Published:Updated:

தஞ்சாவூர்: தீ விபத்தில் வீடிழந்த தம்பதி! - புது வெளிச்சம் பாய்ச்சிய அரசு மருத்துவர்

புதிய வீட்டில் டாக்டர் செளந்தரராசன்
புதிய வீட்டில் டாக்டர் செளந்தரராசன்

`புதுசா வீடு கட்டுறதுக்கும் எங்களுக்கு வழியில்லை. மரத்தடி, இரவு நேரத்துல பள்ளிக்கூடம்னு மாறி மாறித் தங்கி நாள்களை நகர்த்தினோம். நிலையை உணர்ந்த டாக்டர் எங்களுக்கு உதவி செஞ்சு நெகிழவெச்சுருக்கார்."

பேராவூரணி அருகே தீ விபத்தில் வீட்டை இழந்து தவித்த தம்பதியருக்கு அரசு டாக்டர் ஒருவர் தனது சொந்தச் செலவில் கூரையிலான வீடு அமைத்துக் கொடுத்துடன், வீட்டுக்குத் தேவையான பொருள்களையும் வாங்கிக்கொடுத்திருக்கிறார். அத்துடன் புதிய மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்து, மின்சார வசதியையும் ஏற்படுத்தி, அந்த தம்பதி வாழ்வில் புது வெளிச்சம் பாய்ச்சிய நெகிழ்ச்சிச் சம்பவம் அறங்கேறியிருக்கிறது.

டாக்டர் செளந்தரராசன்
டாக்டர் செளந்தரராசன்

பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரின் மனைவி கமலம். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு ஒன்றரை வயதில் கனுஷ்கா என்ற மகள் இருக்கிறார். இவர்கள் சிறிய கூரை வீட்டில் வசித்துவந்தனர். கடந்த வாரம் இவர்களின் வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களும் தீக்கிரையாயின. உடனடியாக வீட்டைச் சீரமைக்க முடியாத நிலையில், பாலமுருகனின் பொருளாதாரம் இருந்தது பெரும் துயரம்.

வீடு இல்லாததால், மனைவி, பிள்ளையுடன் மரத்தடியிலும் பள்ளி கட்டடத்திலும் இருந்துவந்தார். இந்தநிலையில், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செளந்தரராசன் அந்தப் குதிக்கு கொரோனா தடுப்புப் பணிக்கு சென்றபோது கமலம், பாலமுருகன் தம்பதியின் நிலையை அறிந்து வேதனையடைந்திருக்கிறார். உடனடியாக அவர்களுக்குத் தனது சொந்தச் செலவில் கூரையிலான வீடு அமைத்துக் கொடுத்ததுடன், வீட்டில் புதிய மின் இணைப்பு கொடுத்து மின்வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

கூரையிலான புது வீடு
கூரையிலான புது வீடு

அத்துடன் வீட்டுக்குத் தேவையான பொருள்களையும் சீர்வரிசையாக எடுத்துச் சென்று, கிரகப்பிரவேசம் நடத்தி அந்தத் தம்பதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். இது குறித்து கமலத்திடம் பேசினோம். ``அன்றாடம் வேலைக்குப் போனாத்தான் எங்க வீட்டுல அடுப்பெரியும் என்கிற நிலைமை. நானும் என் வீட்டுக்காரரும் காதலித்துக் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். அதனால பொறந்த வீட்டு ஆதரவும் எனக்கில்லை. இந்தச் சூழலுல வர்ற வருமானத்தைவெச்சு எங்க ஒத்தப் பொண்ணோட சந்தோஷமா இருந்தோம். பத்து நாளுக்கு முன்னாடி எங்க வீடு திடீர்னு பத்தி எரிஞ்சுது. கண் சிமிட்டுற நேரத்துல என்னோட ஸ்கூல் சர்டிஃபிகேட் உட்பட எல்லாப் பொருளும் எரிஞ்சு சாம்பலாகிடுச்சு.

புதுசா வீடு கட்டுறதுக்கும் எங்களுக்கு வழியில்லை. மரத்தடி, இரவு நேரத்துல பள்ளிக்கூடம்னு மாறி மாறித் தங்கி நாள்களை நகர்த்தினோம். எங்களோட இந்த நிலைமை ஊராட்சி மன்றத் தலைவர் ஈகை செல்வம் மூலமாக டாக்டர் சாருக்குத் தெரியவந்திருக்கு. உடனே எங்களுக்குப் புதிய கூரை வீட்டை அமைத்துக் கொடுத்தார். விளக்கைப் பயன்படுத்துறதால மீண்டும் தீ பிடிக்கறதை தடுக்குறதுக்காக புதுசா கரன்ட் இழுத்துக் கொடுத்து எங்க வாழ்க்கையில வெளிச்சம் பாய்ச்சியிருக்கார்.

தஞ்சாவூர்: கிடைக்காத 'கஜா' புயல்  நிவாரணம்; வீடின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளி!

அதோட மட்டுமில்லாம தாய் வீட்டுச் சீதனமாக பீரோ, அரிவாள்மனை, படி போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள், சமையலுக்குத் தேவையான பொருள்கள், புது டிரெஸ்னு சீராக எடுத்து வந்தார். எங்களை புது டிரெஸ் போடவெச்சு மாலை மாத்தி பால் காய்ச்சவெச்சார். பால் பொங்குறதுபோல மகிழ்ச்சி பொங்கணும்னு வாழ்த்தினார். எனக்குக் கண்ணீர் பொத்துக்கிட்டு வர, பொசுக்கடினு காலுல விழுந்துட்டேன். என்னை உன்னோட அண்ணனா நெனைச்சுக்கம்மா... எப்ப, என்ன உதவினாலும் கேளுமான்னு டாக்டர் சார் சொன்னார். அவருக்கு ரொம்பவே பெரிய மனசு” என்றார்.

டாக்டர் செளந்தரராசனிடம் பேசினோம். ``கொரோனா தடுப்புப் பணிக்காக சென்றபோது வீடு இல்லாமல் தவித்த தம்பதி குறித்துத் தெரியவந்தது. நானும் ஓர் ஏழை குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால், அவர்களின் வலியை என்னால் உணர முடிந்தது. கொரோனா லாக்டௌனால், வீடு கட்டுவதற்கான பொருள்களை அவர்களால் வாங்க முடியாது. அதற்கான பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்.

புது வீட்டில் தம்பதி மற்றும் கிராம மக்கள்
புது வீட்டில் தம்பதி மற்றும் கிராம மக்கள்

மீண்டும் வீடு தீ விபத்தில் பாதிக்கப்படாமல் இருக்க சமையல் கூடத்தித் தனியாகவைத்து கூரை வீட்டை அமைத்தேன். மண்ணெண்ணெயில் எரியும் சிமினி விளக்கைப் பயன்படுத்துவதால் தீ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அத்துடன் கரன்ட் வசதி இல்லாததால் ஏற்படும் துயரையும் சின்ன வயடில் நான் அனுபவித்திருக்கிறேன் என்பதால் புதிதாக மின் இணைப்பு அமைத்து, கரன்ட் வசதி ஏற்படுத்திக் கொடுத்தேன்.

வீட்டுக்குத் தேவையான பொருள்களையும் வாங்கி எடுத்துக்கொண்டு, பலருடன் போய்க் கொடுத்து பால் காய்ச்சச் செய்து குடிபோக வைத்தோம்ம். இதுக்கு ரூ 50,000-க்கு மேல் செலவானது. அது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அவர்கள் முகத்தில் தோன்றிய புது சிரிப்பு எனக்கு பெரிய மனநிறைவைத் தந்தது” என்றார். இதேபோல் கடந்த ஆண்டு தீ விபத்தில் வீட்டை இழந்து தவித்த தம்பதி ஒருவருக்கும் செளந்தரராசன் வீடு கட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது என அப்பகுதியினர் பாராட்டினர்.

அடுத்த கட்டுரைக்கு