Published:Updated:

`தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கருணை பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்?!’ - குடும்பத்தினர் வேதனை

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்

`கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும்’ என அரசு அறிவித்திருந்த நிலையில், கிராம உதவியாளர், அலுவலக உதவியாளர், சமையல் உதவியாளர் என ஒப்புக்காக அரசு வேலை வழங்கப்பட்டது’ என்ற குற்றசாட்டு தற்போது எழுந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, ஜெயராஜின் மூத்தமகள் பெர்சிஸுக்கு கடந்த ஜூலை 27-ம் தேதி, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்ணு
மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்ணு

இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்ட அரசுப் பணியிடத்தை மறுபரிசீலனை செய்து, அவரவர் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதை வலியுறுத்தி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் ஆட்சியர் விஷ்ணுவிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Vikatan

இதுகுறித்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், ``தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஆங்காங்கே மக்கள் 100 நாள்கள் பல போரட்டங்களை நடத்தி வந்தனர். இதில், போராட்டத்தின் 100வது நாளான, கடந்த 2018 மே 22-ம் தேதி மக்கள் ஒன்றிணைந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடும் நோக்கிலேயே பேரணியாகச் சென்றோம்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்

ஆனால், திடீரென ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலம் பலர் துப்பாக்கிச்சூட்டிலும், போலீஸாரின் தடியடியிலும் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், காயம் அடைந்தவர்களுக்கும் அரசு இழப்பீடு தொகை வழங்கியதுடன் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. `கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும்’ என அரசு அறிவித்திருந்த நிலையில், கிராம உதவியாளர், அலுவலக உதவியாளர், சமையல் உதவியாளர் என ஒப்புக்காக அரசு வேலை வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஜெயராஜின் மூத்தமகள் பெர்சிஸுக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த, உறுப்புகளை இழந்த, காயம் அடைந்த எங்களைப் போன்றோரின் குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளில் அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. எனவே சாத்தான்குளம் சம்பவத்தில் வழங்கப்பட்ட அரசுப்பணியைப் போலவே, அரசு மறுபரிசீலனை செய்து கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணித்தரத்திற்கு குறையாமல் அரசுப்பணி வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.

மனு அளிக்க வந்த குடும்பத்தினர்
மனு அளிக்க வந்த குடும்பத்தினர்

காயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தொகையே, வலதுகாலை முழுமையாக இழந்த 25 வயது உடைய பிரின்ஸ்டனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்குவதுடன், அவரது மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் ஆட்சியர் விஷ்ணுவிடம் பேசினோம், ``துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர், தங்களுக்கு அளிக்கப்பட்ட அரசுப்பணியை மறுபரிசீலனை செய்து இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர். அவர்களின் மனு அரசின் கவனத்திற்கு அனுப்பப்படும். இதுகுறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு