Election bannerElection banner
Published:Updated:

`நிவாரணம் வழங்கும்போது தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டியவை!’ - மருத்துவரின் அறிவுறுத்தல்

தமிழக அரசு - தலைமைச் செயலகம்
தமிழக அரசு - தலைமைச் செயலகம்

`ரேஷன் கடைகளில், பொருள்களை வழங்கும்போது போலீஸ் பாதுகாப்புடன் மக்களை இடைவெளி விட்டு நிற்க வைத்து வழங்க வேண்டும்.'

சீனாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மத்திய அரசு 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. மாநிலங்களும் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக, எல்லைகளை மூடிவிட்டன. இதனால், அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த அசாதாரணமான சூழலால், கட்டடத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தமிழக அரசு நிவாரண உதவியை அறிவித்துள்ளது. அதில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 1,000 ரூபாயும், ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்றவற்றை விலையில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு 2,000 ரூபாயும், ஆட்டோ ஓட்டுநர்கள் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் நிவாரண உதவியை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த நிவாரண உதவியை எப்படி வழங்கப்போகிறது தமிழக அரசு என்ற கேள்வி எழுகிறது.

பொருள்களை வாங்க, ரேஷன் கடைகளில் கூடினால் நோய்த் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

இதுகுறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். ``நிவாரண உதவியை அறிவித்துள்ள தமிழக அரசுக்கு எனது பாராட்டுகள். அதேநேரத்தில் இந்தப் பொருள்களை கூட்டத்தைக் கூட்டாமல், எப்படி வழங்கப்போகிறது என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. குறிப்பாக, இந்தப் பொருள்களை வீட்டிற்கே கொண்டு வழங்கக்கூடிய அளவில் நம்மிடம் போதிய பணியாட்கள் இல்லை. அதனால், தமிழக அரசால் அதனை செய்ய முடியாது.

அதனால் நிவாரணப் பொருள்களை மக்களுக்கு வழங்கும்போது திட்டமிட்டு தமிழக அரசு வழங்க வேண்டும். குறிப்பாக, கிராமப்புறங்களில், உள்ள ரேஷன் கடைகளில், பொருள்களை வழங்கும்போது, போலீஸ் பாதுகாப்புடன், மக்களை இடைவெளி விட்டு நிற்க வைத்து வழங்க வேண்டும்.

ரேஷன் கடை
ரேஷன் கடை

அதே போன்று நகர்ப்புறங்களில், மண்டலம் மண்டலமாகப் பொருள்களை வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கேரளாவில் ஒரு மீட்டர் தொலைவில் நின்று பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள். அதே போன்ற முறையையும் பயன்படுத்தலாம். வரிசையில் கூட்டமாக நின்று வாங்கினால், உறுதியாக நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது" என்று எச்சரிக்கை விடுத்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு