Published:Updated:

மதுரை: அரசு நிலம்; ஆதி திராவிடர் மயானம் ஆக்கிரமிப்பு புகார் - உண்மை என்ன?!

பிச்சை

முதலமைச்சர், கலெக்டருக்கு புகார் அனுப்பினால் அதை அதிகாரிகள் துணையுடன் விஷயத்தை முடித்து விடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஆர்.டி.ஐ மூலம் இந்த நிலம் குறித்து கேட்டற்கு நீர்ப்பிடிப்பு பகுதி என்று கலெக்டர் பதில் அளித்துள்ளார்.

மதுரை: அரசு நிலம்; ஆதி திராவிடர் மயானம் ஆக்கிரமிப்பு புகார் - உண்மை என்ன?!

முதலமைச்சர், கலெக்டருக்கு புகார் அனுப்பினால் அதை அதிகாரிகள் துணையுடன் விஷயத்தை முடித்து விடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஆர்.டி.ஐ மூலம் இந்த நிலம் குறித்து கேட்டற்கு நீர்ப்பிடிப்பு பகுதி என்று கலெக்டர் பதில் அளித்துள்ளார்.

Published:Updated:
பிச்சை

``அதிகாரிங்க உதவியோடு ஆக்கிரமிக்கப்பட்ட எங்க மக்களின் மயான நிலத்தையும், அரசுக்கு சொந்தமான நீர் நிலைகளையும் மீட்க 20 வருஷமா போராடிக்கிட்டிருக்கேன், இன்னும் தீர்வு கிடைக்கல" என்று ஜூ.வி அலுவலகத்துக்கு போன் மூலம் புகார் செய்த பிச்சை என்பவரை சந்திக்க மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள செம்மினிப்பட்டிக்கு சென்றோம்.

அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுகளுடன் பிச்சை
அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுகளுடன் பிச்சை

``அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொருளாளாரா இருக்கேன். இந்த ஆக்கிரமிப்பு சம்பந்தமா கொடுக்காத மனு இல்லை, நடத்தாத போராட்டமில்லை. ஒரு கட்டத்தில் போராடிய ஊர்காரங்க பயந்துக்கிட்டு பின் வாங்கிட்டாங்க. மிரட்டலையும், பொய் வழக்குகளையும் சந்தித்தாலும் ஆக்கிரமிப்ப அகற்றனும்னு தாசில்தார்லருந்து முதலமைச்சர் வரை மனு கொடுத்து தனி ஆளா விடாம போராடிட்டிருக்கேன்" என்று சொன்ன பிச்சை, அனுப்பிய மனுக்களின் நகல்களை நம்மிடம் காட்டியபடி தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"செம்மினிப்பட்டியில அதிகமா பட்டியல் சமூக மக்கள் வசிக்கிறோம். குட்லாடம்பட்டி அருவிலருந்து வர்ற தண்ணீர் எங்க ஊரில் பல ஏக்கரில் கண்மாய், குளம், ஓடைன்னு நிறைஞ்சிருக்கும். இந்த நிலம் பல ஆண்டுகளா சர்வே நம்பர் 692-ல் உட்பிரிவு 692/1 மற்றும் 692/2 களில் அரசாங்கத்துக்கு சொந்தமானதா இருந்து வருது. அதுல ஊராட்சி ரோடும், ஆதி திராவிடர் சுடுகாடும் உள்ளது. ஆனா, அதை சிலபேர் ஆக்கிரமிப்பு செஞ்சு போலி பட்டா போட்டு கோபால்ங்கிறவரு அனுபவத்துக்கு கொண்டு வந்துட்டாங்க. அதை இப்ப இன்னொரு ஆள்கிட்டே விக்கப் போறாரு. இந்த பகுதியில் ஆத்து மணலும், சவுடு மணலும் நிறைஞ்சு இருக்கிறதால சென்டுக்கு ஒரு லட்சம் வரை விலை போகுது. பட்டா மாத்தினது தெரிஞ்சதிலிருந்து புகார் கொடுத்துட்டு வர்றேன்.

பட்டியல் சமூகத்தினரின் மயானம்
பட்டியல் சமூகத்தினரின் மயானம்

வாடிப்பட்டி தாலுகாவுக்கு வர்ற வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுக்கிறதே இல்லை. புகார் மனுவை விசாரிக்க சொல்லி உயரதிகாரிங்க உத்தரவிட்டாலும், பொய்ப் புகார்னு பிரச்சினையை முடிச்சிடுறாங்க. அரசாங்கத்துக்கு சொந்தமான நீர்பிடிப்பு நிலத்தையும், சுடுகாட்டுக்கு சொந்தமான நிலத்தையும் இவர் எப்படி விக்கலாம்.? அதுமட்டுமில்லாம அனுமதியின்றி சவுடு மண்ணு எடுத்து செங்கல் சூளைக்கு கொண்டு போனாரு. இதனால ஆக்கிரமிப்பு போக எஞ்சி நிக்குற எங்க சுடுகாட்டுப்பகுதியில பெரும்பள்ளம் உருவாயிடுச்சு. மணல் திருட்டு நடப்பது பத்தி பல புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. சரி, கடந்த ஆட்சியிலதான் நடவடிக்கை எடுக்கல. இப்ப வந்த ஆட்சியிலாவது எடுப்பாங்கன்னு பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுது. தொடர்ந்து இந்த பிரச்சனையை எழுப்புறதால பலமுறை மிரட்டியிருக்காங்க. ஊர்காரங்களையே எனக்கு எதிரா திருப்பிட்டாங்க. இப்பக்கூட இந்த முறைகேட்டை கண்டிச்சு போஸ்டர் போட்டதுக்கு வி.ஏ.ஓ மூலமா போலிசுல கேஸ் போட வச்சுட்டாங்க." என்றவர், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியை நம்மிடம் காண்பித்தார்.

இது குறித்து ஊர்காரர்கள் சிலரிடம் கேட்டதற்கு பதில் சொல்லாமல் கடந்து சென்றார்கள்.

குற்றச்சாட்டு குறித்து செங்கல் சூளை நடத்தும் கோபாலிடம் கேட்டேன், "நான் எந்த இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ குடும்பத்தினரிடமிருந்து விலை கொடுத்து வாங்கித்தான் பயன்படுத்தி வருகிறேன். என் பெயருக்கு பட்டாவும் மாறிவிட்டது. வில்லங்கமான சொத்து என்றால் பட்டா கொடுப்பார்களா? ஆனால், இந்த பிச்சை தேவையில்லாமல் புகார் அனுப்பி வருகிறார். சுடுகாடும் என் நிலத்துக்குள்தான் அமைத்திருக்கிறார்கள். ஆனாலும் பிரச்சனை வரக்கூடாது என்று வேலி போட்டு கொடுத்தேன். இது ஊர் மக்களுக்கு தெரியும். இவர் கொடுத்த புகார் அடிப்படையில் அதிகாரிகள் வந்து நிலத்தை அளந்து பார்த்து பிரச்சனை ஏதுமில்லை என்று கூறிச்சென்றாலும் இவர் விடாமல் புகார் அனுப்புகிறார். மணல் எடுப்பதாக சொன்னது உண்மைதான். அதற்காக எனக்கு அபராதம் போட்டார்கள். அதன் பின்பு எடுப்பதில்லை." என்றார்.

கலெக்டர் அனீஸ் சேகர்
கலெக்டர் அனீஸ் சேகர்

இந்தப் புகார் குறித்து மதுரை கலெக்டர் அனீஸ் சேகர் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் உடனே விசாரிப்பதாக கூறி வாடிப்பட்டி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

விசாரணை நடத்தி முடித்துள்ள வாடிப்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணனிடம் கேட்டோம், ''ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் பிச்சை கூறிய புகாரில் எந்த உண்மையும் இல்லை. அது அரசுப் புறம்போக்கு நிலம் இல்லை. அவர் காட்டும் ஆவணம் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் உள்ளது. அதில் அனைத்து நிலங்களும் அரசாங்கத்தின் பெயரில்தான் இருக்கும். அதற்குப்பின் பாப்பாத்தியம்மாள் என்பவர் பெயரில் பட்டா இருந்து வருகிறது. எஸ்.எல்.ஆர்-லயும், 86-ல கொண்டுவந்த யூ.டி.ஆர்-லயும் அது பட்டா நிலமாத்தான் இருக்கு. சுடுகாட்டு நிலம் ஆக்கிரமிப்புன்னு சொல்ல முடியாது. ஆரம்பகாலத்துல அந்த நிலத்துக்காரங்கதான் சுடுகாட்டுக்கு நிலம் கொடுத்திருக்காங்க. அரசாங்கம் நிலம் ஒதுக்கியிருந்தா எங்க ரிகார்டுல மயானம்னு காட்டியிருக்கும். அதுமாதிரி இது நீர் பிடிப்பு பகுதியும் கிடையாது. பிச்சையும் அவர் புகார் சொல்ற கோபாலும் ஆரம்பத்துல நெருக்கமா இருந்திருக்காங்க. பின்னால அவங்களுக்குள்ள பிரச்சனை ஆகிருக்கு. அதன் விளைவுதான் இந்த பெட்டிஷன்லாம். இதுல ஊர் பிரச்சனை ஏதுமில்லை. தனிப்பட்ட பிரச்சனையை ஊர் பிரச்சனையா மாற்றப் பார்க்கிறார். தொடர்ந்து பெட்டிஷன் போடுறதுதான் அவர் வேலையா இருக்கு. இது மட்டுமல்ல, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் அப்பகுதி வி.ஏ.ஓவை இழிவுபடுத்தி போஸ்டர் ஓட்டியற்காக பிச்சை மேல வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கு. இது குறித்து முறையாக விசாரித்த கலெக்டரிடம் அறிக்கை அளித்துவிட்டோம். புகார் கூறிய பிச்சைக்கும் பதில் அனுப்பிட்டோம்.'' என்றார்.

பிச்சை
பிச்சை

தனிப்பட்ட பிரச்சனைக்காக ஆதாரம் இல்லாமல் புகார் கூறுவதாக சொல்கிறார்களே என்று பிச்சையிடம் மீண்டும் விளக்கம் கேட்டோம், "பொய்யாக புகார் செய்யவில்லை. ஆரம்பத்திலிருந்தே அதிகாரிகள் துணையுடன் இந்த நில மோசடி நடந்துள்ளது. முதலமைச்சர், கலெக்டருக்கு புகார் அனுப்பினால் அதை அதிகாரிகள் துணையுடன் விஷயத்தை முடித்து விடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஆர்.டி.ஐ மூலம் இந்த நிலம் குறித்து கேட்டற்கு நீர்ப்பிடிப்பு பகுதி என்று கலெக்டர் பதில் அளித்துள்ளார். அது பொய்யா? இதற்காக தனி விசாரணைக் குழுவை கலெக்டர் நியமித்து இந்த நில மோசடியை விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரிய வரும் என்னால் நீதிமன்றம் செல்லும் அளவுக்கு வசதியில்லை. அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.


கலெக்டர், சிறப்பு விசாரணைக் குழு அமைத்தால் இந்த பிரச்சனையில் உண்மை தெரிய வரும் என்கிறார்கள் அப்பகுதியை சேர்ந்த பொதுவானவர்கள்.