும் அமைச்சர் கடம்பூர் ராஜு

கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த மருத்துவத்தை விட தனிமைப்படுத்துதல்தான் சிறந்தது என்பதால் நாடளுமன்றம், சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன . மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். மற்ற மாநிங்களைவிட தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தாலும், மாநில அரசும் பல முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 41 பிர்க்காக்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியவர்களை வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவ சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை அடங்கிய குழுவினர் மூலம் 600 குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு

அவர்கள் வெளியே வரக்கூடாது மற்றவர்களைத் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 14 இடங்களில் மகளிர் திட்டத்தின் கீழ் விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நாம் நம்மையும் பாதுகாக்க வேண்டும்; மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று உணர்ந்தால்தான் கொரோனா இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும். 144 தடை உத்தரவினை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகத்தான பணிகளை பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் பணிகளைச் செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு நிலையிலும் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினருக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனித்திற்கு எடுத்துச் செல்வேன். அரசும் இதைப் பரிசீலனை செய்யும்.

சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

செய்தியாளர்கள் ஒத்துழைக்கும்போது அரசும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது. ரூ.1 லட்சமாக இருந்த பத்திரிகையாளர்களின் மருத்துவ நலநிதி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத் தலைநகரத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அரசின் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கான நல வாரியம் விரைவில் செயல்பட உள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு