Published:Updated:

`எங்க பிள்ளைகள் பசியோட இருக்கக்கூடாது!' -185 குடும்பத்துக்கு நிவாரணம் அளித்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

நிவாரண தொகுப்பு பெறும் மாணவி
நிவாரண தொகுப்பு பெறும் மாணவி

விருதுநகரில் ஊரடங்கால் பெற்றோர்களுக்கு வேலையில்லாமல் வறுமையில் வாடிவரும் தங்கள் பள்ளியில் படிக்கும் 185 மாணவர்களின் குடும்பத்துக்கு தங்களது சம்பளப் பணத்திலிருந்து நிவாரணப் பொருள்கள் வழங்கியுள்ளனர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.

கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தால் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மூன்றாவது முறையாக வரும் 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளனர். கடந்த ஒன்றரை மாதமாக அனைத்து தொழில்களும் முடங்கியது.

சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்
சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்

இந்த நிலையில், 50 சதவிகித தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகளில் உற்பத்தியைத் துவக்கலாம் என அரசு அளித்த அனுமதியின்படி பல தொழில்கள் இயங்கி வருகின்றன. 50 சதவிகித தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் தொடர் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசியல் கட்சியினர், தன்னார்வ தொண்டு நிறுவங்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகில் உள்ள வெள்ளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்பத்துக்கும் ஆசிரியர்கள், தங்கள் சம்பளப் பணத்திலிருந்து நிவாரண தொகுப்பு வழங்கியுள்ளனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்புச்செல்வனிடம் பேசினோம், ``எங்க பள்ளியில் 91 மாணவர்கள், 94 மாணவிகள் என மொத்தம் 185 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

நிவாரண தொகுப்பு பெறும் மாணவர்
நிவாரண தொகுப்பு பெறும் மாணவர்

இவர்களின் பெற்றோர்கள் பட்டாசு கம்பெனியில்தான் வேலை பார்த்து வருகிறார்கள். பெரும்பாலும் அம்மா, அப்பா ரெண்டு பேருமே வேலைக்குச் சென்றுவிடுவதால் மாணவர்களும் பள்ளி நாள்களில் தினமும் பள்ளி துவங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கே முன்பே பள்ளிகூடத்துக்கு வந்துவிடுவார்கள். இதனாலேயே, நாங்களும் பள்ளிக்கு சீக்கிரம் வந்துடுவோம். மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து பள்ளிக்கு வருவார்கள். ஒருநாள் வேலைக்குப் போகாட்டாலும் பிழைப்பு நடத்த முடியாது என்பதுதான் மாணவர்களின் குடும்பநிலை.

இதில், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், பட்டாசு ஆலையில் எதிர்பாராத விபத்தில் உறுப்புகள் இழந்து வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளும் உண்டு. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 185 மாணவர்களின் குடும்பங்களுக்கும் உதவிட, 6 ஆசிரியர்களும் பேசி முடிவெடுத்தோம். 5 கிலோ அரிசி, மஞ்சள்தூள், மல்லித்தூள், வத்தல்தூள், கடுகு, சீரகம், புளி உள்ளிட்ட 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய ரூ.500 மதிப்புள்ள தொகுப்பு பைகளை வழங்கியுள்ளோம். எல்லா மாணவர்களின் வீடுகளுக்கும் நேரடியாகவே போயி டோக்கன் கொடுத்து எந்த நேரத்தில் வர வேண்டும் எனவும் சொன்னோம்.

சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்
சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்

1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களில் 30 நிமிட இடைவெளியில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களையும், பெற்றோரில் ஒருவரை அழைத்து வரச் சொல்லி மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து நிவாரண தொகுப்புகளை வழங்கினோம். பெற்ற பிள்ளைகளையும் எங்களிடம் படிக்கும் பிள்ளைகளையும் எப்பவுமே நாங்க வேறுவேறாக நினைச்சதில்லை. ஊரடங்கால் பெற்றோர்களுக்கு வேலைவாய்ப்பில்லாததால் வறுமையில் தவிக்கும் எங்க பிள்ளைகள் பசியோட இருக்கக் கூடாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு