சீர்காழி அருகே நகராட்சி தொடக்கப் பள்ளியில் பயிலும் 15 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 17 மாணவ, மாணவியர் பயின்று வருகிறார்கள். மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (18.07.2022) மதியம் 12 மணியளவில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தோட்டமானியம் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவிகள் பவதாரணி, யாழினி, கனிஷ்கா, அனுஷ்கா ஆகியோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பள்ளியில் பயின்ற 15 மாணவர்களையும், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பெற்றோர்கள் ஏராளமானோர் சீர்காழி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இது குறித்த தகவலறிந்த சீர்காழி ஒன்றியக் குழுத் தலைவர் கமலஜோதி தேவேந்திரன், நகர் மன்றத் தலைவர் துர்கா ராஜசேகரன், துணைத் தலைவர் சுப்பராயன், ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களை கேட்டுக் கொண்டனர். அசம்பாவிதம் ஏற்படாத வகையில் சீர்காழி டி.எஸ்.பி லாமேக் தலைமையில் ஏராளமான போலீஸார் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு உணவில் குறைபாடா அல்லது குடிநீரில் குறைபாடு உள்ளதா என பல்வேறு கோணங்களில் நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்தச் சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.