Published:Updated:

`எங்களுக்குப் போதும்.. மத்தவங்களுக்கு உதவுங்க..!' -மனிதம் உணர்த்திய பழங்குடி மக்கள்

பழங்குடி மக்கள்
பழங்குடி மக்கள்

நாமெல்லாம் வீட்டில் அடைஞ்சு கிடப்பதை சிரமமாக நினைக்கிறோம். ஆனா, சாப்பாட்டுக்கு கஷ்டப்படுற மக்களோட நிலையெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வீட்டுகுள் அடைந்துகிடக்கும் மன அழுத்தம் ஒருபுறம், கையில் பணம் இல்லாததால் பசியின் கொடுமை மற்றொருபுறம் என மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள். இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. கொரோனாவின் பரவலைத் தடுக்க ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு, மக்கள் இந்தச் சூழலை சாமாளிக்க ஏதுவாக, ஒரு அடையாள அட்டைக்கு 20 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய், ஒரு கிலோ சீனி, ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் பணத்தை வழங்குவதாக அறிவித்தது.

மளிகைப் பொருள்கள்
மளிகைப் பொருள்கள்

அரசு அறிவித்த சலுகைகளை அடையாள அட்டை இல்லாததால் பல பழங்குடியின மக்கள், இருளர் இனமக்கள் பெற இயலாத சூழல் நிலவியது. இது குறித்து பலரும் விவாதிக்கவே, அடையாள அட்டை இல்லாத மக்களுக்கும் அரசு நிதியுதவியை வழங்க நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அரசின் சலுகைகள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்தே பழங்குடி மக்களுக்கு சென்றடைந்துள்ளது. அதுவும் போதுமானதாக இல்லை என்பதே அவர்களின் மனக்குறையாக இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் பகுதியில் உள்ள ஆசிரியர்கள் சிலர் ஒன்றாக இணைந்து, தாங்கள் பணிபுரியும் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு உதவ பழைய மாணவர்களுடன் இணைந்து எடுத்த நடவடிக்கை, பழங்குடி மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

இதுகுறித்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒருங்கிணைத்த, கோனேரிக்குப்பம் ஆசிரியர் ஆரோக்கிய ராஜிடம் பேசினோம். "ஒலக்கூர் பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம். மாணவர்களை தொடர்ச்சியாக பள்ளிக்கு வரவழைப்பதே எங்களுக்குப் பெரிய சவாலானதுதான். அதனால் அவர்களுடன் நெருங்கிப்பழகி, அவர்களுள் ஒருவராகவே எங்களை இணைச்சுக்கிட்டோம். அவங்களோட நெருங்கிப் பழக ஆரம்பிச்ச போதுதான் அவர்களுக்கான சவால் என்ன, தினமும் என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் எனப் புரிஞ்சுது.

பழங்குடி மக்கள்
பழங்குடி மக்கள்

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனே , 'தம்பி... வயித்துப்பொழப்புக்கு என்ன பண்றதுனு தெரியாம இருக்கோம்'னு போன் பண்ணினார்கள். நாமெல்லாம் வீட்டில் அடைஞ்சுகிடப்பதை சிரமமாக நினைக்கிறோம். ஆனா, சாப்பாட்டுக்கு கஷ்டப்படுற மக்களோட நிலையெல்லாம் வார்த்தைகளில் சொல்லிற முடியாது. என்னைப்பார்ததும் ஓடிவந்து கட்டிப்புடிச்சு அழுதாங்க. ஆரம்பத்தில் என்னால முடிஞ்ச அளவு பணம் கொடுத்து 21 குடும்பத்திற்கு அரிசி, மளிகைப்பொருள்களை வாங்கிக்கொடுத்தேன். ஆனா, அது ரெண்டு நாளைக்குத்தான் போதுமானதாக இருக்கும்னு நல்லா தெரியும். அதனால ஆசிரிய நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து மற்றவர்களிடம் உதவிகள் கேட்க ஆரம்பிச்சோம்.

மக்களோட தேவைகளை சமூக வலைதளங்களில் அப்லோட் பண்ணோம். எங்கள் பள்ளிக்கு ஏற்கெனவே உதவிய அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஜப்பான் வாழ் இந்தியர்கள் உதவ முன்வந்தாங்க. இவர்ளுடன் 'நமது கிராமம், நமது கடமை' குழுவும் பழைய மாணவர்கள் சங்கம்மும் கைகொடுக்க, 35 பழங்குடி, இருளர் குடும்பத்திற்கும் 25 கிலோ அரிசி, 25 வகையான மளிகைப்பொருள்கள், காய்கறிகள், மாஸ்க்குகள் வாங்கிக் கொடுத்தோம். வாங்கிய ஒவ்வொரு பொருளுக்குமான பில்லை உடனே எல்லோருக்கும் பகிர்ந்ததால், பலரும் உதவ முன்வந்தாங்க. ஆசிரியர்கள் சிலர் ஒன்றாக இணைந்து சில கிராமங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கோம். இந்தச் சூழலில், பண உதவியைவிட உயிரைப் பணயம்வைத்து வெளியிலிருந்து பொருள்களை வாங்கி, மக்களுக்குக் கொண்டு சேர்த்த ஒவ்வொருவரும்தான் பாராட்டப் பட வேண்டியவர்கள்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

நாங்கள் வாங்கிக்கொடுத்த பொருள்கள்களை சந்தோஷமா வாங்கிக்கிட்டாங்க. யாருமே கூடுதலா வேணும்னு கேட்கல. தேவையில்லாத பொருளை திருப்பிக்கொடுத்து, மத்தவங்களுக்கு உதவுங்கன்னு சொன்னாங்க. கொரோனா, மனித நேயத்திற்கு உயிர் கொடுத்துருக்குனுதான் சொல்லணும். எப்போ எந்த உதவி வேணும்னாலும் போன் பண்ணுங்கன்னு நம்பரும் கொடுத்துட்டு வந்திருக்கிறோம் .ஊரடங்கு நாளில் நம்மால் எல்லா மக்களுக்கும் தேடிச்சென்று உதவி செய்ய முடியாது. ஆனாலும் உங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள், பசியை மனிதத்தால் விரட்டுவோம்" என்கிறார்.

பசியை வெல்வோம்!

அடுத்த கட்டுரைக்கு