Published:Updated:

`ஊரடங்கால் ரத்தம் கிடைக்கவில்லை!' -நோன்பு காலத்திலும் அரசு மருத்துவரை நெகிழவைத்த பிரியாணி மாஸ்டர்

ரத்த தானம் செய்தவர் குறித்து அரசு மருத்துவரின்  பதிவு
ரத்த தானம் செய்தவர் குறித்து அரசு மருத்துவரின் பதிவு

சென்னை பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்த பிரியாணி மாஸ்டரை மருத்துவர் அனுரத்னா பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர மருத்துவ சேவை கிடைப்பதில் பல்வேறு சிரமங்களை மக்கள் சந்தித்துவருகின்றனர். ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பதால் ரத்த தான முகாம்களும் நடத்தப்படவில்லை. அதனால் ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது.

மருத்துவர் அனுரத்னா
மருத்துவர் அனுரத்னா
`கிடாக்கறி விருந்து, ரத்த தானம், நலத்திட்ட உதவி' - மதுரையில் அமர்களப்படுத்திய ரஜினி ரசிகர்கள்!

இந்த நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சு.அனுரத்னா, ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக அவர் கடந்த 25-ம் தேதி முகநூலில் தன்னார்வலர்களை ரத்த தானம் செய்ய வரும்படி அழைப்புவிடுத்தார். மொத்தம் 20 பேர் வருவார்கள் என எதிர்பார்த்த மருத்துவருக்கு இன்ப அதிர்ச்சியாக 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். ரத்த தானம் செய்ய வந்தவர்களுக்கு பரிசோதனைக்குப் பிறகு ரத்தம் எடுக்கப்பட்டது. அப்போது ரத்த தானம் செய்ய பொன்னேரியைச் சேர்ந்த பிரியாணி மாஸ்டர் சவாத் அஹமத் வந்திருந்தார்.

அவரின் விவரங்களைப் பார்த்த தலைமை மருத்துவர் அனுரத்னா, `நோன்பு காலத்தில் உங்களால் ரத்த தானம் செய்ய முடியுமா?' என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், என்னால் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். பின்னர் ரத்ததானம் செய்த சவாத் அஹமத் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அன்றைய தினம் இரவு சவாத் அஹமத்தின் செல்போன் நம்பரில் பேசிய மருத்துவர் அனுரத்னா, அவரைப் பாராட்டியுள்ளார். அதோடு தன்னுடைய முகநூலிலும் இதுகுறித்துப் பதிவு செய்துள்ளார்.

பிரியாணி மாஸ்டர் சவாத் அஹமத்
பிரியாணி மாஸ்டர் சவாத் அஹமத்

இதுகுறித்து தலைமை மருத்துவர் அனுரத்னாவிடம் பேசினோம். ``144 தடை உத்தரவு காரணமாக ரத்த தான முகாம்களை நடத்த முடியவில்லை. எங்களுக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுவதால் சிறிய அளவில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் நடத்த ஏற்பாடு செய்தோம். 100 பேர் கலந்துகொண்டார்கள். இக்கட்டான சூழலில் குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரமலான் நோன்பு காலத்திலும் எங்கள் அவசரத் தேவையை உணர்ந்து குருதி கொடை அளித்த தம்பி சவாத் அஹமத்தின் சேவையைப் பாராட்ட நினைத்தேன். அதனால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து பொன்னாடை அணிவித்தேன். பொன்னேரி அரசு மருத்துவமனையில் நடந்த முகாமில் கிடைத்த குருதியை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளேன். தேவைக்கு ஏற்ப அங்கிருந்து பெற்றுக்கொள்வோம்'' என்றார்.

`திருமணமான அன்றே சுயரூபம் தெரிந்துவிட்டது..' - சென்னைக் காவலரால் விபரீத முடிவெடுத்த மனைவி
பாராட்டு சான்றிதழ்
பாராட்டு சான்றிதழ்

பிரியாணி மாஸ்டர் சவாத் அஹமத்திடம் பேசினோம். ``நோன்பு காலத்தில் ரத்ததானம் கொடுத்தால் மயக்கம் வரும் என மருத்துவமனை ஊழியர்கள் கூறினர். அவர்களிடம் ரத்ததானம் செய்தால் எனக்கு எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாது என்றேன். தயக்கத்துடன் என்னை ரத்ததானம் செய்ய அனுமதித்தார்கள். அதன்பிறகு வீட்டுக்கு வந்துவிட்டேன். பல தடவை ரத்ததானம் செய்துள்ளேன். 25-ம் தேதி இரவு எனக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுரத்னா, என்னைப் பாராட்டினார். பின்னர் நேரில் அழைத்து எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரைப் போல அனைத்து அரசு மருத்துவர்களும் செயல்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்றார்.

சவாத் அஹமத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக உள்ளார். அதனால், மனித நேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் புழல் முகமது ஷேக் மற்றும் த.மு.மு.க நிர்வாகிகள் சவாத் அஹமத்துக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு