Published:Updated:

கர்ப்பிணிகளுக்கு ஆர்கானிக் காய்கறி, பசும்பால், முட்டை! - அசத்தும் ஆரம்ப சுகாதார நிலையம்!

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

`மொத்தம் ரூ. 50 லட்சம் செலவில் இந்தப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்றுள்ளன. இப்போது மருத்துவமனை வளாகம் முழுவதும் மரங்கள் நிறைந்திருக்கின்றன.’

பேராவூரணி அருகே, கஜா புயலில் பாதிப்படைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நன்கொடையாளர்களைக் கொண்டு ரூ. 50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தி அசத்தியிருக்கிறார் டாக்டர் ஒருவர். மேலும், மக்களுக்கு தரமான சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வருவதால் மற்ற அரசு மருத்துவமனைகளுக்கு ரோல் மாடலாகவும் திகழ்ந்து வருகிறது இந்த ஆரம்ப சுகாதார நிலையம்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ளது செருவாவிடுதி கிராமம். இங்கு செயல்பட்டு வருகிறது மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம். 1 ஏக்கர் பரப்பில் காய்கறித் தோட்டம், மூலிகைச் செடிகள் வளர்ப்பு, பசு மாடு, நாட்டுக் கோழிகள் வளர்ப்பு என மருத்துவமனை வளாகத்தை மிகச்சிறந்த வாழ்வியல் மையமாக்கி மக்களை ஈர்த்து வருகிறார் வட்டார மருத்துவர் அலுவலர் சவுந்தரராஜன்.

மேலும், மருத்துவமனையில் பல்வேறு விரிவாக்கப் பணிகளைச் செய்து, இங்கு வருபவர்களுக்குத் தரமான சிகிச்சைகளையும் வழங்கி வருகிறார்.

கடந்த 2018, நவம்பரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயலால் மருத்துவமனை சுற்றுச்சுவர் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. காய்கறித் தோட்டம் முழுவதும் அழிந்தது. இங்கு வளர்க்கப்பட்ட நாட்டுக் கோழிகள் அனைத்தும் உயிரிழந்தன.

கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள்

சோலைவனமாக இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் முற்றிலுமாக சிதைந்துபோனது. அதன் பிறகு, தனியார் கம்பெனிகள் மற்றும் தன்னார்வலர்கள் கொடுத்த நன்கொடையைக் கொண்டு ரூ. 50 லட்சம் மதிப்பில் பல்வேறு புதுப்பித்தல் பணிகளைச் செய்து மீண்டும் மருத்துவமனையைப் புதுப்பித்து பழையமாதிரி மாற்றியிருக்கிறார் சவுந்தரராஜன்.

சிறுவர்கள் விளையாடுவதற்கு பூங்கா, கர்ப்பிணி பெண்களுக்கான நடைபாதை, நவீன மின் பாதை எனப் பல்வேறு புதுமைகளையும் செய்து அசத்தியிருக்கிறார்.

இது குறித்து டாக்டர் சவுந்தரராஜனிடம் பேசினோம். "ஒரு நோய் குணமாக வேண்டும் என்றால் முறையான சிகிச்சை இருந்தால் மட்டும் போதாது. அந்த இடம் தூய்மையாக இருக்க வேண்டும். அதனால் எங்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டு பசுமையான சோலைபோல் உருவாக்கியிருந்தோம்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

அத்துடன் கிராமப்புறங்களில் பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு இருக்காது. மேலும், அவர்களால் சத்துணவும் சாப்பிட முடியாது. இதனால் இப்பகுதி கர்ப்பிணிப் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பர். அந்தச் சூழலை மாற்ற மருத்துவமனைக்குள்ளேயே காய்கறித் தோட்டம் அமைத்தோம். காய்கறிகளை அறுவடை செய்து கர்ப்பிணி பெண்களின் வீடு தேடி சென்று கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வந்தோம்.

மேலும், பசு மாடுகள் மூலம் பால் எடுத்து அதையும் அவர்களுக்கு வழங்குவோம். நாட்டுக் கோழிகள் வளர்த்து அதில் வரும் முட்டைகளும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பெண்கள் மற்றும் பிறக்கும் குழந்தைகள் ரத்தசோகை இல்லாமல் ஆரோக்கியமாகக் காணப்படுகின்றனர். இந்தநிலையில் வீசிய கஜா புயல் மருத்துவமனையையே கலைத்து போட்டுவிட்டது.

டாக்டர் சவுந்தரராஜன்
டாக்டர் சவுந்தரராஜன்

புயல் நேரத்தில் மின் கம்பங்கள் கட்டடங்கள் மேல் விழுந்ததில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனை வளாகத்துக்குள் மீண்டும் மின்கம்பங்கள் வரக்கூடாது என்று திட்டமிட்டேன். அதனால் பூமிக்கடியில் குழி எடுத்து தரை வழியாக அனைத்துப் பகுதிகளுக்கும் மின்பாதை அமைத்துள்ளோம்.

இதற்காக நவீன முறையில் மின்கட்டுப்பாட்டு அறையும் அமைக்கபட்டுள்ளது. மொத்தம் ரூ. 50 லட்சம் செலவில் இந்தப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்றுள்ளன. இப்போது மருத்துவமனை வளாகம் முழுவதும் மரங்கள் நிறைந்திருக்கின்றன. இந்தப் பணிகளுக்கு துணை இயக்குநர் ரவீந்திரன் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனாலேயே இது சாத்தியமானது" என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு